கட்டுரைகள்

பவளத்திட்டில் பழந்தமிழர் கறி!… தொடர் – 2 …. சங்கர சுப்பிரமணியன்

பண்டையத் தமிழர் வாழ்வில் மதம் என்ற ஒன்று இருந்ததில்லை. ஆனால் தமிழர் வாழ்வியலில் ஆசீவகம் என்ற என்ற மெய்யியல் முறை இருந்தது. ஆசு என்றால் தெரியாத ஒன்று. ஈவு என்றால் தீர்வு அகம் என்றால் இடம். தெரியாத ஒன்றை தீர்த்து வைக்கப்படும் இடம். அந்த இடத்திற்கு ஆசீவகப் பள்ளி என்று பெயர்.

இந்த ஆசீவகப் பள்ளியில் அமணர்கள் என்ற ஆசீவகச் சித்தர்கள் இருந்தார்கள். இந்த சித்தர்களில் சிவன் என்பவர்தான் முதல் சித்தர். இவ்வாறு இருந்த இருபத்து நான்கு சித்தர்களில் ஒருவர் முருகனும் ஆவார். இப்படி வந்த இருபத்துநான்காவது சித்தரான மகாவீரர் ஆசீவகத்தலிருந்து விலகி ஜைன மதத்தை துவங்கினார்.

Screenshot

ஆசீவகப்பள்ளியே சமணப் பள்ளியாக இருந்தது. வடக்கே இம்மெய்யியல் வாழ்வியல் ஆஜ்விகா என்றும் அமணர்கள் சமணர்களாகவும் அறியப்பட்டார்கள். இக்கால கட்டத்தில் ஆசீவகம் பௌத்தம் மற்றும ஜைனம் மக்களிடம் பரவியிருந்தது. பௌத்தத்தை நிறுவிய புத்தர் ஆசீவகத்தின் வளர்ச்சியை கண்டு ஐயுற்றாராம்.

ஏனெனில் ஆசீவகச் சித்தரில் ஒருவரான மற்கலி கோசாலர் என்பவரின் புகழ் உச்சத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது மதங்களுக்கிடையே போட்டி நிலவியது. ஜைனமதம் பின்பற்றக் கடினமான கோட்பாடுகளால் மக்களிடயே செல்வாக்கை இழந்தது.

பௌத்தமதமும் இந்தியாவை விட்டு வெளியேறியது. மீதமிருந்த ஆசீவகமும் பரவாமல் ஆசீவகச் சித்தர்கள் கழுவில் ஏற்றப்பட்டார்கள். தமிழக சித்தர்கள்
தமிழகத்தில் மதம் என்ற பெயரைச் சொல்லி கழுவேற்றப் பட்டார்கள்.

இப்படி கழிவேற்றப்பட்டவர்களை சமணர்கள் என்று வாதிடுவோரும் உண்டு. சமணத்துறவிகள் தலையில் முடி இருக்காது. தலையில் முளைக்கும் முடிகள பிடுங்கி தலையில் முடியை வளர விடமாட்டார்கள். நம்மில் சிலர் பேசும்போது நீ என்ன பெரிய புடுங்கியா என்று கேட்பது இதிலிருந்துதான் தோன்றியிருக்க வேண்டும் என்று கருத்தும் நிலவுகிறது.

சரி, நாம் கட்டுரைக்கு வருவோம். கழுவேற்றப்பட்டவர்கள் ஆசீவகச் சித்தர்கள் என்பது கழுவேற்றப் பட்டவர்களின் தலையில் இருந்த முடியை வைத்து உறுதி செய்யப்பட்டது. ஆசீவகமும் ஆசீவகச் சித்தர்களும் அழிக்கப் பட்டார்கள். இவ்வாறு ஆசீவகமும் ஆசீவக சித்தர்களும் அழிந்து போகும் நிலை உண்டானது.

ஆழிப் பேரலையால் குமரிக் கண்ட அழிவிலிருந்து அங்கு வாழ்ந்த தமிழர்களை வடக்கு நோக்கி இலங்கைக்கு அழைத்து வந்து முருகன் காத்தார். குமரிக்கண்ட பேரழிவால் தமிழர் வடக்கு நோக்கி நோக்கி இடம்பெயர வைத்ததுபோல் இன்றும் போரின் பேரழிவு தமிழரை உலகெங்கும்
இடம் பெயரவைத்தது.

எத்தனை பேரழிவு எந்த வடிவில் வந்தாலும் அது கடற்கோள் மூலமோ அல்லது போரின் மூலமோ எப்படி வந்தாலும் தமிழரையும் அவர்களது வாழ்வியல் முறையையும் அழித்துவிட முடியாது. இதற்கான சான்றை கேன்ஸிலுள்ள பவளத்திட்டில் கண்கூடாக கண்டேன்.

