முச்சந்தி

வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக தொடரும் வன்முறை! …. ஐங்கரன் விக்கினேஸ்வரா.

வங்கதேசத்தில் இஸ்கான் அமைப்பின் மூத்த துறவி சின்மோய் கிருஷ்ண தாஸ் கைதாகி உள்ளார். இந்து வழிபாட்டுத் தலங்கள் மீது தொடர்ந்து தாக்குதல்கள் நடைபெறுகின்றன. அத்துடன் வன்முறை பரவுவதாக வதந்திகள் எழுவதால் ஒட்டுமொத்த சமூக ஊடகங்களுக்கு மீண்டும் தடை விதிக்க வங்கதேச அரசு அதிரடி உத்தரவு இட்டுள்ளது
வங்கதேசத்தில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா அரசுக்கு எதிராகப் போராட்டம் வெடித்தது முதல் தற்போதுவரை, இந்துக்களுக்கு எதிராக தொடர்ந்து தாக்குதல் சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன.
இந்துக்களுக்கு எதிராக தொடரும் தாக்குதல்:
இதில் அவர்களின் வழிபாட்டுத் தலங்கள், வீடுகள், சொத்துகள், உடைமைகள் சேதமாக்கப்படுகின்றன. இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என முகமது யூனுஷ் தலைமையிலான அந்நாட்டின் இடைக்கால அரசு உறுதியளித்த போதும் எந்த மாற்றமும் நிகழவில்லை.
மாறாக, தாக்குதலுக்கு எதிராகப் போராட்டம் நடத்திய இந்து மத அமைப்பினர் மற்றும் நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. வங்கதேசத்தின் 170 மில்லியன் மக்களில் சுமார் 8 சதவீதம் இந்துக்கள் உள்ளனர்.
முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா வெளியேற்றப்பட்டதில் இருந்து, முகமது யூனுஸ் தலைமையிலான புதிய இராணுவ ஆதரவு இடைக்கால அரசாங்கம் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறையை கட்டுப்படுத்த தவறியதற்காக விமர்சனங்களை தற்போது பாரியளவில் எதிர்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
சிறுபான்மையினருக்கு ஆதரவாக இந்து சமூகத்தினர் நடத்திய போராட்டங்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டதாக, சம்மிலிதா சனாதானி ஜோட் என்ற இந்து அமைப்பின் தலைவரான ஸ்ரீசின்மோய் கிருஷ்ண தாஸ் அண்மையில் வங்கதேச அரசால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர்மீது தேசத் துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேநேரத்தில் அவருக்கு ஜாமீன் வழங்கப்படவில்லை. இதற்கு இந்திய அரசு கண்டனம் தெரிவித்திருந்தது. அதேநேரத்தில், இந்து மதத் தலைவர் கைது தொடர்பாகவும் இதற்கு நீதி கேட்டும் வங்கதேசத்தில் ஆங்காங்கே வன்முறை வெடித்துள்ளது.
இதுதொடர்பாக நடைபெற்ற வன்முறையில், சைபுல் என்ற உதவி அரசு வழக்கறிஞர் வெட்டிக் கொல்லப்பட்டார். இதையடுத்து நாடு முழுவதும் பாதுகாப்புப் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், சட்டோகிராமில் உள்ள இந்துக் கோயிலை மர்மக் கும்பல் தாக்கியுள்ளனது.
இந்து மதத் தலைவர் கைதிற்கு இந்தியா கண்டனம்!
கிருஷ்ணா உணர்வுக்கான சர்வதேச சங்கத்தின் (ISKCON) செய்தித் தொடர்பாளர் ராதாரம் தாஸ், வங்காளதேசத்தில் இந்துக்கள் மற்றும் இந்து வழிபாட்டுத் தலங்கள் மீது தொடர் தாக்குதல்கள் நடைபெறுகின்றன எனவும், இது எப்போது நிறுத்தப்படும் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
அத்துடன் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது அமைச்சரவை வேட்பாளர் துளசி கபார்ட் ஆகியோரையும் தொடர்பு கொண்டுள்ளார்.
வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக நடைபெறும் தாக்குதலை ட்ரம்ப் கண்டித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் கண்டன அறிக்கைக்குப் பதிலளித்துள்ள வங்கதேச அரசு, இது உள்நாட்டு விவகாரம். இந்தியாவின் கவலை தெரிவிப்பது ஆதாரமற்றது. இரு நாட்டு நட்பின் உணர்விற்கு முரணானது. வங்கதேச மக்கள், தங்களது மதச் சடங்குகளைப் பின்பற்றவும், செயல்படுத்தவும், தடையின்றி கருத்துகளை வெளியிடவும் உரிமை உள்ளது எனத் தெரிவித்துள்ளது.
இந்திய அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை:
வங்கதேச இந்து தலைவர் சின்மோய் கிருஷ்ண தாஸ் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் இந்திய மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் தெரிவித்துள்ளார்.
