ஜனவரி 30 – மகாத்மா காந்தி நினைவு தினம்! …. முருகபூபதி.
இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் போர்பந்தர் என்னும் இடத்தில் பிறந்த குழந்தை காந்தி எப்படி மகாத்மாவானார்…? எவ்வாறு ஒரு தேசத்தின் பிதாவாக மாறினார் ….? என்பதற்கெல்லாம் வரலாறுகள் எழுதப்பட்டிருக்கின்றன.
தற்காலக் குழந்தைகளுக்கும் இனிபிறக்கவிருக்கும் குழந்தைகளுக்கும் இப்படியும் ஒரு மனிதர் ஆசியாக்கண்டத்தில் ஒரு காலத்தில் பிறந்து – வாழ்ந்து – மறைந்தார் என்று சொல்லிக் காண்பிப்பதற்கு காந்தி பற்றிய திரைப்படங்கள் ஆங்கிலத்திலும் அனைந்திந்திய மொழிகளிலும் இருக்கின்றன.
இந்திய தேசிய கீதமான ஜனகனமண பாடலை இயற்றிய வங்கக் கவிஞர் இரவீந்திர நாத் தாகூர்தான் காந்திக்கு மகாத்மா என்ற பெயரைச்சூட்டினார்.
இந்திய சுதந்திரத்திற்காக அகிம்சை வழியில் உண்ணாவிரதப்போர்களையும் மௌனத்துடன் உப்புச்சத்தியாக்கிரகப் போராட்டங்களையும் நடத்தி இன்று வரையில் இதுபோன்ற அகிம்சைப் போர்களை எதற்காகவும் தொடரலாம் என்ற முன்னுதாரணத்தையும் அன்றே விதைத்துவிட்டுச்சென்றவர்தான் அண்ணல் காந்தி !
1869 அக்டோபர் மாதம் 2 ஆம் திகதி பிறந்த காந்தி எந்தத்தேசத்தின் விடுதலைக்காக அறவழியில் போராடினாரோ… அதே தேசத்தின் குடிமகன் ஒருவனால் 1948 இல் ஜனவரி 30 ஆம் திகதி வன்முறையினால் கொல்லப்பட்டார்.
ஈஸ்வர அல்லாஹ் தேரே நாம்… எனப்பாடி இந்து – முஸ்லிம் ஒற்றுமைக்காக பாடுபட்டு அந்த ஒற்றுமைக்காகவே
தொடர்ந்தும் குரல்கொடுத்தமைக்காக ஒரு இந்துவான நாதுராம் கோட்சேயினால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
கோட்சேயின் கழுத்தில் தூக்குக்கயிறு தொங்குவதற்கு முன்னர், “ உனது இறுதி விருப்பம் என்ன ? “ – என நீதிமன்றில் கேட்டபொழுது, “ பாரதத்திலிருந்து பிரிந்துபோன பாக்கிஸ்தானிற்குள் ஓடிக்கொண்டிருக்கும் சிந்து நதி என்றைக்கு மீண்டும் பாரதத்திற்குள் திரும்பி வருகிறதோ அதற்குப்பின்னர்தான் தனது அஸ்தி (சாம்பல்) கரைக்கப்படவேண்டும். அதுவே எனது கடைசி விருப்பம் . “ எனச்சொல்லியிருக்கிறான்.
அதனால் – அவனது அஸ்தி இன்னமும் கரைக்கப்படவில்லை என்றும் ஒரு தகவல் உண்டு.
பாரதநாடு சுதந்திரம் பெற்றகையோடு பாக்கிஸ்தானும் பிரிந்தது. இரத்த ஆறும் ஓடியது. இத்தனை ஆண்டுகளுக்குப்பின்னரும் இந்தியா – பாக்கிஸ்தான் உறவு சுமுகமாகவில்லை.
இடைப்பட்ட காலத்தில் பாக்கிஸ்தானிலிருந்து பங்களாதேஷும் பிரிந்தது. பின்னர் பஞ்சாப்பும் பிரியப் பார்த்தது. சீக்கியரின் பொற்கோயிலிலும் (Operation Blue Star ) தாக்குதல் நடத்தி அதனை முறியடித்த இந்திரா காந்தி , அதற்குப்பரிசாக தமது மார்பில் மகாத்மா காந்தியைப்போன்றே குண்டுகளை ஏந்திக்கொண்டு மடிந்தார்.