சில தினங்களுக்கு முன் உறவுகளுடன் விமானம் மூலமாக குயின்ன்ஸ் லாண்ட்

மாநிலத்திலுள்ள கேன்ஸ் சென்றிருந்தேன். அப்போது கேன்ஸிலுள்ள காலோனியல் கிளப் சிசார்ட்டில் தங்கி அங்கிருந்து சிறப்புவாய்ந்த பவளத் திட்டை பார்வையிடச் சென்றோம்.

குரூஸ் மூலம் கேன்ஸிலிருந்து இரண்டு மணி நேரப் பயணம். கடலில் பெரிதாக அலைகள் ஒன்றும் இல்லை.பொதுவாக கடலில் அலைகள் அதிகம் இல்லாமலும் ஆழமற்ற பகுதிகளில்தான் பவளப்பாறைகள் உருவாகுமாம். மேலும் இந்த பவளப் பாறைகள் உருவாக கடல்நீரின் வெப்பநிலை 20ல் இருந்து 24 சென்டிகிரேட் வரை இருக்க வேண்டும்.

அத்துடன் கடல்நீரில் ஈரப்பதம் 30ல் இருந்து 35 சதவீதம் இருக்க வேண்டும். மேலும் சூரிய ஒளி கடலின் அடிமட்டம் வரை செல்லக் கூடியதாக இருக்க வேண்டும். இத்தகைய சூழ்நிலை இருந்தால் மட்டுமே பவளப்பாறை வளரும். என்ன வளருமா? அது என்ன உயிருள்ளதா வளர்வதற்கு? என்று கேள்வி கேட்டால் அதற்கு பதில் உயிரினம் என்பதுதான்.

பவளப்பூச்சி என்பது கடலில் வாழக்கூடிய முதுகெலும்பற்ற ஓர் உயிரினமாகும். இப்பூச்சிகளுக்கு ஜல்லிவேர் போன்ற கால்களுண்டு. இவை கடல் நீரிலுள்ள சுண்ணாம்புச் சத்தை உறிஞ்சி கால்சியம் கார்பனேட்டை வெளியேற்றும். பார்ப்பதற்கு பலகிளைகளை உடைய மரங்கள் போன்ற இருக்கும் இவை திட்டுகளாக இறுகி பாறையாகி விடும். இதுவே பவளத்திட்டு அல்லது பவளப்பாறை எனப்படும்.

இதுபோன்ற உருவான பவளப்பாறைத துண்டுகளை சுத்தப்படுத்து வெட்டி இழைத்து வளவளப்பாக்குவதால் கிடைப்பதே பவளமாகும். அணிகலன்களுக்கு பயன்படும் சிவப்பு பவளமும் இப்படி ஒருவகையான பவளப்பூச்சிகளால் உருவாக்கப்பட்ட பவளப்பாறையில் இருந்து வெட்டி எடுக்கப்பட்டதாகும்.

இவ்வாறு உருவான பவளத்திட்டை நோக்கி நாங்கள் சென்ற கப்பல் சென்றது. குறிப்பிட்ட இடத்தை அடைந்து கப்பல் நின்றதும் கடலுக்குள்ளே நிரந்தரமாக அமைக்கப்பட்டுள்ள தளத்துடன் கப்பல் இணைக்கப்பட்டது. நாங்கள் அந்த இடத்தை அடைந்த நேரம் காலை பத்து மணி இருக்கும்.

கப்பல் நின்ற இடத்திற்கு சற்று தொலைவில் பவளத்திட்டுக்கள் இருந்தன. பவளத்திட்டுக்ககளை மூன்று வகைகளில் பார்வையிடலாம். முதலாவதாக ஸநார்கல் என்ன சாதனத்தின் உதவியுடன் கடலில் நீத்திச் சென்று இந்த பவளப் பாறையைக் காணலாம். அடுத்ததாக பக்கவாட்டில் கண்ணாடி பொருத்திய பாதியளவே மூழ்கக் கூடிய நீர்மூழ்கிப் படகில் பயணித்தும் பவளத்திட்டைக் காணலாம்.

மூன்றாவதாக படகின் அடிப்பகுதியில் கண்ணாடி பொருத்திய படகில் பயணம் சென்றும் பவளப்பாறையைக் காணலாம். இந்தப் படகுகள் யாவும் இயந்திரத்தில் இயக்கப்படுகின்றன். இவ்வாறு பவளப்பாறையை பார்வையிட்டபின் ஒருமணியளவில் மதிய உணவுக்காக சென்றோம்.

(தொடரும்….)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.