கல்வியும் கயமையும்!… சங்கர சுப்பிரமணியன்
“யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையுங் கல்லாதவாறு”
என்கிறார் வள்ளுவப் பெருந்தகை. இதன் பொருள் என்னவென்றால் கற்றவனுக்கு எல்லா நாடும் சொந்த நாடு போன்றது. எல்லா ஊரும் சொந்த ஊர் போன்றது. இதனைத் தெரிந்தும் ஒருவன் இறக்கும்வரை கூடப் படிக்காமல் இருப்பது ஏன் என்பதே இதன் பொருள்.
ஒருவன் கற்றிருந்தும் கற்றபடி நடக்காவிடில் அவன் கல்வி கற்றும் இறக்கும் வரைகூட கல்லாமல் இருப்பதற்கு சமம். இதுபோல்தான் சமூகத்திற்காக ஒன்றை எழுதுபவர்களும் அவர்கள் எழுதவதால் சமூகத்துக்கு ஏதாவதொரு வகையில்
உதவுவதாக இருக்க வேண்டும். அப்படி எழுதும் எழுத்துக்களால் பயன் இல்லையென்றால் அவர்கள் எழுதுவதின்
நோக்கம்தான் என்ன?
இதை எழுதுவதற்கு என்ன நோக்கம் என்றால் கேரளா பற்றி எல்லோரும் அறிந்து கொள்ளவேண்டும். ஒரு செய்தியாளர் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்.
கற்றவர்கள் அனைவரையும் கற்றவர்களாக சொல்லமுடியாது. இந்தியாவில் கல்வியிலேயே சிறந்தவர்கள் கேரள நாட்டைச் சார்ந்தவர்களாம். இதையே நான் ஒருவரிடம் சொன்னபோது அவர் என்னிடம் சண்டைக்கே வந்துவிட்டார். என்னப்பா ஒங்க ஊருக்கு பக்கத்து ஊர் கேரளா
என்பதால் பக்கத்து ஊர்ப் பாசமா? என்றார்.
இது நடந்தது பல ஆண்டுகளுக்கு முன் நான் திருநெல்வேலியில் தினமலரில் பணி புரிந்தபோது நடந்தது. என்ன நான் சொல்வது சரிதானே என்று வாதிட்டேன். அதற்கு அவர் சரிதான் சரிதான் இரண்டு பிள்ளைகள் இருக்கும் வீட்டில் இருவர் கற்றால் நூறுசதம்தான். ஐந்து பிள்ளைகள் இருக்கும் வீட்டில் நான்கு பிள்ளைகள் கற்றாலே என்பது சதம்தான் என்றார்.
அதை இப்போது நினைத்துப் பார்த்ததுடன் ஒரு செய்தியாளர் எப்படி இருக்க வேண்டும் என்பதை சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்வு மூலம் அறிந்தேன். மாயவரத்தில் மதுரம் என்ற பெண்ணுக்கு அறுபது வயதில் திருமணம் நடந்தது என்ற செய்திக்கு பதில் மக்களுக்கு நன்மை பயக்கும் செயலை எழுதுவது சிறந்தது எனவும் அறிந்தேன.
கடவுளர் தேசம் என்று சொல்லப்படும் கேரளாவில் இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும் என்று கடவுள் சொல்லி இருப்பாரோ என்னவோ? இல்லாவிடில் படித்தவர்கள் நிறைந்த இடம் என்று சொல்லப்படுப் கேரளாவில் இருந்து மூன்று டன் எடையுள்ள மருத்துவ கழிவுகளை திருநெல்வேலியில் சுத்தமல்லிக்கு பக்கத்திலுள்ள கிராமத்தினருகே கொட்டிவிட்டுச் செல்வார்களா?
இப்படி குப்பைகளை கொட்டிச் செல்வது இன்று நேற்றல்ல பதினைந்து இருபது ஆண்டுகளாக தமிழக எல்லையோரங்களில் கொட்டிச் செல்லப்படுகிறது. இக் கழிவுகள் ஆடு மாடுகளை வெட்டும்போது ஏற்படும் கழிவுகள், மருத்துவக் கழிவுகள், குப்பைகள், பிளாஸ்டிக் பொருட்கள் என்று பலவற்றை தொடர்ச்சியாக கொட்டி வந்தார்கள்.
இதை எதிர்த்து சுற்றுச் சூழல் போராளிகள் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் தமிழர் நலனில் அக்கறை கொண்ட அரசியல் கட்சிகள் என்று பலரும் போராடி வந்தார்கள்.
எந்த பலனும் கிட்டவில்லை.