அவரது புதல்வன் ராஜீவ் காந்தியும் இலங்கை விவகாரத்தில் நுழைந்தமையினால், மனித வெடிகுண்டுக்கு பலியானார்.
காஷ்மீர் தொடர்ந்தும் கொந்தளிக்கிறது.
மகாத்மா காந்தி பிறந்த குஜராத்திலிருந்து வந்தவர்தான் இன்றைய பாரதப்பிரதமர் நரேந்திர மோடி. பல ஆண்டுகளுக்கு முன்னர் காந்தி பிறந்த அந்த மண்ணிலும் இரத்த ஆறு ஓடியது.
குற்றவாளியாக சித்திரிக்கப்பட்ட நரேந்தரமோடி தனது கரத்தில் இரத்தக்கறை இல்லை எனச்சொல்லிக்கொண்டு அமோக ஆதரவுடன் பிரதமர் ஆசனத்தில் தொடர்ந்தும் அமர்ந்துவிட்டார். அயோத்தியில் இராமர் கோயிலுக்கு கும்பாபிஷேகமும் நடத்திவிட்டார்.
குஜராத் கலவரங்களின் சூத்திரதாரி என்ற ஒரே காரணத்திற்காக அமெரிக்காவினால் முன்னர் விசா மறுக்கப்பட்ட நரேந்திர மோடி, அதே அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவுடன் கைகுலுக்கி பேசிச்சிரித்து விட்டு நாடு திரும்பினார். பின்னரும் சென்று வந்தார்.
எங்கள் மகாத்மாவே நீங்கள் மேல் உலகத்தில் இருப்பீர்களாயின் இந்த வேடிக்கைகளையும் பார்த்துக்கொண்டு உங்கள் கதர் ஆடைக்காக கைராட்டை சுழற்றுவீர்கள்.
நீங்கள் பாரதம் சுத்தமாகவேண்டும் என்பதற்காகவே எளிமையாக வாழ்ந்து காட்டியவர். சுத்தம் என்பது அரசியலில் மட்டுமல்ல தனிப்பட்ட வாழ்விலும் தனது வாழ்விடத்திலும் பேணப்படவேண்டும் என்றும் வலியுறுத்தினீர்கள்.
அன்று ஒருநாள் அமெரிக்காவிலிருந்து புறப்பட்ட வேளையில் நரேந்திர மோடி சொன்ன கருத்துக்கள்தான் எமக்கு மகாத்மா காந்தியின் தனிப்பட்ட வாழ்வையும் நினைத்துப்பார்க்கத்தூண்டுகிறது.
காந்தி பிறந்த நாளில் தமது அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் அனைவரும் தங்கள் தங்கள் மலகூடங்களை தாங்களே சுத்தம் செய்யவேண்டும் என்று வலியுறுத்தினார் மோடி.
காந்தியும் தனது மலகூடத்தை தானே சுத்தம் செய்தவர்தான். தனது மனைவி கஸ்தூரிபாயும் அவ்வாறுதான் செய்யவேண்டும் என்று பணித்தார். அதனால் கணவனுக்கும் மனைவிக்கும் இடையே தர்க்கமும் நிகழ்ந்திருக்கிறது.
அவர் தனது மனைவியை மலகூடத்தை சுத்தம் செய்யுமாறு வற்புறுத்தும் காட்சி The Making Of The Mahatma என்ற திரைப்படத்தில் வருகிறது.
ஊருக்குத்தான் உபதேசம் பெண்ணே… ஆனால் – உன்னக்கில்லையடி கண்ணே… என்று காந்தி, கஸ்தூரிபாயை கொஞ்சவில்லை.
காந்தியும் சிறையில் அடைபட்டார். நாட்டுக்கு சுதந்திரம் கேட்டதற்காக மாத்திரமே அடைபட்டார். அவர் தனக்கு மின்விசிறி கேட்கவும் இல்லை. Attach Bath room அவருக்கு
அவசியப்படவில்லை. குளிர்சாதனமும் அவருக்கு தேவைப்படவில்லை. அங்கிருந்தும் அவர் கைராட்டை சுற்றி நூல் எடுத்தவாறு பகவத்கீதைதான் படித்தார். ரகுபதி ராகவ ராஜாராம் என்று பிரார்த்தனையில் ஈடுபட்டார்.
சுத்தம் மலகூடத்தில் மட்டுமல்ல அரசியலிலும் நீடித்தால்தானே ஆரோக்கியமான தேசம் உருவாகும்.
