இலவச புற்றுநோய் தடுப்பூசியை அறிமுகப்படுத்தும் ரஷ்யா!
மெஸ்கோவின் சுகாதார அமைச்சின் கதிரியக்க மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் பொது பணிப்பாளரான Andrey Kaprin அண்மையில் ரஷ்ய வானொலியில் இந்த தகவலை வெளியிட்டதாக அந் நாடு அரசுக்குச் சொந்தமான செய்தி நிறுவனம் TASS செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த தடுப்பூசியானது புற்றுநோயைத் தடுப்பதற்காக பொது மக்களுக்கு வழங்கப்படுவதற்குப் பதிலாக, புற்றுநோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும்.
மேற்கத்திய நாடுகளில் உருவாக்கப்படும் புற்றுநோய் தடுப்பூசிகளைப் போலவே, ஒவ்வொரு நோயாளிக்கும் தடுப்பூசி தனிப்பயனாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், தடுப்பூசி எந்த வகையான புற்றுநோய்களுக்கு சிகிச்சையளிக்க பயன்படும், எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும், அது எவ்வாறு வழங்கப்படும் என்பது போன்ற விடயங்கள் இன்னும் தெளிவுபடுத்தப்படவில்லை.
ரஷ்யாவில் புற்றுநோய் விகிதங்கள் அதிகரித்து வருகின்றன. 2022 இல் மாத்திரம் 635,000 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுக்க உதவும் மனித பாப்பிலோமா வைரஸ்களுக்கு (HPV) எதிரான தடுப்பூசிகள் போன்ற புற்றுநோயைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்ட தடுப்பூசிகள் சந்தையில் ஏற்கனவே உள்ளன.
அமெரிக்காவில், புளோரிடா பல்கலைக்கழகத்தில் உள்ள நரம்பியல் விஞ்ஞானிகள் மூளை புற்றுநோய்க்கான தனிப்பயனாக்கப்பட்ட எம்ஆர்என்ஏ தடுப்பூசியை பரிசோதித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.