2024 பொதுத் தேர்தல் ஓர் ஊடறுப்புப் பார்வை … கற்றுத்தந்த பாடங்கள்!…. சின்னத்தம்பி குருபரன்.
இலங்கையின் அரசியல் வரலாற்றில் இவ்வாண்டில் நடந்து முடிந்த இரு தேர்தல்களும் பல கேள்விகளையும் ஆச்சரியங்களையும் விட்டுச் சென்றிருக்கின்றன. இரு தேர்தல்களின் முடிவுகள் மூலம் காலங்காலமாகப் பேணப்பட்டு வந்த மேல்தட்டு வர்க்க அரசியல் பாரம்பரியம் கேள்விக் குறியாகி நிற்கின்றன. ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இரண்டும் மாறி மாறி ஆட்சி செய்த பரம்பரை, குடும்ப வாரிசு அரசியலுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. நாட்டின் அரசியல், ஆட்சி அதிகாரம், முறைமை மாற்றத்தை நேசித்த மக்களால் இடதுசாரிகளிடம் கையளிக்கப்பட்டிருக்கிறது.
இந்த மாற்றத்துக்கு இலஞ்சம், ஊழல், மோசடி, அதிகார துஸ்பிரயோகம் என்பவற்றால் நாட்டின் ஜனநாயகம் சீர்குலைந்து போயிருந்தது. அது கிட்டத்தட்ட நோய்வாய்ப்பட்டுப் படுத்த படுக்கையாகிக் கிடந்தது. இலங்கையில் 2022 இல் ஏற்பட்ட அரசுக்கெதிரான புரட்சியைத் தொடர்ந்து சிறிது சிறிதாகச் சிகிச்சை அளிக்கப்பட்டு 2024 ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் சற்றுத் தலை நிமிர்ந்திருக்கிறது. அது சுதந்திரமாக நடமாடுவது புதிய ஆட்சியாளர் கையில் இருக்கிறது. இலஞ்சம், ஊழல், மோசடி, அதிகார துஸ்பிரயோகத்துக்குக் காரணமாக இருந்த 80 முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து ஒதுங்கியமை ஜனநாயகத்துக்குக் கிடைத்த ஓர் ஆறுதல் வெற்றியாகும். தேர்தல் முடிவில் இருந்து அரசியலில் ‘பழந் தின்று கொட்டை போட்ட’ 70 பேர்வரைப் படுதோல்வி அடையச் செய்து வீட்டுக்கு அனுப்பியமை ஜனநாயகத்துக்குக் கிடைத்த மற்றுமொரு வெற்றியாகும். இவ்வெற்றியானது எதிர்வரும் காலத்தில் சட்டவாக்கம், சட்ட நிருவாகம், சட்ட நிறைறே்றம் ஆகியவற்றின் ஊடாக உறுதி செய்யப்படுவதில் தங்கியிருக்கிறது.
சுதந்திரத்துக்குப் பின்னரான அரசியல் வரலாற்றில் ஜனாதிபதித் தேர்தல், பொதுத் தேர்தல் ஆகிய இரண்டும் மிகவும் அமைதியான நடந்த தேர்தல்களுக்கு உதாரணமாகக் கொள்ளப்படுவதாக உலக அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். . 14-11-2024 அன்று நடைபெற்ற 10 வது நாடாளுமன்றப் பொதுத தேர்தலில் வாக்களிப்பதற்கென 17,140,354 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். அவர்களில் நாடு முழுவதும் 11,815,246 பேர் வாக்களித்திருந்தனர். இது மொத்த வாக்காளர்களில் 68.93 வீதமாகும். அளிக்கப்பட்ட வாக்குகளில் செல்லுபடியான வாக்குகள் 11.148,006 (94.35%) ஆகும். அளிக்கப்பட்ட வாக்குகளில் 667,240 (5.65%) வாக்குகள் நிராகரிக்கப்பட்டன. பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகளில் நாடு முழுவதும் 5,325,108 (31%) வாக்குகள் அளிக்கப்படவில்லை. இத்தேர்தலில் அதிகப்படியான வாக்குகள் நுவரெலியா மாவட்டத்திலும் மிக்குறைந்த 50 வீதமான வாக்குகள் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்திலும் அளிக்கப்பட்டிருந்தன.
