நாய்கள் ஊளையிடுவதற்குப் பின்னால் இத்தனை விஷயங்கள் இருக்கா?
இரவு நேரங்களில் திடீரென நாய்கள் ஊளையிடும் சத்தம் சிலருக்கு அச்சத்தையும், சிலருக்கு குழப்பத்தையும் ஏற்படுத்தும். ஆனால், ஏன் நாய்கள் இப்படி ஊளையிடுகின்றன தெரியுமா? நாய்களின் இந்த வினோதமான நடத்திக்குப் பின்னால் உள்ள காரணங்களைப் பார்க்கலாம்.
முதலில், நாய்கள் ஊளையிடுவதற்கு முக்கிய காரணம் தகவல் தொடர்பு. தொலைவில் இருக்கும் மற்ற நாய்களுக்கு தங்கள் இருப்பிடத்தை அறிவிக்க இவை அவ்வாறு செய்கின்றன. இது ஓநாய்களின் நடத்தையிலிருந்து வந்த ஒரு பழக்கமாகும். ஓநாய்கள் கூட்டமாக வாழும் விலங்குகள். அவை தங்கள் கூட்டத்தின் எல்லைகளைப் பாதுகாக்கவும் மற்ற கூட்டங்களுடன் தொடர்பு கொள்ளவும் ஊளையிடுகின்றன. ஒரு வகையில் நாய்களும் ஓநாய் இனத்தைச் சேர்ந்தவை என்பதால், அதே முறையைப் பின்பற்றுகின்றன.
சில நேரங்களில் நாய்கள் தனிமையை உணரும்போது அல்லது துக்கத்தில் இருக்கும்போது ஊளையிடும். வீட்டில் தனியாக இருந்தாலோ, தங்கள் உரிமையாளரைப் பிரிந்தது போல உணர்ந்தாலோ அவை இவ்வாறு செய்யலாம். இது அவற்றின் உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒரு வழியாகும். ஒரு சில நாய்கள் சைரன் சத்தம், மற்ற நாய்கள் ஊளையிடும் சத்தத்தை கேட்டால் அதேபோல ஊளையிடும். இது ஒரு வகையான பதில் தெரிவிக்கும் நடத்தை.
நாய்களுக்கு உடல்நலக் குறைபாடு ஏற்பட்டால் ஊளையிடும். வலி அல்லது அசௌகரியத்தை அவை உணரும்போது இவ்வாறு செய்வதாக சொல்லப்படுகிறது. நாய்கள் ஓநாகளில் இருந்து தோன்றியவை என்பதால், பரிணாம வளர்ச்சியின் தாக்கம் நாய்களிடமும் உள்ளது. இதன் காரணமாகவே நாய்கள் ஊளையிடுகின்றன.
சில ஆய்வுகளில் நாய்கள் ஊளையிடும்போது அவற்றின் மூலையில் சில குறிப்பிட்ட பகுதிகள் செயல்படுகின்றன என்பது கண்டறியப்பட்டுள்ளது. இது அவற்றின் முற்றிலும் வித்தியாசமான நடத்தையாகும். இரவில் நாய்கள் ஊளையிட்டால் அது அபசகுணம் என பலர் கருதுகின்றனர். இதன் காரணமாகவே இரவில் கத்தும் நாய்களை அனைவரும் துரத்துவார்கள். இது அமானுஷ்ய சக்தி வருகிறது என்பதற்கான அறிகுறி என்ற மூடநம்பிக்கைகளும் உள்ளன.
நாய்கள் ஊளையிடுவதற்குப் பின்னால் பரிணாம வளர்ச்சி, சமூக நடத்தை உணர்வுகளின் வெளிப்பாடு போன்றவை உள்ளன. மூடநம்பிக்கைகளை ஒதுக்கிவிட்டு அறிவியல் பூர்வமாகப் பார்த்தால் இது ஒரு சாதாரண விஷயம் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.