இலக்கியச்சோலை

பவளவிழாவை கடக்கும் படைப்பாளி தேவா! …. முருகபூபதி.

சிலம்பினுள்ளே ஒரு செல்வியை கண்டவர், செல்விகளின் குரலாக உயர்ந்தார் !

முருகபூபதி.

” இந்திரவிழாவினை மிகச்சிறப்பாகக் கொண்டாடிக்கொண்டிருக்கிறது பூம்புகார். பட்டும் பவளமும் சந்தனமும் அகிலும் முத்தும் மணியும் பொன்னுமாக நிறைந்த விண்ணுலகோ ? என ஐயுறவுகொள்ள நினைத்தன——– நகைகள் அணிந்து நனிசிறக்க மாதவியும் கோவலனும் இன்பம் துய்க்கின்றனர். இவ்வரிய வேளையிலே கானல் வரியினை கோவலன் இசைக்கின்றான். மாதவி தான் ஒன்றின் மேல் பாடுவாள் போல் இசைத்தாள். இதனைக்கேட்ட கோவலன் சினக்கின்றான். வெறுக்கின்றான்.

கானல்வரி யான்பாடத் தான் ஒன்றின் மேல் மனம் வைத்து மாயப்பொய் பல கூட்டும் மாயத்தாள் பாடினாள் யாழ் இசைமேல்வைத்து தன்ஊழ்வினை வந்து உருத்தது ஆதலின்— என்றவாறு மாதவியை உதறி , கண்ணகியைக் காணச்செல்கின்றான் கோவலன் ” இவ்வாறு ஒரு பந்தி சிலம்பினுள்ளே ஒரு செல்வி என்ற கட்டுரையில் தொடங்குகிறது.

இது எழுதப்பட்ட காலம் இலங்கையில் 1967 ஆம் ஆண்டு.

இவ்வாறு எழுதியவர், சுமார் 31 ஆண்டுகளின் பின்னர், 1998 ஆம் ஆண்டு அய்ரோப்பாவில், ” கண்ணகி அந்தக்கடற்கரையோரத்திலிருந்து கடலையே வெறித்துக்கொண்டிருந்தாள். நீண்ட அடர்த்தியான அவளுடைய கூந்தல் அலை அலையாய்— கருநீலம் கொண்டதாய், இவள் முகத்தைப்பார்க்கத் துணிந்தேன். கோபம் தணிந்திருப்பாள். இவள் என்னைக் கவனித்ததாகவே தெரியவில்லை. ஆனால், அவள் முகத்தில் பெரியதொரு திருப்தி காணப்பட்டது. எங்காவது சிலம்பொன்று தென்படுகிறதாவெனத்தேடினேன். இல்லை. கடைசியாய் அவளிடமிருந்த ஒரு சிலம்பையுமே பாண்டிய மன்னனுக்கு முன்னால் போட்டு உடைத்துவிட்டாளே, எனத்தொடங்கி, என் கையை கண்ணகியி

ன் தோளில் வைத்தேன். அவள் குளிராய் இருந்தாள். விறைத்துப் போயிருந்தாள். கல்லாய்ச்சமைந்திருந்தாள்” என்று சிலம்புச்சிலை என்ற சிறுகதையை முடிந்திருக்கிறார்.

புதுமைப்பித்தனின் சாபவிமோசனம் என்ற புகழ்பெற்ற சிறுகதையுடன் ஒப்புநோக்கக்கூடியது இச்சிறுகதை.

இங்கு குறிப்பிடப்படும் முதல் கட்டுரையை எழுதியவரும், இரண்டவதாக சொல்லப்படும் சிறுகதை எழுதியவரும் ஒருவரே. எழுதப்பட்ட காலம்தான் மாறியிருக்கிறது.

முன்னையதை தான் இளமையில் கல்வி கற்ற நீர்கொழும்பு விஜயரத்தினம் மகா வித்தியாலய மலர் கலாதீபத்திலும், பின்னையதை அய்ரோப்பாவில் வெளியான ( நவம்பர் 1998) இதழிலும் பதிவாக்கியிருக்கிறார்.

அன்று பூம்புகாரின் கானல்வரியை நீர்கொழும்பிலிருந்து சித்திரித்த மாணவி, பல ஆண்டுகள் கழித்து ஜெர்மனியில் கால்ஸ்ரூ மாநிலத்திலிருந்து கல்லாய் சமைந்து போயிருக்கும் கண்ணகியைப்பற்றி சிறுகதையாக சித்திரிக்கும் பெண்ணியவாதி.