பொதுவாக வாக்களிப்பு மந்தமாக நடைபெற்றதாகக் தேர்தல்கள் கண்காணிப்புக் குழுக்கள் தெரிவித்திருந்தன. வாக்களிப்பில் ஜனாதிபதித் தேர்தலையும்விடப் பொதுத் தேர்தலில் 10 வீதம் வீழ்ச்சியடைந்திருந்தன.
இப்பொதுத் தேர்தலில் 31 வீதத்துக்கு மேற்பட்ட மக்கள் வாக்களிப்பில் பங்கு கொள்ளவில்லை என்பதும், அளிக்கப்பட்ட வாக்குகளில் 667,240 வாக்குகள் செல்லுபடி அற்றதாகவும், இரண்டு மாத கால இடைவெளிக்குள் (செப்டெம்பர் 21 – நவம்பர் 14) 10 வீதமான வாக்குப் பதிவு வீழ்ச்சியும் பல கேள்விகளையும் ஐயங்களையும் எழுப்பி நிற்கின்றன. இருந்தும் தேசிய மக்கள் சக்தி எந்தக் கட்சிகளுடனும் கூட்டுச் சேராமல் மட்டக்களப்புத் தேர்தல் மாவட்டம் தவிர 21 மாவட்டங்களைத் தமதாக்கி வெற்றிவாகை சூடியிருந்தது. வரலாற்றில் வடக்கு, கிழக்கு மகாணங்களையும் தம்வசப்படுத்தி வெற்றி உறுதி செய்யப்பட்டிருந்தது. நாடு முழுவதும் அளிக்கப்பட்ட செல்லுபடியான வாக்குகளில் 6,883,186 வாக்குகளைப் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்திருந்தது. இது 61.56 வீதமாகப் பதிவு செய்யப்பட்டிருந்தது. 168 தொகுதிகளில் இருந்து தேர்தல் மூலம் வெற்றி பெற்ற 196 ஆசனங்களில் 141 உம் தேசியப் பட்டியல் மூலம் 18 ஆசனங்களையும் உள்ளடக்கி மொத்தமாக 159 உறுப்பினர்களைத் தம்வசப்படுத்தி மூன்றில் இரண்டுக்கு மேற்பட்ட பெரும்பதன்மையை உறுதி செய்தது. 1978 அரசியல் யாப்பின்படி ஒரு கட்சி தனித்து நின்று இப்பெரும்பான்மை பெற்றிருப்பது விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறைமைக்குக் கிடைத்த முதலாவது வெற்றியாக பொதுத் தேர்தல் வரலாற்றில் பதிவு செய்யப்படுகிறது.
இலங்கை அரசியல் வரலாற்றில் மேட்டுக்குடி ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுமே தமது அரசியல் கொள்கை எனும் வட்டத்துக்குள் நின்றுகொண்டு மாறிமாறி ஆட்சி செய்து வந்தன. 2017 இன் பின்னர் பொதுஜனப் பேரமுனய என்ற பெயரில் கட்சி மாறியது ஆட்கள் மாறவில்லை. அவர்கள் 2019 இறுதியில் ஆட்சியைக் கைப்பற்றியதனால் இலஞசம், ஊழல், மோசடி, அதிகார துஸ்பிரயோகமென்று நாட்டை வங்குரோத்து நிலைக்குக் கொண்டு வந்து நிறுத்தினர். அதனால் நாட்டில் அரசியல், பொருளாதார நெருக்கடியும் கொறோனாவும் சேர்ந்து நாட்டையும் நாட்டு மக்களையும் மிகமோசமாகப் பாதித்தது. அரசியல், பொருளாதார நெருக்கடி, பொருட்களின் தட்டுப்பாடு, விலையேற்றம் ஆகியன அரசுக்கெதிரான மக்கள் போராட்டத்தைத் தோன்றுவித்தன. போராட்டக்காரர்கள் ஆட்சியைக் கவிழ்த்து அரசியலில் முறைமை மாற்றம் வேண்டி நின்றனர். இருந்தும் ரனில் விக்கிரமசிங்கா தலைமையிலான அரசாங்கம் அதே ஊழல், மோசடிப் பேர்வழிகளைக் கொண்டிருந்தமையினால் இரண்டு வருடற்களின் பின்னர் தூசு தட்டி அமைதி வழியில் தேர்தல்கள் மூலம் ஜனநாயக வழிமுறையில் ஆட்சியை மாற்றி இருக்கின்றனர். இம்மாற்றம் ஜனநாயகத்திற்குக் கிடைத்த வெற்றியாகக் கொள்ளப்படுகிறது.
