முகநூல்
இலங்கை ஜெயராஜ் Kambavarithy Ilankai Jeyaraj …. Kumarathasan Kandiah.

1. கேள்வி :
நீங்கள் சென்றமுறை அளித்த பதிலில், நீங்கள் கௌசல்யாவிடம் மன்னிப்புக் கேட்டிருப்பதாக ‘தமிழடியான்’ என்பவர் ‘யூடியூப்பில்’ பேசியிருக்கிறார். அது உண்மையா?
பதில் :
உண்மைதான்! எங்களால் எவர்க்கேனும் காரணமின்றி; மனவருத்தம் ஏற்பட்டிருந்தால் அதற்காக மன்னிப்புக்கோருவதில் எந்தத்தவறும் இருப்பதாய்ப் படவில்லை.
தவறுதலாக நடந்துவிட்ட ஓர் பிழையை கண்ணகி சுட்டிக் காட்டியதும் பாண்டியன் தன்னை நியாயப்படுத்த தர்க்கங்கள் ஏதும் செய்யாமல் ‘யானோ அரசன்?, யானே கள்வன்!’ எனக்கூறி உயிர் விட்டதாய் சிலப்பதிகாரம் பேசுகின்றது.
திருவள்ளுவர் தனக்கு சமம் இல்லாதவர் இடத்தும் பிழையை ஒத்துக் கொள்ளுதல் சான்றோர்களின் கடமை என்கிறார். (‘சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்வி துலையல்லார் கண்ணும் கொளல்’) அதுதான் தமிழர் பண்பு. அதைத்தான் நானும் செய்தேன்.
நான் முன்பு அளித்த எனது பதிலில் பிழையேதும் செய்திருக்கவில்லை. கௌசல்யா மனவருத்தப்பட அப்பதிலில் ஒன்றுமே இருக்கவில்லை என்பதுதான் உண்மை.
கொஞ்சக்காலமாக கௌசல்யாவின் கருத்துக்களை, அவரே உரைக்காமல் அர்ச்சுனாவும், தமிழடியானும் தான் உரைத்து வருகின்றார்கள். அதற்கு கௌசல்யாவின் மௌனமும் சம்மதச்‘சிக்னல்’ காட்டுவதால், என் பதிலைக்கண்டு பாவம் அந்தப்பெண்ணும் வருந்தியிருக்குமோ? என ஐயப்பட்டுத்தான் அதற்காக மன்னிப்புக் கோருவதாக எழுதியிருந்தேன்.
இவை தமிழர் பண்பாடு சார்ந்த விடயங்கள். இதெல்லாம் பாவம் ‘தமிழடியானுக்கு’ எங்கே தெரியப்போகிறது?
2. கேள்வி :
டாக்டர் அர்ச்சுனா உங்களைப் பற்றி மிகக் கேவலமாகப் பேசி, ஓர் காணொலி அறிக்கை விட்டிருக்கிறார். அதற்கு நீங்கள் பதிலேதும் சொல்ல வேண்டாமா?
பதில் :
இது சம்பந்தமாக மனதில் வந்த சில எண்ணங்களை மட்டும் கீழே தருகிறேன்.
• எனக்கு என்னைத் தெரியும். என்னைச் சார்ந்தவர்களுக்கும் என்னைத் தெரியும். அவ்வளவும் எனக்குப் போதுமானது. அறிவிலிகளின் கருத்துக்களுக்கு எப்போதும் நான் செவி சாய்ப்பதில்லை.
• அவரது பேச்சுப் பற்றி நான் கவலைப்பட ஒன்றுமேயில்லை. வாய் கூசாது பேசிய அவரது பேச்சைக்கேட்டு அவருக்கு வாக்களித்தவர்கள்தான் கவலைப்பட வேண்டும்.
• மிக விரைவில் பாராளுமன்றத்துக்குள் ‘தூஷண’ வார்த்தைகள் பிரயோகிக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
.பத்தைக்குள் எறிய முயல் வெளிக்கிட்ட கதை; என்று ஊரில் ஒரு பழமொழி சொல்வார்கள். ‘தமிழடியான்’, ‘அர்ச்சுனா’ ஆகியோர் படும்பாட்டைக்கண்டால் இந்தப் பழமொழிதான் ஞாபகத்திற்கு வருகிறது.
• அர்ச்சுனாவின் வார்த்தைப் பிரயோகங்கள், ‘நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும் குலத்தில் பிறந்தார் வாய்ச் சொல்.’ என்ற திருக்குறளை ஞாபகப்படுத்துகின்றன.