யார் இவர்—-?

இவருக்கு கடந்த நவம்பர் மாதம் 29 ஆம் திகதி பவளவிழா தொடங்கிவிட்டது.

அய்ரோப்பாவிலும் கனடாவிலும் நடக்கும் இலக்கியச் சந்திப்பு, பெண்கள் சந்திப்புகளிலும் ஊடறு பெண்களுக்கான இதழிலும் நன்கறியப்பட்ட தேவா.

இலங்கையில் நீர்கொழும்பில் பாடசாலையில் பயிலும் காலத்தில் தேவா சுப்பையா எனவும் 1972 – 1974 குறுகிய காலத்தில் ஈழத்து இலக்கியப்பரப்பில் தேவி என அறியப்பட்டவருமான தற்பொழுது ஜெர்மனியில் வதியும் தேவா ஹெரால்ட்.

எம்மவர்கள் தமது குழந்தைகளுக்கு பெயர் சூட்டும்பொழுது, தமக்குப்பிரியமான தெய்வங்களின், பிடித்த மலர்களின், கவர்ந்த படைப்பாளிகளின், மறக்க முடியாத கதாமாந்தர்களின், தொடர்ந்து இணைந்து வராமல் பாதிவழியில் கழன்றுவிட்ட, அல்லது கழற்றிவிடப்பட்ட முன்னாள் காதலன், காதலியின் பெயர்களைத்தான் சூட்டுவது வழக்கம்.

அல்லது சோதிடர்களின் ஆலோசனைப்படி சில எழுத்துக்கள் முதலாக வரத்தக்க பெயர்களை எண்சாத்திரப்பிரகாரம் பெயர்வைப்பார்கள். அதனால் அந்தப்பெயர்கள் சற்று நீண்டுவிடுவதும் உண்டு.

எம்மவர்கள் புலம்பெயர்ந்த பின்னர் அந்தந்த நாடுகளுக்கு ஏற்ப பெயர்களை சுருக்கிக்கொள்வார்கள்.

நீர்கொழும்பில் எங்கள் தாய் மாமா சுப்பையா தீவிரமான முருகபக்தர். முருகன் அவருக்கு குலதெய்வம். அதனால் தமக்குப்பிறந்த பிள்ளைகள் பண்ணிருவரில் இரண்டு பேரைத்தவிர மற்ற அனைவருக்கும் முருகனின் அல்லது முருகனின் துணைவிகளின் பெயரைத்தான் சூட்டினார்.

இரண்டாவது பிள்ளையாக மகள் பிறந்தபொழுது தேவசேனா என்று பெயர்வைத்தார். இவர் பிறந்த காலத்தில் அங்கு சைவத் தமிழ்ப்பாடசாலைகள் இல்லை. அதனால் ஆவேமரியா மகளிர் பாடசாலையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு தொடர்ந்து படித்திருந்தால், அந்த சமயத்தைத்தான் தனது மகளும் கற்கவேண்டிவந்துவிடும் என்ற தயக்கம் மாமாவுக்கு தோன்றிய காலத்தில் 1954 இல் எமது ஊரில் முதலாவது சைவத்தமிழ்ப்பாடசாலையாக விவேகானந்தா வித்தியாலயம் தோன்றியதும் அங்கு மகளைச்சேர்த்துவிட்டார்.

மாமா முருகபக்தர் மாத்திரமல்ல, முருகன் பற்றி சில நூல்களையும் அங்கு அந்தக்காலத்தில் சமயம் போதித்த, பிரார்த்தனை வகுப்புகள் நடத்திய சாமிசாத்திரியார் என்ற பெரியவருடன் இணைந்து பதிப்பித்தார். நீர்கொழும்பு சிறைச்சாலையில் அமைந்துள்ள கோயிலை ஸ்தாபித்தவர்களில் மாமாவுக்கும் சாமிசாத்திரியாருக்கும் முக்கிய பங்கிருக்கிறது என்று எனது அம்மா சொல்வார்கள்.

என்னைவிட மூத்தவரான தேவசேனா எம்மத்தியில் தேவா என அழைக்கப்;பட்டவர். நானும் இவருடைய தம்பி முருகானந்தனும் முஸ்லிம் பாடசாலையில் கற்றமையால் , எனக்கு எனது அக்கா செல்வியும், முருகானந்தனுக்கு அவருடைய அக்கா தேவாவும்தான் இந்து சமய ஆசிரியர்கள்.