தேசிய மக்கள் சக்தி 2019 ஜனாதிபதித் தேர்தலிலும் 2020 பொதுத் தேர்தலிலும் 4 வீத வாக்குகளை மாத்திரமே பெற்று நாடாளுமன்றத்தில் மூன்று ஆசனங்களையே பொண்டிருந்தது. இத்தேர்தலில் 61.5 வீத வாக்குகளைப் பெற்றிருக்கிறது என்றால் எவ்வாறு முடிந்தது. மக்கள் விடுதலை முன்னணியாகத் தேர்தல்களில் களம் இறங்கி இருந்திருந்தால் தேசிய மக்கள் சக்தி இச்சாதனை படைத்திருக்க முடியாது. அத்தோடு அனுரகுமார திஸாநாயக்காவின் அணுகுமுறையும் சாணக்கியமும், ஆடம்பரமற்ற அமைதியான பேச்சும், போராட்டக்காரர்கள் முன்வைத்த முறைமை மாற்றமும், அரகலயப் போராட்டமும், கட்சிக்குள் செய்து கொண்ட கட்டமைப்பு மாற்றமும், மத்தியதர மற்றும் அடித்தட்டு மக்களையும் கிராமங்களையும் நோக்கிய பிரச்சார உத்தியும், கடந்த காலங்களில் மக்கள் அனுபவித்த வேதனைகளும் வலிகளும், ஊழல், மோசடி, அதிகார துஸ்பிரயோகம் என்பவற்றை அம்பலப்படுத்தியமையும், மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளும் சேர்ந்து தேசிய மக்கள் சக்தியால் இந்த வெற்றிச் சாதனைகளை எட்ட முடிந்தது. அத்தோடு ஜனாதிபதித் தேர்தலில் அனுரகுமார வெற்றி பெற்றுப் பதவி ஏற்றதும் நிலை குலைந்திருந் எதிரிகள் சுதாகரிப்பதற்கு முன்னதாகச் சூட்டோடு சூடாக நாடானுமன்றத்தைக் கலைத்துத் தேர்தலை நடத்தி முடித்தமையும் இந்த வெற்றிக்குக் காரணமாக அமைந்தது.
நடந்து முடிந்த இத்தேர்தல்களில் மேட்டுக் குடியினரின் அரசியல் கலாசாரம் ஆட்டம் கண்டிருக்கிறது. அவர்கள் சார்ந்த கட்சிகளும் கூட்டணிகளும் படு தோல்வியைத் தழுவி இருக்கின்றன. அதேபோல் ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இரண்டும் அரசியலில் இருந்து 2020 முதல் ஓரம் கட்ப்படடிருக்கின்றன. அக்கட்சிகளில் இருந்து பிரிந்து சென்று புதிய கட்சி, கூட்டணி அமைத்துப் போட்டியிட்டவர்களும் ஐக்கிய மக்கள் சக்தி தவிர எல்லாமே மக்களால் நிராகரிக்கப்பட்டிருக்கின்றன. ஊழல், மோசடி, அதிகார துஸ்பிரயோகம் செய்து, வீராப்புப்பேசி மக்களை ஏமாற்றும் அரசியல்வாதிகள் ஓரங்கட்டப்படுவார்கள் என்ற செய்தி ஆணித்தரமாக உறுதி செய்யப்கட்டிருக்கிறது. நாட்டின் அபிவிருத்தி, மக்கள் நலன் பேணாது போக்குக் காட்டும் அரசியல்வாதிகள் நாடாளுமன்றத்தில் அமர்த்தப்படமாட்டார்கள் என்பதை உறுதி செய்து புதிய ஓர் அத்தியாயம் எழுதப்பட்டிருக்கிறது. மக்களிடத்தில் மாற்று அரசியல் சிந்தனை வலுப்பெற்றிருக்கிறது.