• தனக்கு எதிராகப் பேசுபவர்களின் மேல் ‘சேறு பூசி’, அவர்களை வாய் அடைக்கச் செய்யும், உத்தியைத்தான் அர்ச்சுனா கடைப்பிடித்து வருகிறார். அந்த உத்தி என்னிடம் செல்லாது என்பதை அவர் விரைவில் உணர்வார்.
• அர்ச்சுனாவின் தூற்றுதல்களுக்கு நான் பதில் சொல்லத் தேவையில்லை. விரைவில் இயற்கையே அவருக்குப் பதிலளிக்கும் என நம்புகிறேன்.
3. கேள்வி :
நீங்கள்தான் அர்ச்சுனாவுடன் முதலில் கொழுவப்போனதாக அர்ச்சுனா கட்சிக்காரர் சிலபேர் சொல்லித்திரிகிறார்களே. அப்படி நீங்கள் என்னதான் சொன்னீர்கள்?
பதில் :
அர்ச்சுனா எதைச் செய்தாலும், அவரைக் காப்பாற்ற நினைக்கும் சில அறிவிலிகள்தான் அப்படிச் சொல்லித்திரிகிறார்கள். தாம் கொடுக்கும் கண்மூடித்தனமான ஆதரவால், அர்ச்சுனா தன் பெயரையும் கெடுத்து, நம்மினத்தின் பெயரையும் கெடுக்கிறார் என்பதுகூட அந்த மூடர்களுக்கு ஏனோ தெரியவில்லை.
இனி உங்கள் சந்தேகத்தைத் தீர்க்கிறேன். அடுத்த மேயர் யாராய் இருப்பார்? என்ற கேள்விக்கு அர்ச்சுனா அணி வென்றால் மேயராகப் போவது ‘தங்கமான தங்கம்தான்’ எனப் பதிலளித்திருந்தேன். அதில் கௌசல்யாவிற்கு என்ன இழிவு ஏற்பட்டிருக்கிறது? என்று எனக்குப் புரியவேயில்லை. இன்னும் சொல்லப்போனால் நான் அவரைப் பெருமைப்படுத்திப் பதிலுரைத்திருக்கிறேன் என்பதுதான் நிஜம்.
எனது இப்பதிலுக்குப் பிறகு, என்னை இழிவுபடுத்துவதாய் நினைந்து கௌசல்யாவிடம் ‘அதை வாங்கித் தருகிறேன்’, ‘இதை வாங்கித்தருகிறேன்’ என்றெல்லாம் பேசிவரும் அர்ச்சுனாதான், அந்தப் பெண்ணை அநியாயத்திற்கு அசிங்கப்படுத்தி வருகிறார். இதையும் நியாயப்படுத்துபவர்களை நான் என்ன சொல்ல? இத்தகையவர்களைத் தொலைத்தால்தான் அர்ச்சுனா போன்றவர்கள் உருப்பட வாய்ப்பிருக்கிறது.
4. கேள்வி :
உங்களை வேண்டுமென்றே வம்பிற்கு இழுக்கிறார்கள். அதையெல்லாம் பார்த்தும் பாதிப்பின்றி அசையாது நிற்கிறீர்கள். எப்படி இது உங்களால் முடிகிறது?
பதில் :
நான் ஒரு தாமரை இலை. இவர்கள் அள்ளித் தெளிக்கும் குற்றங்கள் எவையும் என்மேல் ஒட்டப்போவதில்லை. அதனால் துன்பம் என்னைக் கிட்டப் போவதில்லை.
விவேகானந்தர் பற்றி ஒரு கதை சொல்வார்கள். அக் கதை உண்மையில் நடந்ததா? இல்லையா? என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் அக்கதை எனக்கு ரொம்பப் பிடிக்கும்.
ஒரு நாள் விவேகானந்தர் ரயில் ஒன்றில் பயணஞ் செய்து கொண்டிருந்தாராம். அப்போது அவருக்கு முன்னால் இருந்த இருக்கையில் வந்தமர்ந்த சில நாகரீக இளைஞர்கள், விவேகானந்தரை யாரோ ஒரு ‘பண்டாரம்’ என நினைந்தும், இவருக்கெங்கே ஆங்கிலம் தெரியப் போகிறது என நினைத்தும், வழிநெடுக விவேகானந்தரை ஆங்கிலத்தில் கிண்டல் செய்தபடி வந்தார்களாம்.