சமகாலத்தில் இலங்கையில் க்ளீன் ஶ்ரீலங்கா இயக்கம் ஆரம்பமாகியிருக்கிறது. இதனையெல்லாம் நாம் காந்தியின் சிந்தனையிலிருந்துதான் பார்க்கவேண்டியிருக்கிறது.
1948 இல் ஜனவரி 30 ஆம் திகதி காந்தி சுட்டுக்கொல்லப்பட்டதை பின்னணியாகக்கொண்டு, எழுத்தாளர் ரா. சு. நல்லபெருமாள் எழுதிய தொடர்கதைதான் கல்லுக்குள் ஈரம். இக்கதை கல்கி வார இதழின் வெள்ளிவிழா போட்டியின்போது இரண்டாவது பரிசினை பெற்றது.
பின்னாளில் கமல்ஹாசன், ஹே ராம் ( 2000 ) என்ற திரைப்படத்தை தயாரித்து நடித்து வெளியிட்டார். இதன் கதை தன்னுடையது என்று எழுத்தாளர் நல்லபெருமாள் சர்ச்சையும் கிளப்பியிருந்தார்.
காந்தியைப்பற்றி ரிச்சர்ட் அட்டன்பரோ இயக்கிய ( 1982 ) திரைப்படம் உலகப்புகழ் பெற்றது.
காந்தி இன்றளவும் உலக நாடாளுமன்றங்களிலும் ஊடகங்களிலும் பேசப்படுகிறார். இந்திய ரூபா நாணயத்தாள்களிலும் சிரிக்கிறார். இந்திய நீதிமன்றங்களில் காட்சி தருகிறார். இந்தியா – இலங்கை உட்பட பல நாடுகளில் சிலையாக நிற்கிறார்.
இவ்வேளையில் இலங்கை நாடாளுமன்றத்தில் நடந்த சுவாரசியமான ஒரு சம்பவத்தையும் நினைவுபடுத்தலாம்.
விடுதலை பெற்ற இந்தியாவின் முதலாவது ஆளுநராகவிருந்த மவுண்ட்பேர்ட்டன், மகாத்மா காந்தி சுட்டுக்கொல்லப்பட்டபோது, “ தொடர்ந்தும் பிரிட்டிஷை எதிர்த்துவந்த காந்தியை கொன்றது, பிரிட்டிஷ் இராணுவம் அல்ல. அவர் ஆழமாக நேசித்த தனது தாய்நாட்டின் ஒரு குடிமகன்தான் அவரைக் கொன்றான் “ என்றார்.
இந்தக்கூற்றை இலங்கை நாடாளுமன்றத்தில், கடும்போக்காளர் என வர்ணிக்கப்படும் களனி தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்திய
விஞ்ஞான கைத்தொழில் அமைச்சர் சிறில் மத்தியூ,
எதிர்க்கட்சித்தலைவர் அ. அமிர்தலிங்கத்தை பார்த்துச் சொன்னார்.
அப்போது அது நகைமுரணாகத் தோன்றியது.
பின்னாளில் அமிர்தலிங்கம் , 1989 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 13 ஆம் திகதி, ஒரு தமிழ்க்குடிமகனால்தான் சுட்டுக்கொல்லப்பட்டார். சிங்களவரால் அல்ல !
காந்தி எழுத்தாற்றல் மிக்கவர். சில இதழ்களின் ஆசிரியராகவும் விளங்கினார். நவஜீவன் இதழில் காந்தி தமது தாய்மொழியில் தொடராக எழுதிய சுயசரிதை சத்தியசோதனை .
பின்னாளில் இத்தொடர் நூலுருப்பெற்றது. அத்துடன் தமிழிலும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டது. மார்க்சீயம், கம்யூனிசம், ஷோஷலிஸம் முதலான சித்தாந்தங்கள் போன்று காந்தீயமும் பேசுபொருளானது.
.மகாத்மா காந்தியின் பிறந்த தினத்தையும் நினைவு தினத்தையும் மனதில் வைத்திருப்போம்.
letchumananm@gmail.com
இந்த மகானின் காந்தித் தாத்தாவின் சரித்திரத்தைச் இத்தனை எழுத்துக்களில் (சம்மட்டியில்) சுத்தியலால் ,அடித்து போல் சிறியவர,பெரியவர் என்ற பேதத மையின்றி அருளிய உங்கள் அறிவையா,,இயலாமையைத் தந்த கடவுளையா ஐயாரை…..
?