ஐக்கிய மக்கள் சக்தி ஜனாதிபதித் தேர்தலிலும் பொதுத் தேர்தலிலும் எதிர்பார்த்த வெற்றியை அடைய முடியாமல் தோல்வி கண்டிருக்கிறது. இத்தோல்விக்கு ஊழல், மொசடிப் பேர்வழிகளையும், மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களையும், மக்கள் செல்வாக்கு இல்லாத 60 வயதுக்கு மேற்பட்ட பலரையும் கட்சிகளையும் இணைத்துக் கொண்டு, முறைமை மாற்றத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காது, வேட்புமனுக்களில் இளைஞர் யுவதிகளுக்கு உரிய இடம் வழங்கப்படாது அவர்களை நிராகரித்து, தேர்தல் பரப்புரைகளில் அரைத்த மாவையே அரைத்தமையினால் மக்கள் வெறுப்படைந்து அவர்களை நிராகரித்தார்கள். பல வேட்பாளர்கள் பரப்புரைக்குச் சென்ற இடங்களில் எதிர்ப்பையும் வெறுப்பையும் சந்தித்தார்கள்.
அத்தோடு ஐக்கிய மக்கள் சக்திக்குள் இருந்த பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்தப் பக்கம் போகப் போகிறேன் இந்தப் பக்கம் சேரப் போகிறேன் என்று போக்குக் காட்டிக் கொண்டு இருந்தமையும் கட்சியின்மீதும், கட்சித் தலைவர்மீதும் மக்கள் வெறுப்படைவதற்குக் காரணமாக இருந்தன.
வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள தமிழ் கட்சிகள் தமக்குள் போட்டி போட்டுக் கொண்டு கூட்டணி அமைத்துத் தேர்தலில் போட்டியிட்டன. போட்டியிட்ட தமிழ் அரசியல்வாதிகளுக்கிடையே ஒற்றுமையின்றிச் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்திப் பல வேட்பாளர்களைக் கேவலப்படுத்தித் தாம் வெற்றி பெற்றிருக்கிறார்கள். தமிழரசுக் கட்சி பிரிந்து பல துண்டங்களாகித் தமது கட்சிசார்ந்த வேட்பாளர்கள் பலரைக் குழிபறித்து பரப்புரைகள் செய்து கோட்டை விட்டார்கள். தமிழரசுக் கட்சி, ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பு, கஜேந்திரகுமார் அணி, விக்கினேஸ்வரன் அணி ஆகியவற்றில் மக்கள் கொண்ட வறுப்பின் காரணமாக யாழ்பாணம் தேர்தல் மாவட்டத்தில் பெரும்பாலான மக்கள் வாக்களிப்பதைத் தவிர்த்திருந்தனர். யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்துக்குள் கிளிநொச்சி நிருவாக மாட்டம் இணைந்திருப்பதனால் தமிழரசுக் கட்சி ஒரு ஆசனத்தைப் பெற முடிந்தது. அந்த ஆசனத்தை சிறிதரன் தனித்துச் சுயெச்சைக் குழுவில் போட்டியிட்டிருந்தாவும் பெற்றிருப்பார்.
வன்னி, திருகோணமலை, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் ‘கல்லில் நாருரிப்பதுபொல் இரவு பகலாகப போராடித் தமிழரசுக் கட்சி தலா ஒவ்வொரு ஆசனங்களைக் கைப்பற்றிக் கொண்டது. மட்டக்களப்பில் தமிழரசுக் கட்சி மூன்று ஆசனங்களை வென்று தமிழ் தேசியத்தை நிலை நிறுத்தியமைக்கான வீராப்புப் பேசிய வெற்றி வேறு வகையாக அமைந்திருந்தது.
