’13 ஐ’ நீக்கி மாகாண சபைகளை இல்லாமலாக்கி ஆதரித்த தமிழர்களை எதிரிகளாக்க வேண்டாம்; ரில்வினின் கருத்து அரசின் நிலைப்பாடா? என
ஜே.வி.பி.யின் செயலாளர் ரில்வின் சில்வாவின் கருத்துதான் அரசாங்கத்தின் கருத்தாகவும் நிலைப்பாடாகவும் உள்ளதா என்பதனை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என்பதுடன் உங்க ளுக்கு வாக்களித்த தமிழர்கள் கூட எதிராக திரும்புவதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.என தமிழரசுக் கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான வைத்தியர் ப. சத்தியலிங்கம் தெரிவித்தார்.
வவுனியாவில் நேற்று திங்கட்கிழமை மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக கொண்டுவரப்பட்டதே 13 வது அரசியல் அமைப்பு சட்டமாகும். இதுவே இலங்கை அரசியல் யாப்பிலும் கொண்டுவரப்பட்டது.ஆகவே ஒரு யாப்பை நடைமுறைப்படுத்த வேண்டிய பொறுப்பு அந்த அரசாங்கங்களையே சார்ந்ததாகும்.
13-வது திருத்தச் சட்டம் தமிழர்களான எமக்கு ஒரு தீர்வாக இல்லாவிட்டாலும் இரண்டு நாடுகள் முன் நின்று செயல்படுத்தியது என்ற ஒரு காரணத்தினால் அது இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. எனினும் 13 ஐ நீக்கி மாகாண சபைகளை இல்லாமலாக்குவதாக அனுரா குமார திசாநாயக்கவினுடைய தேர்தல் விஞ்ஞாபனத்திலும் கூறப்படவில்லை. 13 வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என்றே கூறி இருக்கின்றார். அது மாத்திரமின்றி தமிழ் மக்களுக்கான நிரந்தர தீர்வை கொண்டு வருவதற்கு எங்களுடைய அரசாங்கம் அரசியல் யாப்பை மாற்றுவதின் ஊடாக கொண்டுவரும் என்றும் கூறி இருக்கின்றார்.
ஆகவே 13-வது திருத்தச் சட்டம் நமக்கான ஒரு தீர்வாக இல்லை என்பதை வெளிப்படுத்திய அவர் தமிழர்களுக்கான நிரந்தர தீர்வை வழங்க அதனை நடைமுறைப்படுத்த புதிய அரசியல் அமைப்பினூடாகவும் தீர்வை வழங்குவோம் எனவும் தெரிவித்திருந்தார்.
ஆகவே அனுர குமார திசாநாயக்கவினுடைய அரசாங்கம் தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். இந்த விடயம் அவர்களுடைய வாக்குறுதி மாத்திரமல்ல அரசியல் யாப்பிலும் உள்ளடக்கப்பட்ட ஒரு விடயமாகவே இருக்கின்றது.
ஆகவே இந்த நாட்டில் எல்லா மக்களும் ஒரே மாதிரியாக வாழ்வதில் எமக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை. எல்லோரும் சமமாக நடத்தப்படுவார்களானால் அது எங்களுக்கும் சந்தோஷமான விடயம் தான்.
ஆனால் இலங்கையின் ஒரு தேசிய இனமான தமிழர்களின் கோரிக்கைகளுக்கு அரசாங்கங்கள் செவிசாய்க்க வேண்டும்.
எங்களுடைய கட்சியினுடைய நிலைப்பாடு ஒன்றிணைந்த நாட்டிற்குள் உள்ளக சுயநிர்ணய அடிப்படையில் தமிழ் மக்கள் தங்களை தாங்களே ஆளக்கூடிய ஒரு அரசியல் யாப்பு உருவாக்கப்பட வேண்டும் என்பதேயாகும். இதுவே தமிழ் மக்களின் ஏகோபித்த விருப்பமும்.
ஆகவே இந்த அரசாங்கம் கடந்த கால அரசாங்கங்களைப் போல் தேர்தல் வாக்குறுதிகளை மீறி செயல்படுமாக இருந்தால் அவர்களுக்கு வாக்களித்த தமிழர்கள் கூட எதிராக திரும்புவதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.
ஆகவே அனுர அரசு 13 வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். அதேபோல் தமிழர்களுக்கு ஒரு அரசியல் ரீதியான நிரந்தர தீர்வை வழங்குவதற்கான புதிய அரசியலமைப்பில் ஊடாக அதனை உறுதிப்படுத்த வேண்டும்.
அதற்கு அப்பால் அந்த உரிய தீர்வானது அனைத்து இன மக்களும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக அமைய வேண்டும். தமிழர்களுக்கான அந்தத் தீர்வு, ஒன்றிணைந்த இலங்கைக்குள் சுயநிர்ணய அடிப்படையிலான என்பதுடன் தமிழர்களைத் தமிழர்களே ஆளக்கூடிய வகையிலாக அமைய வேண்டும் என்பது எமது நிலைப்பாடு.
இந்த வகையில் ரில்வின் சில்வாவை பொறுத்தவரை அவர் அரசாங்கத்தில் எந்தப் பதவியிலும் இல்லாத ஒருவர். அவர் ஜே வி பின் செயலாளர் மாத்திரமே. அவ்வாறானவரின் கருத்து அரசாங்கத்தினுடைய கருத்தா என்பதை இந்த அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும்.
எனினும் என்னைப் பொருத்தவரை ரில்வின் சில்வாவினுடைய கருத்தை அரசாங்கத்தினுடைய கருத்தாக நான் இதுவரை எடுத்துக் கொள்ளவில்லை.
ரில்வின் சில்வாவினுடைய கருத்துக்கள் தான் அரசாங்கத்தினுடைய கருத்துக்களா என்பதையும், அவருடைய கருத்துக்களின் ஊடாகத்தான் தமிழ் மக்களுடைய அரசியல் தீர்வு அமையப்பெறும் என்பதை, ஜே.வி.பி.யை அதிகளவாக உள்ளடக்கிய தேசிய மக்கள் சக்தி வெளிப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.