இடையில் வந்த டிக்கெட் பரிசோதகர் ஒருவர், விவேகானந்தரைத் தெரிந்து அவரை வணங்கினாராம். அவர் ஆங்கிலத்தில் பேச, விவேகானந்தர் அவரோடு உயர்தரமான ஆங்கிலத்தில் உரையாடினாராம்.
அது கண்டு அதிர்ந்து போன இளைஞர்கள், பரிசோதகர் சென்ற பிறகு, விவேகானந்தரை நோக்கி, ‘இதுவரை நாங்கள் உங்களைப் பற்றித் தரக்குறைவாகப் பேசிக் கொண்டு வந்தோம். அதையெல்லாம் கேட்டும், கோபப்படாமல் உங்களால் எப்படி இருக்க முடிந்தது?’ என்று கேட்டனராம்.
அதற்கு விவேகானந்தர், ‘நான் முட்டாள்களைச் சந்திப்பது இது முதற் தடவையல்ல’ என்று கூறிவிட்டு இறங்கிச் சென்றாராம். உங்கள் கேள்விக்கும் விவேகானந்தரின் பதில்தான் பதிலாகிறது.
5. கேள்வி :
ஐயா நெஞ்சமெல்லாம் பதறுகிறது. அர்ச்சுனா என்கின்ற அந்த அற்பப்பதர் நாகரீகம், பண்பாடு என்கின்ற எல்லைகளைக் கடந்து, சிறிதும் கூச்சமில்லாமல் உங்களைப் பற்றிய கீழ்மையான உரைகளைப் பதிவிட்டுக் கொண்டே இருக்கிறான். கடைசியாய் அவன் வெளியிட்ட ‘சிவ சிவ’ பதிவைப் பார்த்து அதிர்ந்து போனேன். அந்தப் பதிவு கூடவா உங்களை ஆத்திரப்படுத்தவில்லை?
பதில் :
முதலில் நீங்கள் அமைதியடையுங்கள்! நாங்கள் நாகரீகமாகவே பேசுவோம்.
அர்ச்சுனா, என்னை இழிவுபடுத்துவதாய் நினைந்து, உலகிற்குத் தான் யார் என்பதைத் தொடர்ந்து அடையாளப்படுத்தி வருகிறார். அது நல்லது தானே? நான் வரையறையற்ற ‘வசவுகளை’த் தாங்கியேனும், ஒரு பிழையானவரைத் தேர்ந்தெடுத்த இனத்தை, கண் விழிக்கச் செய்வதில் எனக்கு மகிழ்ச்சிதான்.
அர்ச்சுனா என்னை இழிவுபடுத்தவில்லை, கௌசல்யாவைத்தான் இழிவுபடுத்தி வருகிறார். ஒரு திருமணமாகாத இளம் பெண்ணைப்பற்றி, இப்படியெல்லாம் பேச அவருக்கு யார் அதிகாரம் கொடுத்தார்கள்? அவரது அந்த உரைக்குக் கீழே, பதிவாகியிருக்கும் ‘கொமன்ஸ்களை’ எடுத்துப் பாருங்கள். அர்ச்சுனா தன் பேச்சால், கௌசல்யாவை எவ்வளவு கீழ்மைப்பட வைத்திருக்கிறார் என்பது புரியும்.
எங்கள் ஊரில் கள்ளுக்கடை வாசலில், நிறைவெறியில் நிற்கும் குடிகாரன் ஒருவன்கூட இத்தகைய வார்த்தைகளைப்பேசி நான் கேட்டதில்லை. அவர் பேசிய அத்தனையும் செவி கைக்கும் சொற்கள். என்னைக் காரணமாக வைத்து விதி அர்ச்சுனாவைத் துரத்தத் தொடங்கி விட்டது என்று நினைக்கிறேன்.
தங்கம் என்று சொல்லிக் கௌசல்யாவை இழிவு செய்துவிட்டார். அவமரியாதை செய்துவிட்டார் என்றெல்லாம் பொய்க் கொந்தளிப்புக் காட்டிய ‘தமிழடியான்’, அர்ச்சுனா அப்பெண் பற்றிப் பேசும் ‘அழுக்குகளையெல்லாம்’ இரசித்து வருகிறார்போல. ஈனர்களுக்கு ஏது மானம்? விட்டுவிடுவோம்.