மட்க்களப்பு மாவட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சி பெற்ற மூன்று ஆசனமென்பது பல கட்சிகளினதும் அதன் பிரதம வேட்பாளர்களினதும் சுயநலம், பலவீனம் என்பவற்றால் நிகழ்ந்த ஒன்றாகும். பொதுவாக ஒருவரின் வெற்றி என்பது மற்றொருவரின் பலவீனத்துக்கூடாகக் கட்யெழுப்பப்படுகிறது. அவ்வாறு கற்ற பாடமே தமிழரசுக் கட்சியினரால் பின்பற்றப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
வேட்பாளர்களின் தனிப்பட்ட இரகசியங்கள், தில்லுமுல்லுகள், பாதகங்கள், ஊழல்கள், மோசடிகள், அதிகார துஸ்பிரயோகங்கள் ஆகயன பேசுபொருட்களாக்கப்பட்டுச் சாணக்கியமாகச் சமூக வலைத்தளங்களில் திட்டமிட்டுப் பதிவிடப்பட்டு வைரலாகி வாக்காளர்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தின. அதன் விளைவு ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குக் கிடைக்க வேண்டிய ஆசனம் தட்டிப் பறிக்கப்பட்டு தமிழரசுக் கட்சி வசமாகியது. அத்தோடு ஜனாதிபதித் தேர்தலில் ஆரம்பத்தில் ரனிலுக்கும், இறுதியில் வாக்குமாறிச் சஜித் பிறேமதாசாவுக்கும் ஆதரவு வழங்கிப் பரப்புரைகள் செய்வதற்காக வழங்கப்பட்ட பல கோடிகள் பங்கிடப்பட்டுப் பொதுத் தேர்தலின்போது வாக்காளர்களுக்குப் பணம், மதுபானம், விருந்துபசாரம், உலருணவுப் பொதிகள் வாரி இறைக்கப்பட்டன. தேர்தலுக்கு முன்னர் 12, 13 ஆந் திகதிகளில் தேர்தல் சட்டங்களை மீறிய பல செயற்பாடுகள் அரங்கேற்றப்பட்டன.
மேலும் கட்சிகளினதும் சுயெச்சைக் குழுக்களினதும் வேட்பாளர் பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருந்த பல வேட்பாளர்கள் ஊழல், மோசடிகள், துஸ்பிரயோகம் என்பவற்றில் ஈடுபட்டவர்களாகவும் வாக்குக் கேட்கும் தைரியம் அற்றவர்களாகவும், மக்களிடயே பிரபலம் இல்லாதவர்களாகவும் இருந்தமையாலும் வேறு தெரிவு இல்லாமையாலும் பல ஆயிரக் கணக்கான வாக்காளர்கள் வேறுவழியின்றித் தமிழரசுக் கட்சிக்கு வாக்களித்தனர்.
21 மாவட்டங்களைக் கைப்பற்ற தேசிய மக்கள் சக்தி மட்டக்களப்பு மாவட்டத்தைக் கைப்பற்றாமல் போனமைக்கு அக்கட்சியின் பிரதம வேட்பாளர் காரணமாக இருந்தார். அவரின் சுயெச்சையான நடவடிக்கைகள் தீர்மானங்கள் தொடர்பாக கிழக்கு மாகாண மாற்றுச் சிந்தனைக்கான அரசியல் அணி கட்சியின் மத்திய குழுவுக்கு மின்னஞசல், தொலைபேசி அழைப்புக்கள் மற்றும் நேரடிச் சந்திப்பிலும் எடுத்துக் கூறிய போதும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
ஜனாதிபதித் தேர்தலில் கிடைத்த வாக்குகள் கட்சிக்குக் கிடைத்தால் தான் மாத்திரம் வெற்றி பெறலாம் என்ற நப்பாசையில் மும்முரமாகச் செயற்பட்டார். அத்தோடு வேட்பாளர் பட்டியலில் மாவட்டத்தில் பிரபலமானவல்களை உள்ளடக்கினால் தனது வெற்றி பறிபோய்விடும் என்ற சுயநலமும் அவருக்கிருந்தது. 2020 பொதுத் தேர்தலில் பிள்ளையான் கடைப்பித்த கொள்கையை இவரும் கடைப்பிடித்து வெற்றி கண்டார். இவரினாலும், என்பிபி மத்திய குழு உரிய காலத்தில் உரிய நடவடிக்கை எடுக்காததனாலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டு ஆசனங்கள் கிடைக்காமல் தமிழரசுக் கட்சிக்குக் கைமாறின. இதே பலவீனமே சிவனேசதுரை சந்திரகாந்தனிடமும் காணப்பட்டது. அதனால் அவரின் ஆசனமும் பறிபோனது. இத்தகைய பலவீனங்கள் தமிழரசுக் கட்சி மூன்று ஆசனங்கள் பெறுவதற்குக் காரணமாய் அமைந்தது.