இந்த இரண்டு வீட்டு ரீச்சர்மாருக்கும் நாம் பல தடவைகள் டிமிக்கிகொடுத்துவிட்டு விளையாடச்செல்வோம். எங்கள் குழப்படிகளையும் குறும்புத்தனங்களையும் நன்கு அறிந்து எம்மை எமது பெற்றவர்

களிடமிருந்து பல தடவை காப்பாற்றிய பெருந்தகைகள் இந்த இரண்டுபேரும்.

விவேகானந்தா வித்தியாலயம் தமிழ்ப்பண்டிதர் மயில்வாகனன் என்பவரின் தலைமையில் 1954 இல் தொடங்கி பின்னாளில் பெரி. சோமாஸ்கந்தர், தங்கரத்தினம் முதலான கலை, இலக்கிய ஆர்வலர்களான தமிழ்ப்பாட ஆசிரியர்களினால் இலக்கியச்செழிப்புடன் விஜயரத்தினம் மகா வித்தியாலயமாக வளர்ந்தபொழுது, 1967 ஆம் ஆண்டு பாடசாலையின் வருடாந்த சிறப்பு மலர் கலாதீபத்தில் தனது முதலாவது கட்டுரையை தேவா எழுதியிருந்தார். அதுவே சிலம்பினுள்ளே ஒரு செல்வி.

அதன் தொடக்கத்தையே இந்தப்பத்தியின் ஆரம்பத்திலும் குறிப்பிட்டேன். அந்தக்கட்டுரையை தான்தான் எழுதியது என்ற நினைவு தேவாவுக்கு இன்று இருக்குமா? என்பது எனக்குத் தெரியாது.

தங்கரத்தினம் மாஸ்டர் நகுலன் என்ற பெயரில் சிறுகதை, நாடகங்கள் எழுதினார். இரண்டு சிறுகதைத்தொகுதிகளும் வெளியிட்டவர். பல நாடகங்களை இயக்கியவர். 1970 இற்கு முன்னர் கொழும்பிலிருந்து வெளியான தினபதி நாளிதழில் அதன் ஆசிரியர் எஸ். டி. சிவநாயகம் புதிய இளம் எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தி வளர்த்துவிடும் நோக்கத்தில் தினம் ஒரு சிறுகதை என்ற பகுதியை தினபதியில் தொடக்கினார். முதலில் சிறுகதை எழுதத்தொடங்கும் இளம் எழுத்தாளர், தனக்கு நன்கு தெரிந்த ஒரு மூத்த எழுத்தாளரிடம் தனது சிறுகதையை காண்பித்து அவர் செம்மைப்படுத்தியதும் அவருடைய அறிமுகத்துடன் குறிப்பிட்ட சிறுகதை தினபதியில் வெளியாகும்.

அவ்வாறு வெளியிடும்பொழுது எழுதியவரின் முகவரியும் பதிவாகும்.

அவ்வாறு தனது முதலாவது கதையை தினபதியில் எழுதினார் தேவா. அதனால் இவருக்கு சில பேனா நண்பர்களும் கிடைத்தனர். இவருடைய கையெழுத்து அழகானது. தனித்தனியாக இருக்கும். இவருடைய அப்பா – எங்கள் மாமா, ஊரில் இரண்டு கோயில்களின் பரிபாலன சபையிலும் . அத்துடன் பாடசாலை பெற்றோர் ஆசிரியர் சங்கத்திலும் தொடர்ச்சியாக செயலாளராக இருந்தவர். மாமா கூட்டக்குறிப்புகளை தேவாவின் கையெழுத்திலேயே பதிவுசெய்துகொள்வார்.

மாமாவுக்கு சமயம் சார்ந்துதான் நாம் அனைவரும் நூல்களைப் படிக்கவேண்டும் என்ற விருப்பம். அவருக்கு நவீன இலக்கியம் கதைகள், நாவல்கள் பிடிக்காது.

முடிந்தவரையில் புராணப்படங்களுக்குத்தான் அழைத்துச்செல்வார். கண்டிப்பானவர். அதனால் அவருக்குத் தெரியாமல்தான் நாம் இலக்கிய நூல்களை படிப்போம்.

தேவா சிறுகதையும் எழுதக்கூடியவர் என்ற தகவல் இவரது சிறுகதை தினபதியில் வெளியாகும் வரையில் அவருக்கோ வீட்டில் அத்தைக்கோ மற்றவர்களுக்கோ ஏன்— எனக்கும்தான் தெரியாது.

