சொல்லித்தான் ஆகவேண்டும்!… அரசியல் பத்தித்தொடர்… 35 … தம்பியப்பா கோபாலகிருஷ்ணன்

எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே!
கூட்டுக்கு அங்கலாய்க்கும் கூடிழந்த
போலித் தமிழ்த் தேசியக் கட்சிகள்.
இலங்கையின் கடந்த பாராளுமன்றத் தேர்தல் முடிந்த கையோடு தேர்தலில் தமிழ் மக்களிடம் வாங்கிய ‘அடி’, ஐக்கியம் பற்றிய ‘அருட்டுணர்வை’த் தமிழ்த் தேசியக் கட்சிகளிடையே(?) ஏற்படுத்தியுள்ளதை அவதானிக்கமுடிகிறது.
ஆட்சிக்கு வந்துள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கூறிய உத்தேச புதிய அரசியலமைப்பு விடயமாக -இனப்பிரச்சினைக்கான தீர்வை முன்பு தமிழ் மக்கள் பேரவை முன்மொழிந்த ஆலோசனைகளின் அடிப்படையில் (சமஷ்டி) ஒற்றுமையாக – முன்வைக்கும் முயற்சியில் ஈடுபடுவதாகக் கூறி அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர் (?) சிறிதரன் பா. உ. மற்றும் தமிழீழ விடுதலை இயக்கத் (ரெலோ) தலைவர் செல்வம் அடைக்கலநாதன் பா.உ. ஆகியோரைச் சந்தித்துப் பேசினார். ஆனால் அப்பேச்சுவார்த்தை பிசுபிசுத்துப் போய்விட்டது. மட்டுமல்லாமல் அரசாங்கமும் புதிய அரசியலமைப்பு விவகாரத்தை மூன்று ஆண்டுகளுக்குத் தள்ளிப் போட்டும்விட்டது.
கடந்த தேர்தலில் சுமந்திரன் தோல்வியுற்ற நிலையில் தமிழர்களுடைய அரசியல் பொது வெளியில் சுமந்திரன் பிடித்து வைத்திருந்த இடத்தை எதிர்காலத்தில் தான் பிடித்து வைத்திருக்கலாம் என்ற எண்ணத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேற்கொண்ட ‘முஸ்தீபு’தான் இது.
உள்ளூராட்சி அதிகார சபைகளின் தேர்தல் சம்பந்தமாக அரச அறிவிப்பு வந்ததும் மீண்டும் ‘ஐக்கியம்’ குறித்த ‘அருட்டுணர்வு’ ஆரம்பித்துள்ளது.
தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி வி கே சிவஞானம் தமிழரசுக் கட்சியுடன் வந்து இணைந்துகொள்ளும்படி ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியினருக்கு அழைப்பு விடுப்பதும் அதற்கு ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் சில பங்காளிக் கட்சித் தலைவர்கள் (சித்தார்த்தன- புளொட், அடைக்கலநாதன் – ரெலோ) தமிழரசுக் கட்சியைத் தங்களோடு வந்து இணைந்து கொள்ளும்படி மாறி அழைப்பு விடுவதுமான ஒரு வகையான ‘பந்தடித்தல்’ விளையாட்டை நடாத்திக் கொண்டிருக்கிறார்கள்.
சமகாலத்தில் ஏற்கெனவே தன்னை ஐந்து கட்சிகளின் கூட்டாகக் காட்டிய ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி தற்போது இன்னும் நான்கு கட்சிகளைத் தேடிப்பிடித்துத் தன்னோடு சேர்த்துத் தன்னை ஒன்பது கட்சிகளின் கூட்டாகத் – தமிழ் மக்களின் ஒற்றுமை அணியாக உருப்பெருக்கிக் காட்டும் அரசியல் சித்து விளையாட்டிலும் ஈடுபட்டிருக்கிறது.