ஆனால் இந்த ஆண்டில் கொஞ்சநாட்களுக்கு முன் திருவனந்தபுரம் புற்று நோய் மையத்திலிருந்து கொண்டுவரப்பட்ட கழிவுகள் சுத்த மல்லிக்கு அருகே உள்ள கிராமத்தில்
கொட்டப்பட்டன. அதுவும் மக்கள் பயன்பாட்டுக்குள்ளான ஆடுமாடு மேச்சல் பகுதியில் வயல்வெளிகளுக்கு அருகேயும் ஒரு நீர் ஓடையருகே நீர் ஓடைக்குள்ளுமாக இந்த மருத்துவ கழிவுகளை கொட்டிச் சென்றனர்.
இந்தியாவில் கல்வியில் பின் தங்கிய எந்த ஒரு மாநிலமும் கல்வியில் சிறந்தவர்கள் என்று மார்தட்டிக் கொள்ளும் இந்த மாநிலத்தைப் போன்று படுபாதகச் செயலை செய்ய மாட்டார்கள். ஏனென்றால் கல்விகற்றால் அறிவு வளருமேயொழிய அறிவற்றுப் போகும் நிலை ஏற்படாது. இதே கேரளக்காரர்கள் அவர்களின் அண்டை மாநிலமான கர்நாடகாவில் கொட்டுவார்களா?
இந்த வீர தீரச் செயலை அங்கே காட்டினால் அங்கு வாழும் மலையாளிகளுக்கு என்ன ஏற்படும் என்று சொல்லத் தேவையில்லை. தமிழன் என்றால் இழிச்ச வாயனா? இல்லையில்லை, தமிழ்நாட்டின் மீதும் தமிழ் மக்கள்மீதும் அக்கறையில்லாதவர்கள்
நாட்டை ஆள்வதால் கண்டு கொள்ளமாட்டார்கள் என்ற எண்ணம்தான்.
இல்லாவிட்டால் இப்படிப் பட்ட செயலைச் செய்ய எப்படித் துணிவு வரும்.
இனி என்ன நடந்தது என்று பார்ப்போம். இந்த குப்பை கொட்டிய செய்தியை ஒரு செய்தியாளர் அம்பலப்படுத்தினார். இவரது செயலைப் பாராட்டியே ஆகவேண்டும். அரசியல் தலைவருக்கு பிறந்தநாள் ஆட்டுக்குட்டி வயிற்றில் ஆமை இருந்தது என்று சமூகத்துக்கு தேவையற்ற செயலுக்கு இடமளிக்காமல் தேவை எதுவென உணர்ந்து செயலாற்றியுள்ளார்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸின் செய்தியாளரான திருநெல்வேலியைச் சேர்ந்த தினகரன் ராஜாமணி என்ற செய்தியாளர் இந்த குப்பை கொட்டியதை
செய்தியாக்குகிறார். இந்த குப்பைகளால் ஏற்படவிருக்கும் ஆபத்தை தொடர்ந்து தம் செய்திமூலம் வெளிப்படுத்துகிறார்.
இதனால் நாம் தமிழர் கட்சியுட்பட பல அமைப்புகள் போர்க்கொடியேந்தினர். அதன்பின்னர் சுத்தமல்லி காவல் நிலையம் இருவரை கைது செய்தனர். அப்படியும் குப்பை கொட்டுவது நிறுத்தப்படாமல் இன்னும் அதிக அளவில் கொட்டப்பட்டு வந்தது.
பொதுவாக செய்தியாளர்கள் தனக்கு புகழ்வர வேண்டும் வீணக கெட்டபெயர் எடுக்க கூடாது என்ற கண்ணோட்டத்தில் இருப்பார்கள். சீர்திருத்தம் என்பதெல்லாம் அவர்களுக்கு வேப்பங்காய்தான். ஆனால் தினகரன் ராஜாமணி இதை விடுவதாக இல்லை. தொடர்ந்து இச்செய்தியை வெளியிட்டு கேரள அரசின் கவனத்துக்கு செல்லும் அளவுக்கு செயலாற்றினார்.
அதன் பயனாக முதன் முதலாக கேரளாவிலிருந்து முப்பத்தியிரண்டு கொள்கலன்களில் இந்த குப்பைகளை அள்ளி கேரளாவுக்கே கொண்டு சென்றனர். இது ஒரு பத்திரிகையாளன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற செய்தியைச் சொல்லித் தருகிறது. என்ன எழுதினாலும் எதை எழுதினாலும் அதில் ஏதாவது நன்மை இருக்க வேண்டும். வெறுமனே எழுதுவதெல்லாம் உயிரற்ற எழுத்துக்களே.
அதற்கு அடுத்தபடி கல்வி கற்றவர்களும் தாங்கள் கல்வியாளர்கள் என்பதை உலகுக்கு உணர்த்தவே என்பதோடல்லாமல் தாங்கள் கற்ற கல்வியின்படி கண்ணியமாக நடந்து கொள்ளும் பண்பையும் வளர்த்துக் கொள்ளவேண்டும்.
“கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக” என்ற குறளின்படி கசடறக் கற்றவர்களால் மட்டுமே கற்றபடி நடந்து கொள்ளமுடியும்.
-சங்கர சுப்பிரமணியன்.