மாகாண சபை முறை நீக்கப்படாது: மூன்று வருடங்களின் பின்னரே புதிய அரசியலமைப்பு
மாகாண சபை முறைமையை நீக்குவதற்கு எந்தவொரு தீர்மானத்தையும் தற்போதுவரை எடுக்கவில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது.
புதிய அரசியலமைப்பு மூன்று வருடங்களின் பின்னரே கொண்டுவரப்படும். அதிகாரப்பகிர்வு தொடர்பில் கலந்துரையாட போதுமான கால அவகாசம் உள்ளது. புதிய அரசியலமைப்பில் மாகாண சபை முறை தொடர்ந்தால் தற்போது இருக்கும் அதிகாரங்களுக்கு அப்பாலான அதிகாரப்பகிர்வு இருக்காது என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மாகாண சபை முறையை நீக்கப்பட உள்ளதாக ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா, கூறியுள்ள கருத்து தமிழ் மக்கள் மத்தியில் பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயாக இந்தக் கருத்து மாறியுள்ளதால் இதுதொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சியிடம் விசேட கூற்றொன்றை முன்வைத்து கேள்வியெழுப்பினர்.
இதற்கு பதில் அளித்த சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க,
”இராசமாணிக்கம் சாணக்கியன் மீது மிகுந்த மரியாதை கொண்டிருக்கிறோம். ஏனையோர் சொல்வதைக் கேட்டு முறையற்ற சந்தேகங்களை எழுப்ப வேண்டாம்.
இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சிவஞானம் ஸ்ரீதரன் இது விடயமாக ஜனாதிபதியிடம் கலந்துரையாடல் ஒன்றுக்கு கோரிக்கை விடுத்திருப்பதார். ஜே.வியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாவுடன் அன்றி ஜனாதிபதியுடன் சந்திப்புக்கு ஒழுங்குபடுத்தி தருகிறோம். அதன்போது இந்த விடயம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தலாம்.” என்றார்.
இதேவேளை, இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த விடயம் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்னவென ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ,
மாகாண சபை முறையை நீக்குவது தொடர்பில் இந்தத் தருணம்வரை அரசாங்கம் எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்கவில்லை. புதிய அரசியலமைப்பை கொண்டுவர மூன்றுவருடங்கள்வரை செல்லும். அதனால் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சிமன்ற முறை தொடர்பில் தமது சிபாரிகளை அனைவரும் முன்வைக்கப்படும்.
புதிய அரசியலமைப்பு மக்களுடனான கலந்துரையாடலின் பின்னரே கொண்டுவரப்படும். இதுதொடர்பில் கலந்துரையாடல்கள் நடத்த போதிய கால அவகாசம் உள்ளது. மாகாண சபை முறையை ஒழிப்பதற்கு அரசாங்கம் எந்தவொரு தீர்மானத்தை இதுவரை எடுக்கவில்லை.
புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்படும் தருணத்தில் இதுதொடர்பில் கலந்துரையாடல்கள் நடத்தலாம். மாகாண சபை முறை புதிய அரசியலமைப்பில் தொடர்ந்தால் தற்போது இருக்கும் அதிகாரங்களுக்கு மேலதிகமான அதிகாரங்கள் வழங்கப்படாது என்பதுடன் குறைக்கவும் படாது.” என்றார்.