தினபதி கிடைத்ததும் எடுத்துக்கொண்டு தேவாவிடம் சென்றபொழுது யாருக்கும் காட்டிவிடவேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.

அவர் வீட்டில் தெரிந்தால் பிரச்சினைதான் என்று அவர் தொடர்ந்து எழுதுவதற்காக ஒரு பெயரைத்தெரிவு செய்து சூட்ட விரும்பியபொழுது, நானும் எழுதத்தொடங்கிவிட்டேன்.

அப்பொழுது 1971 ஆம் ஆண்டு. கொழும்பில் பணியாற்றிய தேவாவின் அண்ணன் ஸ்ரீஸ்கந்தராஜா குமுதம், ஆனந்தவிகடன் வாங்கிவருவார். வீட்டில் எப்படியோ அவற்றை படித்து முடித்துவிடும் தேவா, நாம் உருவாக்கிய வளர்மதி நூலகத்திலும் இணைந்து நூல்களை பெற்று படித்தார்.

1972 இல் எனது முதல் சிறுகதையை எழுதிவிட்டு தேவாவிடம்தான் திருத்தித்தருமாறு கொடுத்தேன். அவர் அதனை செம்மைப்படுத்தி, தனது கைப்பட அழகான கையெழுத்தில் எழுதித்தந்தார். அப்பொழுது கதை, கட்டுரைகளை ஒரு தாளில் ஒரு பக்கத்தில் மாத்திரம்தான் எழுதிப்பழகவேண்டும் என்று கற்பித்தார். இரண்டு பக்கங்களிலும் எழுதவேண்டாம் என்று சொல்லிக்கொடுத்தார்.

அவ்வாறு எனது இலக்கிய ஆசானாக இருந்த தேவா, எனது கனவுகள் ஆயிரம் சிறுகதை கடல் மாந்தர்களைப்பற்றியதாக இருந்தமையால் தானும் அவ்வாறே பிரதேச மொழிவழக்குடன் கதை எழுதுவதற்கு ஆர்வம் கொண்டார்.

அவர் எழுதிய இரண்டாவது சிறுகதை அவர்கள் நடக்கிறார்கள். அதனை நாம் வெளியிட்ட வளர்மதி கையெழுத்துப்பிரதியில் பதிந்த பொழுது எழுதியவர் தேவி என்றே குறிப்பிட்டேன். அவரும் யார் தேவி ? என்பது தெரியவேண்டாம் என்றும் எனக்கு நிபந்தனை விடுத்தார்.

அச்சிறுகதை வித்தியாசமானது. அக்காலப்பகுதியில் நீர்கொழும்பு கடற்கரைப்பிரதேசம் வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகளை கவரும் விதமான மாற்றங்களை தொடங்கியிருந்த

து. பிரவுண்ஸ் பீச் ஹோட்டல் முதலான உல்லாசப் பயணிகளை பெரிதும் கவரும் விடுதிகள் தோன்றின.

இந்த ஹோட்டல் அமைந்த கடற்கரையோரத்தில் முன்பிருந்த ஒரு பாழடைந்த வீடு இடிபாடுகளுடன் காணப்பட்டது. அதில் 1962 இல் வெளியான காமினி பொன்சேக்கா, ஜோ அபேவிக்கிரம, ஜீவராணி நடித்த ரண்முத்து துவ திரைப்படத்தின் காட்சிகள் எடுக்கப்பட்டன. அதன் இயக்குநர் Pho Mike Wilson ; ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்தவர். அதன் பின்னர் அந்தப்பிரதேசம் உல்லாசப்பயணிகளை பெரிதும் கவரத்தொடங்கியது.

ஆனால், ரன்முத்து துவ, கஹா பளலு, Three Yellow Cats முதலான வெற்றிப்படங்களை எடுத்த Pho Mike Wilson பின்னர் உலக இன்பங்களைத்துறந்து, பௌத்த துறவியாகி எங்கோ மலையகப்பக்கம் ஒதுங்கி காணமல் போய்விட்டார் என்பதும் ஒரு முக்கியமான செய்தி.