மொத்தத்தில் இந்த ‘ஐக்கிய’ மற்றும் ‘கூட்டு’ முயற்சிகள் எல்லாமே இதில் சம்பந்தப்பட்டுள்ள கட்சிகளினதும் அக்கட்சிகளில் உள்ள தனிநபர் சிலரினதும் அரசியல் எதிர்காலம் குறித்த நலன்களைச் சார்ந்ததே தவிர ஒட்டுமொத்தத் தமிழ் மக்களின் எதிர்கால நலன் குறித்து அல்ல என்பதைத் தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் பின்னர் தொடர்ந்துவந்த பாராளுமன்றத் தேர்தலிலும் வடக்கு கிழக்கு மாகாணத் தமிழர்கள் ஒப்பீட்டளவில் கடந்த காலங்களை விடவும் அனுரகுமார திசாநாயக்கா தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்குக் கணிசமான வாக்குகளை வழங்கியுள்ளனர் என்கின்ற உண்மைதான் இவர்களைத் தற்போது உசுப்பிவிட்டிருக்கிறது. அதனால் உத்தேச உள்ளூராட்சித் தேர்தலை எதிர்கொள்ள ‘உஷார் ஆகிவருகிறார்கள். இது தமிழ்த் தேசியக் கட்சிகளின் மக்கள் நலன் சாராத வழமையான ‘வாக்குப்பெட்டி’ அரசியலே தவிர வேறொன்றுமில்லை. தற்போதைய தமிழ் அரசியல் சூழலை 1970களில் நடந்த நிகழ்வுகளுடன் ஒப்பிட்டுப்பார்த்தல் பொருத்தம்.
1944 இல் உருவான ஜி.ஜி. பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து வந்து எஸ்.ஜே.வி. செல்வநாயகம் தலைமையிலான இலங்கைத் தமிழரசுக் கட்சி உருவான காலத்திலிருந்து வடக்கு கிழக்கு மாகாணத்தில் தமிழ்க் காங்கிரஸ் கட்சியும் தமிழரசுக் கட்சியும் கீரியும் பாம்புமாகவே ‘தேர்தல் அரசியல்’ செய்துவந்தன. இக் காலகட்டத்திலேயே 1970 இல் பாராளுமன்றப் பொதுத் தேர்தல் வந்தது.
இத் தேர்தலில் தமிழ்க் காங்கிரஸ் கட்சியினர் மற்றும் தமிழரசுக் கட்சியின் மூத்த பெருந்தலைகள் மண்கவ்வின.
* யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதியில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி ஜி பொன்னம்பலம் தோல்வியுற்று தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த சி எக்ஸ் மார்டின் புதிதாகத் தெரிவானார்.
* வட்டுக்கோட்டைத் தேர்தல் தொகுதியில் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த ‘தளபதி’ அ. அமிர்தலிங்கம் தோல்வியுற்று தமிழ்க் காங்கிரஸ் வேட்பாளர் தியாகராசா வெற்றிபெற்றார்.
* நல்லூர்த் தேர்தல் தொகுதியில் தமிழரசுக் கட்சியின் ‘இரும்பு மனிதன்’ டாக்டர் ஈ எம் வி நாகநாதன் தோற்று தமிழ்க் காங்கிரஸ் வேட்பாளர் அருளம்பலம் தெரிவானார்.
* உடுப்பிட்டித் தேர்தல் தொகுதியில் தமிழ்க் காங்கிரசைச் சேர்ந்த ‘உடுப்பிட்டிச் சிங்கம்’ மு சிவசிதம்பரம் தோல்வியுற்றுத் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த ஜெயக்கொடி வெற்றியீட்டினார்.
* வவுனியாத் தேர்தல் தொகுதியில் தமிழ்க் காங்கிரசைச் சேர்ந்த ‘எல்லைக் காவலன்’ சிவசிதம்பரம் தோல்வியைத் தழுவ தமிழரசுக் கட்சி வேட்பாளர் எக்ஸ் எம் செல்லத்தம்பு தெரிவானார்.
* கிளிநொச்சித் தேர்தல் தொகுதியில் தமிழரசுக்கட்சியின் ‘பிரச்சாரப் பீரங்கி’ ஆலாலசுந்தரம் தமிழ்க் காங்கிரஸ்க் கட்சி வேட்பாளர் வீ ஆனந்தசங்கரியிடம் தோல்வியடைந்தார்.
இவ்வாறு தமிழ்க் காங்கிரசினதும் தமிழரசுக் கட்சியினதும் மூத்த பெருந்தலைகள் 1970 ஆம் ஆண்டுத் தேர்தலில் அடி வாங்கியதால் தமது எதிர்கால தேர்தல் அரசியல் வெற்றிகளை உறுதி செய்துகொள்வதற்காகவே தமிழ்க் காங்கிரஸும் தமிழரசுக் கட்சியும் இணைந்து1972 இல் தமிழர் கூட்டணி உருவாகி அது பின்னர் 1976 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டை மாநாட்டில் தமிழர் விடுதலைக் கூட்டணியாகப் பெயர் மாற்றம் பெற்றது என்பதை அதற்குப் பின்னர் நடைபெற்ற அரசியல் நிகழ்வுகள் நிரூபித்துள்ளன. தமிழ் மக்களின் நலன்களை முதன்மைப்படுத்தி இந்த ஐக்கியம் நிகழவில்லை என்பது நிதர்சனமாகியது.