6. கேள்வி :
ஐயாவிற்குத் தேவையில்லாத வேலை இது. இத்தகைய கீழ் மக்களின் வாயில் தானாய்ப் போய் ஏன் விழுகிறார்? துஷ்டர்களைக் கண்டால் தூர விலக வேண்டியது தானே? என்கிறார்கள் சிலபேர். நீங்கள் அவர்கள் சொல்வது போல் நடந்து கொண்டால் என்ன?
பதில் :
‘துஷ்டர்களைக் கண்டால் தூர விலகு’ என்று சொல்லுகிறவர்கள், தங்கள் வீட்டிற்குள் ஒரு துஷ்டன் நுழைந்து கீழ்மைகள் செய்தால், மேற்சொன்ன தொடரைச் சொல்லிவிட்டு, பேசாமல் இருப்பார்களா? ‘எங்கள் வீட்டிற்குத் தீமை நடந்தால், எப்படி நாங்கள் அதைப் பார்த்திருக்க முடியும்?’ என்று கொதிப்பார்கள்தானே? அதைத்தான் நானும் செய்கிறேன்.
அவர் அவர்க்கு, அவரவரின் வீடுதான் வீடு. அவரவர் உறவுதான் உறவு. எனக்கோ இந்த நாடுதான் வீடு. நம் இனந்தான் உறவு. அதனால் எனக்கு எந்தப் பாதிப்பு வந்தாலும், என் நாட்டிற்கும், என் இனத்திற்கும் தீமை செய்கிற எவரையும் கண்டிக்காமல், நான் இருக்கப் போவதில்லை. துஷ்டர்களைக் கண்டு தூர விலகியோட இறைவன் என்னைப் படைக்கவில்லையென நினைக்கிறேன்.
7. கேள்வி :
உங்களது, ஒழுக்கம் பற்றி இழிவு செய்து பேசும்போது கூடவா உங்களுக்குக் கவலை வராது?
பதில் :
ஒழுக்கம் உள்ளவர்கள் அப்படிப்பேசினால் நிச்சயம் கவலைப்படுவேன்.
8. கேள்வி :
புலம்பெயர்ந்த மக்களில் சிலர், அர்ச்சுனாவை ஏன் இவ்வளவு விரும்புகிறார்கள் என்று உங்களால் ஊகிக்க முடிகிறதா?
பதில் :
இத்தகைய கேள்விகளைக் கேட்டு, உண்மையான பதிலை என்னைக் கொண்டு சொல்ல வைத்து, என்னைப் புலம்பெயர்ந்த மக்களின் பகைவன் ஆக்குவதில் உங்களுக்கு அப்படியென்ன மகிழ்ச்சியோ தெரியவில்லை. ஆனாலும் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டியது எனது கடமை. அதனாற் சொல்லுகிறேன்.
உங்கள் கேள்வியில் இடப்பட்டிருக்கும் ‘சிலர்’ என்ற வார்த்தை மிக முக்கியமானது. நான் கீழே எழுதப்போகும் பதிலும் அந்த சிலரை நோக்கியதுதான் என்பதை முன்னரே சொல்லி விடுகிறேன்.
போரின் கடுமையான பாதிப்பிற்கு அஞ்சி, தம் உறவுகளை எல்லாம் கைவிட்டுவிட்டு, பொய்களும், களவுகளும் செய்து, மறைந்த போராளிகளைக் கற்பனையாய், தமக்கு ஒன்றுவிட்ட, ஒன்றுவிட்ட, ஒன்றுவிட்ட உறவுகளாய்க் காட்டி, வெளிநாடுகளில் நல்வாழ்வைத் தேடிக் கொண்ட சிலருக்கு, பொழுதுபோக்க வார்த்தையாடுவதற்கு, தாய் நாட்டில், ஏதேனும் பிரச்சினை நடந்து கொண்டே இருக்க வேண்டும். அதைக் கேட்டு விமர்சித்துக் கொண்டிருப்பதுதான், அவர்களது தாய்நாட்டுப் பற்றாம்!
போர் முடிவதற்கு முன்பு, இயக்கங்களின் சண்டையைப் பாதுகாப்பாக இருந்து கொண்டு, கை தட்டி இரசித்துப் பழகியவர்கள் இவர்கள். இராணுவ வீரர்கள் என்றில்லாமல், நம் போராளிகளின் மரணங்களையும், தம் சுவைக்காகக் கூட்டி உரைத்து மகிழ்ந்தவர்கள் அவர்கள். பத்துப் பேர் இறந்தார்கள் என்று செய்தி வந்தால், ‘சீ.சீ! இவங்கள் ஒளிக்கிறாங்கள். நூறு பேராவது முடிந்திருப்பாங்கள்’ என்று சொல்லித் தமக்குத்தாம் பொய்யான ‘டென்ஷனை’ உருவாக்கி, மகிழ்ந்தவர்கள் இவர்கள்.