அங்குவரும் வெளிநாட்டு உல்லாசப்பயணிகளின் பின்னால் ஓடும் மீனவச்சிறுவர்கள் பற்றிய சமூக யதார்த்த சித்திரிப்பை கூறும் இச்சிறுகதையை படித்த இலக்கிய நண்பர் மு. கனகராஜன், இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் வெளியீடான புதுயுகம் ( 24-06-1972) இதழில் வெளியிட்டார். அக்கதை அக்காலப்பகுதியில் இலங்கையின் கடற்கரையோரங்களில் நேர்ந்த சமூக மாற்றங்களை துல்லிமாகச்சொன்னது.

தேவைகளின் நிமித்தம் என்ற தேவியின் மற்றும் ஒரு சிறுகதை அதே 1972 ஆம் ஆண்டு பூரணி காலாண்டிதழில் வெளியானது. இரண்டு கதைகளும் நீர்கொழும்பு மீனவ மக்களின் பிரதேசமொழி வழக்குடன் சித்திரிக்கப்பட்டிருந்தன.

அவ்வேளையில் மல்லிகை ஆசிரியர் டொமினிக்ஜீவா தனது நீண்ட கால நண்பர் ஜெயகாந்தனின் போக்குப்பிடிக்காமல் நீண்ட விமர்சனத்தொடரை எழுதத்தொடங்கியிருந்தார்.

அதனை மல்லிகை வாசகர்கள் அனைவரும் படித்தார்கள். முடிவுற்றதும் தேவி, அதனைக்கண்டித்து ஒரு கடிதம் மல்லிகைக்கு எழுதினார். அப்படி ஒரு துணிச்சல் அன்று மல்லிகை வாசகரிடம் நான் அறிந்தவரையில் எவரிடமும் வரவில்லை. எனினும் ஜீவா அடுத்த இதிழின் அட்டையில் தேவியின் பெயரையும் அச்சிட்டு அந்த இதழில் அக்கடிதத்தை பிரசுரித்தார்.

அதற்கு யாழ்ப்பாணத்திலிருந்து ராஜம்தேவராஜன் என்ற யாழ். பெரியாஸ்பத்திரியில் மருத்துவராக பணியாற்றிய மல்லிகை வாசகி எதிர்வினையாற்றி ஜீவாவின் தரப்பை ஆதரித்தார். அதற்கும் தேவி எதிர்வினையாற்றினார். அதனால் சூடு பிடித்த அந்த விவாதம் அத்துடன் முடிந்தது.

தேவி மல்லிகையில் மண்மனம் , மல்லிகை ஓராண்டு மதிப்பாய்வு முதலான கட்டுரைகளையும் எழுதியதுடன் வருடத்தில் ஒருநாள் என்ற நீண்ட கதையையும் இரண்டு அங்கங்களில் மித்திரனில் எழுதினார்.

இச்சிறுகதை கண்டியில் குண்டசாலையில் வசித்த தேவாவின் அம்மாவின் தாய்மாமனார் ஒருவரின் மகனின் அகாலமரணம் தொடர்பான உருக்கமான கதை. வருடம் ஒரு முறை அந்த வீட்டில் நடக்கும் நினைவுப்பிரார்த்தனை பற்றி ஒரு குழந்தையின் பார்வையில் சொல்லப்படும் கதை.

வாழ்வின் தரிசனங்களே நாம் எழுதும் கதைகள் என்று எனக்கு இலக்கிய அரிச்சுவடி சொல்லித்தந்தவர் தேவா.

நீர்கொழும்பு இந்து இளைஞர் மன்றத்தின் மாதாந்த பௌர்ணமி விழாக்களுக்கு தேவா நாடகங்களும் எழுதித்தந்தார். அதில் ஒன்று அரிச்தந்திரன் – மயான காண்டம். சந்திரமதி பாத்திரமேற்று நடிப்பதற்கு எவரும் முன்வராதமையினால் நான் சந்திரமதியானேன்.

தேவாவும் எனது தங்கை ஜெயந்தியும் எனக்கு ஒப்பனை செய்து, எனது கோலத்தைப்பார்த்து விழுந்து விழுந்து சிரித்தனர். ஆனால், நாடகத்தில் மயான காண்ட காட்சியில் சந்திரமதி, லோகிதாசனின் உடல்மீது விழுந்து கதறிக்கதறி அழுதபோது அவர்கள் இருவரும் திரைக்குப்பின்னால் நின்று கண்கலங்கியதாக அறிந்தேன். சில நாட்கள் அவர்கள் என்னை சந்திரமதி என்றே அழைத்தனர்.

சந்திரமதியின் கழுத்தில் விழுந்த அட்டைக்கத்தி, வீசிய வேகத்தில் மடங்கியதனைப்பார்த்து சபையில் சிரித்தனர்.

