டிசம்பர் 27 இல் பிறந்த தினத்தை அமைதியாக கொண்டாடும் சட்டத்தரணி செல்வத்துரை ரவீந்திரன்! … முருகபூபதி.
ஒவ்வொரு வருடத்திலும் வரும் டிசம்பர் மாதத்தில் எனக்கு நன்கு தெரிந்த பலருக்கு பிறந்த தினம் வந்துகொண்டிருக்கிறது. இந்த மாதத்தில்தான் முழு உலகமும் நன்கு அறிந்த யேசு கிறிஸ்துவுக்கும் பிறந்த தினம் ( டிசம்பர் 25 ) வருகிறது.
மகாகவி பாரதியாரும் ஒரு டிசம்பர் மாதம்தான் பிறந்தார்.
வடபுலத்தில் உரும்பராயைச்சேர்ந்த ஓவியக் கலைஞர் செல்வத்துரை அய்யாவுக்கு ரவீந்திரநாத் தாகூரின் எழுத்துக்களில் அலாதிப்பிரியம். அதனால், தனக்கு மகன் பிறந்தால் ரவீந்திரன் என்ற பெயரைச்சூட்டுவதற்கு விரும்பியிருந்தார். செல்வத்துரை தம்பதியருக்கு இரண்டாவது புதல்வனாக 1943 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி பிறந்த, ரவீந்திரன், . கொழும்பு இரத்மலானை இந்துக்கல்லூரியிலும் படித்து சட்டக்கல்லூரியில் இணைந்து சட்டத்தரணியானவர்.
சில வருடங்களுக்கு முன்னர் வடபுலத்தில் மறைந்தவரும் தன்னார்வத்தொண்டரும் மனித உரிமை செயற்பாட்டாளரும், போர் நீடித்துக்கொண்டிருந்த காலப்பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களின் குரலை உலக நாடுகளை நோக்கி எழுப்பியவருமான அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதர் அவர்களின் அருமைத்தங்கை ஜெஸி அவர்களின் அன்புக்கணவரான ரவீந்திரன் அவர்கள் எம்மத்தியில் ரவி அண்ணன் என அன்புடன் அழைக்கப்படுபவர்.
இம்மாதம் 27 ஆம் திகதி தனது 81 ஆவது பிறந்த தினத்தை தனது குடும்பத்தினருடன் அமைதியாகக் கொண்டாடும் அவரை வாழ்த்துகின்றோம்.
அவுஸ்திரேலியா மெல்பனில் வதியும் சிரேஷ்ட சட்டத்தரணி செல்வத்துரை ரவீந்திரன். கலை, இலக்கிய ஆர்வலர். அத்துடன் அரசியல் ஆய்வாளர்.
இலங்கையில் ஏழு தசாப்தங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்ட தமிழ்க்காங்கிரஸ்,, தமிழரசு முதலான அரசியல் கட்சிகள் சட்டத்தரணிகளின் முகாம்களாகவே விளங்கியவை. இந்த முகாம்களிலிருந்து சமஷ்டி, சுயநிர்ணயம், தேசியம் பேசிய பலருடன் நெருக்கமான உறவுகளைக்கொண்டிருந்த ரவீந்திரன்,1983 இனக்கலவரத்தையடுத்து இங்கிலாந்து சென்று தமிழர் தகவல் நிலையம், தமிழ் அகதிகள் புனர்வாழ்வுக்கழகம் முதலான அமைப்புகளுடன் இணைந்தவர். அவுஸ்திரேலியா மெல்பனுக்கு வந்தபின்னரும் தனக்குத் தெரிந்த வழிமுறைகளில் தமிழர் சம்பந்தப்பட்ட பணிகளில் ஈடுபாடு காண்பிப்பவர். இவரது தங்கைதான் எழுத்தாளர் ( அமரர் ) அருண். விஜயராணி.
எண்பதுவயதை கடந்துவிட்ட போதிலும் ஓய்வுபெறாமல், தனது தொழில் சார்ந்த கடமைக்குச் சென்றுவருகிறார் இந்த அயராத உழைப்பாளி.