போர் முடிந்து போனதும், இவர்களுக்குச் ‘சீ’ என்று ஆகிவிட்டது. யாராவது சண்டை கிளப்பமாட்டார்களா? குழப்பம் விளைவிக்கமாட்டார்களா? என்று காத்திருந்த இவர்களுக்கு, அர்ச்சுனாவின் முரட்டுச் செயல்கள் பிடித்துப்போக, அவரை வளர்த்துவிட்டு, இங்கு எப்போதும் குழப்பத்தை உண்டாக்கி, தம் இரசனைக்குத் தீனி போட விரும்பிய இவர்கள்தான் நீங்கள் சொன்ன அந்தச் சிலபேர்.
அங்கிருந்து வரும் காசில் வாழ்ந்து வரும் நம்மவர் சிலருக்கு, வெளிநாட்டில் வாழும் கோட்டும், சூட்டும் போட்ட, அண்ணாவோ, மாமாவோ சொல்வதுதான் வேதவாக்காய்த் தெரிகிறது. அத்தகையவர்களின் புண்ணியத்தால்தான், இருபதாயிரம் வாக்குகள் அர்ச்சுனாவின் உண்டியலில் விழுந்தன.
அர்ச்சுனாவிற்கும் இந்த உண்மை தெரிந்திருக்கும் போல. தான் போடும் சண்டைகள்தான், தனது உண்டியலை மேலும் மேலும் நிரப்பும் எனக் கருதியே, அவர் நம் இனத்திற்கே உரிய ஒழுக்கம், பண்பாடு, நாகரீகம் என்பவற்றையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு, நாளுக்கு நாள், ஒவ்வொரு சண்டையாய்ப் போட்டுக் கொண்டிருக்கிறார்.
இனத்தையும் தேசத்தையும் விட, அவர் கௌசல்யாவைப்பற்றிப் படும், கடும் கவலை, அவர் நம்மினத் தலைமைக்கு உரியவரா? இல்லையா? என்பதை நாளாந்தம் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது. பாவம்! அந்தப் பெண்ணை மட்டுமல்ல, நம் இனத்தையும் இவரிடமிருந்து கடவுள்தான் காப்பற்ற வேண்டும்.
9. கேள்வி :
நம் சமூகத்தின் ‘பெரிய மனிதர்கள்’ யாரும் அர்ச்சுனாவின் இத்தகைய இழிசெயல்களைக் கண்டிக்காமல் இருப்பது ஏன்?
பதில் :
‘கொமன்ஸ்’ எழுதுகிறவர்களும் சில ‘யூடியூப்’காரர்களும் கண்டித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். ‘பெரிய மனிதர்கள்’ என்று சொல்லப்படுவோர் அர்ச்சுனாவின் ‘அஸ்திரங்கள்’ தங்கள் மீதும் பாய்ந்துவிடலாம் என்று, பயப்படுகிறார்களோ என்னவோ?
10. கேள்வி :
என்ன? உங்களது மாணவர் குழாம், அர்ச்சுனாவிற்கு எதிராக, களத்தில் இறங்கிவிட்டாற் போல் தெரிகிறதே!
பதில் :
உண்மைதான்! ஆனால், நான் கேட்டுக் கொண்டு அவர்கள் அதைச் செய்யவில்லை. அவர்கள் அப்படிச் செய்ய வேண்டும் என, நான் எதிர்பார்க்கவும் இல்லை. ‘என்னையே நோக்கி நான் இந்நெடும்பகை தேடிக்கொண்டேன்’ என்பதுதான் உண்மை.
முதற் குரல் கொடுத்து, மற்றவர்களையும் ‘உசுப்பேத்திவிட்ட’ வாசுதேவாவிற்கும், அவரைப் பின் தொடர்ந்த மற்றையவர்களுக்கும் எனது நன்றிகள். என் சார்பாக பேசியதற்காக அல்ல. உண்மையின் சார்பாக பேசியதற்காக ‘கேட்டிலும் உண்டு ஓர் உறுதி கிளைஞரை நீட்டி அளப்பதோர் கோல்’ என்ற வள்ளுவனின் குறளை நினைந்து கொண்டிருக்கிறேன்.