அதுபோலவே, 2001 இல் தமிழர் விடுதலைக் கூட்டணியையும் (பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணி நீக்கப்பட்டு அந்த இடத்தை தமிழரசுக் கட்சி நிரப்பியது) தமிழ்க் காங்கிரசையும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியையும் (ஈ பி ஆர் எல் எவ்) தமிழீழ விடுதலை இயக்கத்தையும் (ரெலோ) இணைத்துத் (‘புளொட்’டைத் தவிர்த்து) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தமிழீழ விடுதலைப் புலிகள் உருவாக்கியது தமக்கு இலங்கைப் பாராளுமன்றத்தில் ஓர் ‘ஊதுகுழல்’ வேண்டும் என்பதற்காகவே தவிர உண்மையில் தமிழ் மக்களின் சமூக பொருளாதார அரசியல் நலன்களுக்காக அல்ல என்பதைப் பின்னர் நடந்த நிகழ்வுகள் எண்பித்துள்ளன. அதனால்தான் 2009 மே இல் யுத்தம் முடிவுற்றுப் புலிகளின் ஆயுதப் பிரசன்னம் அற்றுப் போனதும் கல்லிலே அடித்த தேங்காய் மாதிரித் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிதறுண்டு போயிற்று.
இந்த வரலாற்றுப் பின்னணியில் வைத்துப் பார்க்கும்போது இப்போது தமிழ்க் காங்கிரஸ் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தினாலும்-தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி வி கே சிவஞானத்தினாலும்-ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் பங்காளிக் கட்சித் தலைவர்களான சித்தார்த்தன்-அடைக்கலநாதன் மற்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் போன்றோரினாலும் முன் வைக்கப்படும் ஒற்றுமை-கூட்டு யோசனை தம்முடையதும் தமது கட்சியினதும் நலன்கள் சார்ந்ததே தவிர ஒட்டுமொத்தத் தமிழ் மக்களின் நலன்கள் சார்ந்ததல்ல.
இனிமேல் தமிழ் மக்களுக்குத் தேவை என்னவெனில், ‘போலி’த் தமிழ்த் தேசியக் கட்சிகளின் ‘போலி’ ஒற்றுமையோ அல்லது இப் ‘போலி’ த் தமிழ்த் தேசியக் கட்சிகளைத் திருத்தும் முயற்சிகளோ அல்ல.
இதற்கு மாற்றீடாக, காலம் எடுக்கும் என்றாலும் கூட – கடினமான பணிதான் என்றாலும் கூடப் ‘போலி’த் தமிழ்த் தேசிய உளவியலிலிருந்து விடுபட்டதும் – ‘வாக்குப்பெட்டி’ அரசியலுக்கு முன்னுரிமை கொடுக்காததுமான முழுக்க முழுக்க மக்கள் நலனுக்கே முன்னுரிமை கொடுத்து அர்ப்பணிப்புடனும் – ஆளுமைத் திறனுடனும் – வெற்றிக் கனிகளை வீழ்த்தும் வினைத்திறனுடனும் செயற்படக்கூடியதுமான ஒரு புதிய மாற்று அரசியல் அணியின் உருவாக்கமே உடனடித் தேவையாகும்.
இப்பொழுது நடக்கிற கூட்டு முயற்சி போலித்தனமானது ,நடிப்பானது.திரும்பத் திரும்ப இவர்களுக்கு வாக்களித்து க் கொண்டிருக்கிறோம் என்றால் தமிழர்களை முட்டாள்கள் என்றும் சொல்லலாந்தானே.
தமிழர்களுக்கு அதைச் செய்கிறோம் இதைச் செய்கிறோம் என புளகாங்கித புல்லரிப்புக் கதைகளை கேடடுத் தாடுமாறாமல் தேசிய மக்கள் சக்தியை ஆதரிப்பதே தமிழர்களின் புத்திசாலித்தனமாகும்.
தமிழர்களுக்கு அதைச் செய்கிறோம் இதைச் செய்கிறோம் எனச் சொல்லும் அனைத்துத் தமிழக் கட்சிகளையும் நிராகரிக்க வேண்டும்.
ஏலையா க.முருகதாசன்