எந்த மதமும் பாதிக்கப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. வங்கதேசத்தில் இஸ்கான் அமைப்பின் மூத்த துறவி சின்மோய் கிருஷ்ண தாஸ் கைது செய்யப்பட்டதை அடுத்து, இஸ்கான் அமைப்பினருடன் பேசினேன். இது வேறு ஒரு நாட்டின் விவகாரம். எனவே இதில் மத்திய அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வங்கதேசத்தில் இந்துக்கள் குறிவைக்கப்படும் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலையிட வேண்டும் என வலியுறுத்தி ஓய்வுபெற்ற நீதிபதிகள், ராணுவ உயர் அதிகாரிகள், ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 75 பேர் அவருக்கு கடிதம் எழுதியுள்ளனர். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜம்மு காஷ்மீரின் முன்னாள் காவல்துறை தலைவர் எஸ்.பி.வைத், வங்கதேசத்தில் இந்துக்கள் அட்டூழியங்களை எதிர்கொள்கிறார்கள். இது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
இது வங்கதேசத்தை மட்டும் பாதிக்காது. அதை சுற்றியுள்ள பிராந்தியத்திலும் இது பாதிப்பை ஏற்படுத்தும். இது இந்தியாவில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். மொத்த பிராந்தியத்திலும் இது சிக்கலை ஏற்படுத்தும்.
இது ஒரு நாட்டின் உள்விவகாரம் அல்ல. இது குறித்து ஐ.நா. மற்றும் சர்வதேச அமைப்புகளில் முறையிட வேண்டும். பிரதமர் இதில் தலையிட வேண்டும். வங்கதேசத்தில் உள்ள சிறுபான்மையினரை பாதுகாக்கும் நடவடிக்கைகளை இந்நாட்டு அரசு எடுக்க வேண்டும் எஸ்.பி.வைத் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபை தலையிடுமா ?
வங்கதேச அரசின் தலைமை ஒருங்கிணைப்பாளர் முகம்மது யூனுஸ் அடிப்படைவாதிகளின் பிடியில் உள்ளார். அங்கு இந்துக்கள் தாக்கப்படும் விதம் மனித குலத்துக்கு எதிரானது. இந்த விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் சபை தலையிட வேண்டும்.
இந்துக்கள் குறிவைக்கப்படுவது, இந்து மதத் தலைவர்கள் கைது செய்யப்படுவது ஆகிய சம்பவங்கள், பாகிஸ்தானைப் போலவே வங்கதேச இடைக்கால அரசாங்கத்திலும் அடிப்படைவாதிகள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்பதைக் காட்டுகிறது.
அங்கு இந்துக்களுக்கு எதிராக அட்டூழியங்கள் இழைக்கப்படுகின்றன. வங்கதேசத்தில் நடக்கும் அட்டூழியங்களுக்கு அனைத்து இந்துக்களும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.
இந்த விவகாரம் குறித்துப் பேசிய உத்தரப் பிரதேசத்தின் மதுராவில் உள்ள மஹமந்த்லேஸ்வர் சுவாமி கிருஷ்ணானந்த், வங்கதேசத்தின் தற்போதைய அரசு தீவிர முஸ்லிம்களின் அரசு. ஷேக் ஹசீனா ஆட்சியில் இருக்கும் வரை, தேசம் ஜனநாயக ரீதியாக இயங்கி வந்தது.
வங்கதேச இந்து தலைவர் சின்மோய் கிருஷ்ண தாஸ் கைது செய்யப்பட்டுள்ளார். இந்து கோயில்கள் சேதப்படுத்தப்படுகின்றன. இந்த விவகாரத்தில் இந்துக்களின் பாதுகாப்பிற்காக ஐக்கிய நாடுகள் சபை தலையிட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
சமூக ஊடகங்களுக்கு மீண்டும் தடை:
வன்முறை பரவுவதாக வதந்திகளை தடுக்க ஒட்டுமொத்த சமூக ஊடகங்களுக்கு மீண்டும் தடை விதிக்க வங்கதேச அரசு அதிரடி உத்தரவு இட்டுள்ளது. இது ஒருபுறமிருக்க, மறுபுறம் இஸ்கான் (ISKCON) அல்லது கிருஷ்ணா உணர்வுக்கான சர்வதேச சங்கத்தை, ’மத அடிப்படைவாத குழு’ என வங்கதேச அரசு தெரிவித்துள்ளது.
அந்த நாட்டின் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில் இந்தக் கருத்தைப் பதிவு செய்துள்ளது. மேலும், மாணவர் தலைமையிலான வன்முறைக்குப் பிறகு தற்போதைய இடைக்கால அரசாங்கம், இஸ்கானை ஆய்வு செய்து வருகிறது எனத் தெரிவித்துள்ளது.
கடந்த மே மற்றும் ஜூன் மாதங்கள் அப்போதைய பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகக் கோரி மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து தன் பதவியை ராஜினாமா செய்த அவர், இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். இதற்குப் பிறகு வங்கதேசத்தில் இந்துக்கள் மற்றும் சிறுபான்மையினர் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.