இதனால் சிறிதுகாலம் அந்த அட்டைக்கத்தி பற்றியும் நினைத்து நினைத்து சிரித்தனர்.

அரிச்சந்திரன் நாடகத்தின் சந்திரமதி உங்களை அழவும் சிரிக்கவும் வைத்துவிட்டாள் என்று நான் சமாளித்தேன்.

திருஞானசம்பந்தர் – திருநாவுக்கரசர் சந்திக்கும் காட்சியையும் தேவா நாடகமாக எழுதித்தந்தார். அதில் வயதில் குறைந்த பிள்ளைகள் நடித்தனர்.

தேவாவுக்கும் நாடகமேடைப் பரிச்சயம் இருந்தது. பாடசாலையில் படித்த காலத்தில் மாணவர் இலக்கிய மன்றத்தில் அவர் அவ்வையார் சுட்டபழம் சாப்பிட்ட காட்சியில் அவ்வையாராக நடித்தவர்.

எனது தொடக்க கால சிறுகதைகளை முதலில் அவரிடம் காண்பித்த பின்னரே இதழ்களுக்கு அனுப்புவேன். இவ்வாறு கலை, இலக்கியப்பயணத்தில் இணைந்திருந்தவர், திருமணமாகி ஜெர்மனுக்கு சென்றதனால் பெரிய வெற்றிடம் தோன்றிய தாக்கம் நீடித்திருந்தது.

குறுகிய இரண்டு ஆண்டு (1972 – 1974 ) காலத்துள் மல்லிகை, பூரணி, புதுயுகம் முதலானவற்றில் தேவி என்னும் புனைபெயரில் எழுதி கவனத்தை பெற்றிருந்தமையால், ” அவர் எங்கே—? ” என்று மல்லிகை ஜீவாவும் பூரணி மகாலிங்கமும், புதுயுகம் கனகராஜனும் கேட்டபொழுது அவருடைய திடீர் பயணம் பற்றிச்சொன்னேன்.

” இனி அவர் எழுதப்போவதில்லை ” – என்று மல்லிகை ஜீவா மிகுந்த ஏமாற்றத்துடன் சொன்னார். பெண் எழுத்தாளர்கள் பலர் திருமணத்தின் பின்னர் இலக்கியத்திற்கு ஓய்வுகொடுக்கின்றனர் என்ற பொதுவான கருத்து அப்போது நிலவியது.

மல்லிகையில் ஜாலம் என்ற தரமான, ஆனால் முற்றிலும் வித்தியாசமான சிறுகதையை எழுதியிருந்த கவிதா என்பவர், ஒரு முஸ்லிம் கவிஞரை காதலித்து மணம் முடித்து மதம் மாறிச்சென்றதையும் அதன் பின்னர் கவிதா எழுதவில்லை என்றும் அறியக்கிடைத்தது. ஜாலம் என்ற கதையை படிக்குமாறு எனக்கு நினைவூட்டியதும் தேவாதான். ஆம், அது ஒரு நல்ல சிறுகதை. இன்னும் என்னால் மறக்கமுடியவில்லை.

ஆளுகைக்கும் ஆளுமைக்கும் இடையே நீடிக்கும் உணர்வுகளை துல்லிமாகச்சொன்ன கதை.

குறிப்பிட்ட கவிதா என்ற பேராதனை பட்டதாரியான அந்தப் படைப்பாளி எழுதியது சொற்பம்தான். ஆனால், ஈழத்து இலக்கிய உலகில் அவர் மறக்கப்பட்டவரானது துரதிஷ்டம்.

ஒருநாள் ஜெர்மனியிலிருந்து தேவா எழுதிய கட்டுரையை வீரகேசரியில் திடீரென்று பார்த்தபொழுது அவர் பற்றிய எமது முன்தீர்மானம் பொய்த்துப்போனது.

புகலிடம் சென்ற அவரின் கண்களில் கிட்டிய தரிசனம் அய்ரோப்பியர் கொண்டாடும் வசந்த விழா பற்றியதாக இருந்தது. அதற்கு அவர் இட்டிருந்த உப தலைப்பு: ரைன் நதியில் நீந்துவோம், அது வைன் மதுவாயிருக்கட்டும்.