இப்பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி, இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஸ்ரீலங்கா முஸலம் காங்கிறஸ், அகில இலங்கை தமிழ் காங்கிறஸ், இலங்கைத் தொழிலாளர் காங்கிறஸ், அகில இலங்கை மக்கள் காங்கிறஸ், ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பு, மலையக ஐக்கிய முக்கணி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகிய கட்சிகளின் ஆசன எண்ணிக்கை குறைந்திருக்கின்றன.
தேர்ல்தல்கள் மூலம் 2015 முதல் கற்ற பாடம் அரசியல்வாதிகளிடமும் மக்களிடமும் தெளிவாகத் தென்படுகிறது என்பதை 2024 தேர்தல்கள் உறுதி செய்திருக்கின்றன. மக்கள் முறைமை மாற்றத்தை அங்கீகரித்துத் தேசிய மக்கள் சக்தியின் வாக்குறுதிகளை நம்பி மாற்றத்தை உளமார நேசித்து வாக்களித்திருக்கின்றனர். வாக்களித்த மக்களுக்கு ஆற்றப்பட வேண்டிய பணிகளை ஆற்றத் தவறினால் ஐ.தே.க, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, பொதுஜனப் பேரமுனய ஆகிய கட்சிகளுக்கு நடந்ததை நடத்திக் காட்டுவார்கள். ஆகவே தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஐந்து வருட காலத்துக்குள் தாம் அளித்த வாக்குறுதிகளை முடிந்தவரை நிறைவேற்றுவதில் கவனமெடுக்க வேண்டும்.
மூன்றில் இரண்டுக்கு மேல் பெரும்பான்மை கிடைத்திருக்கிறது. பலம்வாய்ந்த எதிர்க்கட்சி ஒன்றில்லை என்ற இறுமாப்பில் பாராளுமன்றத்தில் நடந்து கொண்டால் முன்னைய ஆட்சியாளர்களுக்கு நடந்த கதியே நடக்கும் என்ற எச்சரிக்கையும் விடப்பட்டிருக்கிறது. அத்தோடு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலம் கிடைத்த காலத்திலெல்லாம் நாட்டில் போராட்டங்களும் இரத்த ஆறும் ஓடியிருக்கிறது என்பதையும் ஆட்சியாளர்கள் மறந்துவிடக்கூடாது. இவற்றைக் கருத்தில் கொண்டு ஆட்சியாளர்கள் செயற்படுவது சிறந்ததாகும்.
அமைச்சுக்கள், திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள், சபைகள், அரச நிறுவனங்கள் ஆகியவற்றில் புரையோடிப் போயிருக்கின்ற இலஞ்சம், ஊழல், மோசடி, அதிகார துஸ்பிரயோகம் ஆகியவற்றை ஒழிப்பதில் கூடிய கவனம் செலுத்த வேண்டும். சகல மோசடிகளிலும் ஈடுபட்டு, அதிகார துஸ்பிரயோகம் செய்து மக்களுக்குச் சேவை செய்யாது தனி இராசாங்கம் நடாத்தும் திணைக்களத் தலைவர்களை இனங்கண்டு அவர்கள்மீது தயவு தாட்சண்யமின்றிச் சட்ட நடவடிக்கை எடுத்தல் வேண்டும். நட்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களை மறுசீராக்கம் செய்தயப்பட்டு மக்கள்மயம் அல்லது தனியார்மயமாக்கல் வேண்டும்.
சகல வியபார, வணிக நிறுவனங்களின் விற்பனைப் புரள்வு வரியின்மீது கவனம் செலுத்தி அரச வருமானத்தை அதிகரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். நேர்வரி, நேரில்வரியில் ஏய்ப்புச் செய்பவர்களை இனங்கண்டு சட்டத்தின்முன் நிறுத்த வேண்டும். இவை ஓரிரு வருடங்களுக்குள் செய்யப்பட வேண்டிய நடவடிக்கைகளாக இருத்தல் அவசியமாகும்.
உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்து பொருட்களின் விலையைக் குறைத்து, மக்களின் வாழ்க்கைச் செலவைக் கட்டுப்படுத்தி வாழ்க்கைச் சுமையைக் குறைப்பது பல பிரச்சினைகளுக்குத் தீர்வாக அமையும். இதனைச் செய்வதன்மூலம் உள்ளூராட்சிச் சபைகள், மாகாண சபைகளுக்கான தேர்தல்களிலும் தேசிய மக்கள் சக்தி இதே சாதனைகளைப் புரியலாம்.