இந்தியா

கும்பமேளாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரிப்பு!

கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளதோடு 60 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பக்தர்கள் தடுப்புகளை உடைத்துக்கொண்டு புனித நீராட முயன்ற போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயக்ராஜ் நகரில் நடந்து வரும் கும்பமேளாவில் நேற்று மிகவும் முக்கியமான நாள் ஆகும். மெளனி அமாவாசையான நேற்று மட்டும் சுமார் 10 கோடி பக்தர்கள் புனித நீராடுவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.

இதனால் உத்தரபிரதேச அரசு அதற்கு விரிவான ஏற்பாடுகளை செய்திருந்தது. குறிப்பாக அப்பகுதியில் தடுப்புகளை அமைத்து கூட்டத்தை கட்டுப்படுத்தியிருந்தது. அதிகமானோர் அதிகாலையில் எழுந்து புனித நீராடவேண்டும் என்ற எண்ணத்தில் அங்குள்ள மைதானத்தில் உறங்கியுள்ளனர்.

இந்நிலையில் நேற்று அதிகாலையில் புனித நீராடுவதற்கு இடம் பிடிக்கும் ஆர்வத்தில் பக்தர்கள், பொலிஸார் அமைத்திருந்த தடுப்புகளை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றதால் அப்பகுதியில் பாரிய கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதன்போது பக்தர்கள் ஒருவரை ஒருவர் முண்டியடித்துக்கொண்டு மைதானத்தில் உறங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது ஏறிச்செல்ல ஆரம்பித்ததால் பலர் உடல் நசுங்கி உயிரிழக்க நேரிட்டது.

இந்நிலையில் இவ்விடயம் குறித்துக் கருத்து தெரிவித்த முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ”கும்பமேளாவில் அதிகப்படியான கூட்டம் இருந்தது. ஒரே நேரத்தில் 8 முதல் 10 கோடி பக்தர்கள் குவிந்தனர். அதிகாலை 1 மணி முதல் 2 மணிக்குள் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. தற்போது நிலைமை கட்டுக்குள் இருக்கிறது. மக்கள் வதந்தியை நம்பவேண்டாம். கூட்ட நெரிசலில் சிக்கி இறந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 25 லட்சம் வழங்கப்படும். அத்துடன் இச் சம்பவம் குறித்து 3 பேர் கொண்ட குழு மூலம் விசாரணை நடத்தப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.