” பட்டும் பவளமும் சந்தனமும் அகிலும் முத்தும் மணியும் பொன்னுமாக நிறைந்த விண்ணுலகோ ? என ஐயுறவுகொள்ள நினைத்த

இந்திரவிழாவினை மிகச்சிறப்பாகக் கொண்டாடிக்கொண்டிருக்கிறது பூம்புகார். ” என்று 1967 இல் பாடசாலை மலரில் எழுதியவர், சுமார் பத்தாண்டு காலத்திற்குப்பிறகு, 09-10-1977 ஆம் திகதி வீரகேசரி வாரவெளியீட்டில், பூத்துக்குலுங்கும் பயிர்கள், கொத்துக்கொத்தான மலர்கள், காடுகளிலும் மலைகளிலும் சிரித்து நிற்கும் இயற்கை அன்னை பற்றிய வர்ணிப்புடன் ஜெர்மனி வசந்த காலத்தை கொண்டாடுவதாக எழுதியிருந்தார்.

காலம் விரைந்துவிடும். அதில் திசைமாறிய பறவைகளாய் எங்கெங்கோ வாழத்தலைப்படுகின்றோம்.

தேவா ஜேர்மனியில், மல்லிகையில் அவருக்கு எதிர்வினையாற்றிய மருத்துவ கலாநிதி ராஜம் தேவராஜன் (இலங்கை சட்டத்தரணி ரங்கன் தேவராஜனின் அக்கா) இங்கிலாந்தில், ‘ பூரணி ‘ மகாலிங்கம் கனடாவில், நான் அவுஸ்திரேலியாவில், ஆனால், எமது தாயகத்தின் அந்த இலக்கிய வசந்த காலம் எமது நெஞ்சமதில் இன்றும் நிறைந்திருக்கிறது.

1978 ஆம் ஆண்டு இலங்கை வந்திருந்த தேவாவை சந்தித்து எழுதிய நேர்காணல் மல்லிகையில் வெளியானது. மல்லிகைக்கு சந்தா செலுத்தி ஜெர்மனிக்கு தருவித்தார். இலங்கை, தமிழ்நாட்டிலிருந்தும் நூல்களைப் பெற்றார்.

எங்குசென்றாலும் அவரிடமிருந்த கலை, இலக்கிய தாகம் குறையவில்லை. அவுஸ்திரேலியாவுக்கு நான் வந்த பின்னரும் அவருடன் தொடர்புகளை மேற்கொண்ட காலப்பகுதியில் அய்ரோப்பா மற்றும் கனடாவில் நடந்த இலக்கிய சந்திப்புகளிலும் பெண்கள் சந்திப்புகளிலும் அவர் பங்குகொண்டிருந்தார். சில சர்வதேச திரைப்பட விழாக்களிலும் அவர் காணப்பட்டதாக சில இலக்கிய நண்பர்கள் தெரிவித்தனர்.

ஊடறு, எக்ஸில், பாரிஸ் ஈழநாடு முதலானவற்றிலும் கதைகள், கட்டுரைகள் எழுதினார். பனியும் பனையும் தொகுப்பில் இடம்பெற்ற தேவாவின் ஆண்பிள்ளை என்ற சிறுகதையை 2015 இல் வெளியான ஞானம் புகலிடச்சிறப்பு மலரிலும் காணலாம்.

இலங்கையில் இவரை தினபதி ஊடாக அறிமுகப்படுத்திய தங்கரத்தினம் மாஸ்டர், வவுனியாவில் ஒரு வாகன விபத்தில் இறந்துவிட்டார். சிறுவயதில் இவருடன் அவ்வையார் நாடகத்தில் சுட்ட பழம் வேண்டுமா…? சுடாத பழம் வேண்டுமா…? என்று முருகன் வேடத்தில் தோன்றிக்கேட்ட அந்த மாணவரும் இறந்துவிட்டார். குறிப்பிட்ட அந்த பள்ளித் தோழனை இலங்கை வந்த சமயத்தில் சந்தித்திருக்கும் தேவா, அவருடைய ஏழ்மையையும் அவரைப்பீடித்திருந்த நோயையும் அறிந்து தன்னால் முடிந்த உதவிகளையும் செய்திருக்கிறார்.

அம்மாணவரின் நினைவாக நிழல் குடைகள் என்ற சிறுகதையை பாரிஸ் ஈழநாடுவில் 1993 இல் எழுதினார். தங்கரத்தினம் மாஸ்டர் பற்றிய நினைவுப்பதிவை 2015 ஆம் ஆண்டு நாம் நீர்கொழும்பில் வெளியிட்ட நெய்தல் இலக்கியத்தொகுப்பில் எழுதினார்.