மெல்பனில் தமிழர் சார்ந்து முதல் முதலில் தோன்றிய இலங்கைத் தமிழ்ச்சங்கம் (C.T.A) – பின்னர் ஈழத்தமிழ்ச்சங்கமாகி (E.T.A) தற்போது விக்ரோரியா (V.T.A) தமிழ்ச்சங்கமாக மாறியிருக்கிறது.
ஐந்து தசாப்த காலத்திற்குள் இவ்வாறு பெயரில் உருமாறியிருக்கும் இந்த அமைப்பின் தொடக்க காலத்தின் உறுப்பினர்தான் சட்டத்தரணி ரவீந்திரன். இவர் இச்சங்கத்தின் துணைத்தலைவராக இருந்த காலப்பகுதியில்தான் 1987 இல் எனக்கு முதல் முதலில் அறிமுகமானார்.
எங்கள் அனைவருக்கும் ‘ரவி அண்ணன்’ ஆகியது இக்காலப்பகுதியில்தான். 1972 ஆம் ஆண்டு கொல்வின் ஆர் டீ. சில்வா உருவாக்கிய புதிய அரசியலமைப்பு ஏற்படுத்திய இடியப்பச்சிக்கலை இன்றுவரையில் அவிழ்க்கமுடியவில்லை. அந்த அரசியலமைப்பை அன்று மீறியதனால் அமிர்தலிங்கம் ஆனந்தசங்கரி உட்பட சில தலைவர்கள் கைதாகியிருந்தனர். அவர்களை மீட்பதற்காக நடந்த வழக்கு விசாரணைக்கு அன்று சூட்டப்பட்ட பெயர் ட்ரயல் அட் பார்.
அச்சந்தர்ப்பத்தில் பல தமிழ்ச் சட்டத்தரணிகள் இந்த வழக்கில் தோன்றினர். அவர்களின் நீண்ட பெயர்ப்பட்டியலைப்பார்த்து நான் வியப்படைந்தேன். தமிழர் உரிமைக்கு குரல்கொடுப்பதற்கு இத்தனை
தமிழ் சட்டத்தரணிகளா? சிவில் வழக்கறிஞர்கள் – கிரிமினல் வழக்கறிஞர்கள் அனைவரும் தங்கள் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை ஒதுக்கிவைத்துவிட்டு ஒன்றிணைந்து வெற்றியீட்டிய வழக்குத்தான் அந்த பிரசித்தி பெற்ற ட்ரயல் அட்பார் நீதி விசாரணை.
வீரகேசரியில் இடம்பெற்ற நீண்ட சட்டத்தரணிகளின் பெயர்ப்பட்டியலில் செல்வத்துரை ரவீந்திரனின் பெயரும் இடம்பெற்றிருந்தது. இவருடைய தொடர்பும் நட்புறவும் சகோதர வாஞ்சையும் எனக்கு அவுஸ்திரேலியாவில்தான் கிட்டியது. தமிழ் அகதிகளுக்கென ஒரு அமைப்பு உருவாகவேண்டிய தேவை இங்கே தோன்றியதும், அதனைப்பதிவுசெய்தோம். அதன் அமைப்பு விதிகளை ரவீந்திரன் அவர்களே தயாரித்துத் தந்ததுடன் அதன் காப்பாளராகவும் இயங்கினார். இதே காலப்பகுதியில் 1988 ஆம் ஆண்டு நவராத்திரி காலத்தில் சரஸ்வதி பூசை நடத்தி அந்த நிகழ்வில் இலங்கை மாணவர் கல்வி நிதியம் என்ற அமைப்பை அறிமுகப்படுத்தினேன்.
என்வசம் வந்து சேர்ந்திருந்த இலங்கையில் போரில் பாதிக்கப்பட்ட ஏழைத்தமிழ் மாணவர்களின் கோரிக்கைகள் அடங்கிய கோவைகள் சிலவற்றை அறிமுகப்படுத்திய அன்றைய நிகழ்வை மங்களவிளக்கேற்றி தொடக்கிவைத்தவர்தான் ரவிஅண்ணன். அவரே இந்தத்தன்னார்வத் தொண்டு நிறுவனத்திற்கும் அமைப்புவிதிகளை எழுதித்தந்ததுடன் விக்ரோரியா மாநிலத்தில் பதிவுசெய்தும் தந்தார். இந்த அமைப்பு 36 ஆண்டுகளை பூர்த்தி செய்தவாறு ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கும் உதவியிருப்பதுடன் தங்கு தடையின்றி இயங்கிவருகின்றது.
இந்த அமைப்பின் ஊடாக யாழ். மாவட்டத்தில் இயங்கும் சிறுவர் அபிவிருத்தி நிலையத்திற்கு தமது தந்தையார் ( அமரர் ) ஓவியர் செல்வத்துரை அவர்களின் ஞாபகார்த்தமாக கணிசமான நிதியை வைப்பிலிட்டு, மேலும் பல மாணவர்கள் பயன்படுவதற்கும் தமது குடும்பத்தினருடன் இணைந்து செயல்பட்டவர் ரவீந்திரன் அண்ணர் என்பதையும் இச்சந்தர்ப்பத்தில் நன்றியோடு நினைவுபடுத்துகின்றோம்.
1987 இற்குப்பின்னர் இலங்கையில் ரவி அண்ணரின் நண்பர்கள் தமிழ் அகதிகள் புனர்வாழ்வுக்கழகத்தின் ஸ்தாபகர் சட்டத்தரணி கே. கந்தசாமி மற்றும் அமிர்தலிங்கம் – வெ. யோகேஸ்வரன் ஆகியோர்
கொல்லப்பட்டனர். அவர்களுக்காக மெல்பனிலும் சிட்னியிலும் நடத்தப்பட்ட நினைவுக்கூட்டங்களிலும் ரவி அண்ணன் உரையாற்றினார். 1990 களில் ரவி அண்ணன் தலைமையில் மெல்பனில் அவுஸ்திரேலியத் தமிழர் ஒன்றியம் என்ற அமைப்பை உருவாக்கினோம். கதம்ப விழா -கலைமகள் விழா – பாரதி விழா – முத்தமிழ் விழா – நாடகம் -நடனப்பயிற்சி பட்டறைகளும் நடத்தினோம். மாணவர்களின் தமிழ்ப்பேச்சாற்றலை வளர்க்கவும் ஊக்குவிக்கவும் நாவன்மைப்போட்டிகளையும் நடத்தினோம். அவுஸ்திரேலிய முரசு இதழும் வெளியிட்டோம்.
ரவி அண்ணன் பேச்சுவார்த்தைகளில் மிகுந்த நம்பிக்கை கொண்டவர். அதனால் அவர் சந்தித்த சவால்களும் அநேகம். எமது தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் எழுத்தாளர் விழா கருத்தரங்குகள் சிலவற்றுக்கும் தலைமையேற்றவர். இவருக்கும் இலக்கிய கட்டுரைகள் சிறுகதைகள் எழுத முடியும்.
நாம் தொகுத்து வெளியிட்ட உயிர்ப்பு கதைத்தொகுதியிலும் ரவிஅண்ணனின் ஒரு சிறுகதை இடம்பெற்றுள்ளது. சிட்னியில் மறைந்த எழுத்தாளர்கள் காவலூர் ராசதுரை, எஸ்.பொன்னுத்துரை ஆகியோருக்காக மெல்பனில் நடந்த இரங்கல் கூட்டத்திற்கும் ரவி அண்ணன்தான் தலைமை ஏற்றார்.
சமகாலத்தில் ரவி அண்ணன், அரசியல் ஆய்வுக்கட்டுரைகளை எழுதிவருகிறார். அத்துடன் சிட்னியிலிருந்து ஒலிபரப்பாகும் , ஊடகர் சந்தியாலன் நடத்தும் Focus Thamil வானொலியில் பிரதி வெள்ளி இரவு தோறும் சுவடுகள் என்ற அரசியல் வரலாற்றுத் தொடரையும் தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியில் இலங்கை – இந்திய மற்றும் தமிழர் புகலிடதேசங்களிலிருந்தும் பல அரசியல்வாதிகளையும், அரசியல் விமர்சகர்ளையும் இணைத்து அவர்களின் கருத்துக்களையும் வெளிப்படுத்திவருகிறார்.
அமுத விழாவையும் கண்டபின்னரும் ஓய்வின்றி இயங்கும் எங்கள் பிரியத்திற்குரிய ரவி அண்ணருக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
—-0— letchumananm@gmail.com