1996 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு தேவா வந்த சமயத்தில், மெல்பன் பாரதி பள்ளியின் நிகழ்ச்சியிலும் நாம் ஒழுங்குசெய்த இலக்கிய சந்திப்பிலும் கலந்துகொண்டார்.

எழுத்தாளர் விழா என்ற எண்ணக்கருவை எனக்குள் விதைத்தவரும் தேவாதான். எனினும் அதனை சாத்தியமாக்க நான்கு ஆண்டுகள் காத்திருந்தேன்.

2002- 2005 காலப்பகுதிக்கான ஊடறு இலக்கியத்தொகுப்பிலும் இணைந்திருந்தார். இவருடன் இணைந்திருந்த ஏனைய தோழியர்: றஞ்சி (சுவிஸ்), விஜி (பிரான்ஸ்) நிருபா ( ஜெர்மனி).

ஊடறு மலரில், சர்வதேச ரீதியாக பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் வன்முறைகள், ஆயுத உற்பத்தி, அதன் பின்னாலிருக்கும் பலம்பொருந்திய சக்திகள், சோவியத்திலிருந்து இன்றைய அமெரிக்கா வரை – ஒரு பெண்நிலைப்பயணம் முதலான பல பயனுள்ள கட்டுரைகளும், பெண்ணியம் சார்ந்த சிறுகதைகள், கவிதைகள், மொழிபெயர்ப்புகள் இடம்பெற்றுள்ளன.

பெண்ணியம் தொடர்பாக எழுதவிரும்புவோருக்கு இந்தத்தொகுப்பு உசாத்துணையானது எனவும் சொல்லலாம்.

நாம் மெல்பனில் 2003 ஆம் ஆண்டு எழுத்தாளர் விழாவை நடத்தியபொழுது அதில் கலந்துகொண்ட ஆழியாள் மதுபாஷினி குறிப்பிட்ட ஊடறு தொகுப்பினை அறிமுகப்படுத்தினார். அவுஸ்திரேலியாவில் வதியும் பாமதி, ஆழியாள் ஆகியோரையும் தேவாதான் எனக்கு அறிமுகப்படுத்தினார்.

இலங்கையில் ஒரு கடற்கரையோர நகரத்தில் பெரிய குடும்பத்தின் மூத்தபிள்ளையாக சமயம், விரதம், அனுட்டானங்கள், கோயில் உற்சவம், பண்டிகைகள், சொந்த பந்த உறவுகள் என்று ஒரு வட்டத்துக்குள் வாழ்ந்த தேவா, ஜெர்மனி சென்றதும், அந்நாட்டின் மொழியையும் பயின்று, மொழிபெயர்ப்பாளராக பணியாற்றியவாறு பெண்ணியம் குறித்து சிந்தித்து செயல்படும் ஆளுமையாக மாறியது அவர் குடும்பத்தில் மட்டுமல்ல எமது உறவுகள் மத்தியிலும் ஒரு ஆச்சரியக்குறிதான் !!!.

வெளியுலகம் ஒவ்வொருவரையும் மாற்றும் இயல்பைக்கொண்டது.

தேவாவின் இயல்புகளை அறிந்திருந்தமையால், பறவைகள் நாவலை 2002 ஆம் ஆண்டு நான் எழுதியபொழுது, அதில் வரும் பெண்ணியம் பேசும் பாத்திரமாக சுமதியை படைத்தபொழுது தேவாவைத்தான் உருவகித்தேன்.

பயணங்களில் ஆர்வம் மிக்க தேவா, ஒரு நீண்ட பயணத்தை முடிக்கும்பொழுதே அடுத்த பயணத்துக்கான திட்டமிடலையும் தயாரிப்பார்.

ஒரு தொகுப்புக்குத் தேவையான பல சிறுகதைகள் தேவாவிடம் இருக்கின்றன. மேலும் நல்ல கதைகளைத் தருவதற்குரிய ஆற்றலும், பயண இலக்கியங்கள் எழுதக்கூடிய அனுபவங்களும் இவரிடம் இருக்கின்றன.

இலக்கிய உலகம் இவரிடம் மேலும் எதிர்பபார்க்கின்றது. கடந்த நவம்பர் 29 ஆம் திகதி தனது பவளவிழர்காலத்தை ஆரம்பித்திருக்கும் ஆளுமை தேவவுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள். —0— letchumananm@gmail.com

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.