பலதும் பத்தும்

சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம் இன்று

உலகளாவிய ரீதியில் அங்கீகாரத்தின் அடிப்படையில் பல தினங்கள் அனுஷ்டிக்கப்படுகின்றன.

அந்த வகையில் இன்று சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.

இது உலக மக்கள் அனைவரும் மாற்றுத் திறனாளிகளின் பிரச்சினைகளைப் புரிந்துகொள்வதற்கும் அவர்களுக்கான மேன்மை மற்றும் உரிமைகள் முறையாக வழங்கப்பட வேண்டும் என்ற நோக்குடன் ஐக்கிய நாடுகள் சபையால் உருவாக்கப்பட்டது.

1981 ஆம் ஆண்டு இந் நாள் தொடர்பிலான கலந்துரையாடலின் பின்னர் 1992 ஆம் ஆண்டு டிசம்பர் 3 ஆம் திகதியை பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் தினமாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது.

அன்றிலிருந்து இத் தினம் அவர்களுக்காக சமர்ப்பிக்கப்படுகிறது.

உலகளவில் 15 சதவீத மக்கள் ஏதாவது ஒரு வகையில் இயலாமையை அனுபவிக்கின்றனர். இதில் 80 வீதமானவர்கள் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் வசிக்கின்றனர்.

மாற்றுத் திறனாளிகளுள் பார்வைக் குறைபாடு உடையோர், கை, கால் குறைபாடு உடையோர், செவித்திறன் குறைந்தோர் மற்றும் பேச இயலாதவர், மனவளர்ச்சி குன்றியவர் மற்றும் தொழுநோய் பாதித்தவர் மற்றும் குணமடைந்தவர் என்று ஐந்து வகையினர் உள்ளனர்.

இவ்வுலகில் மானிடராகப் பிறப்பது என்பது மிகவும் அதிர்ஷ்டமானது. அவ் மானிடப் பிறப்பில் ஊனமோ, அங்கவீனமோ ஒரு குறை அல்ல. ஊனம் மற்றும் அங்கவீனம் என்பது அவரவர் மனதில்தான் உள்ளதே தவிர உடம்பில் இல்லை என்பதை ஒவ்வொருவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

இவ்வுலகில் எத்தனையோ மாற்றுத் திறனாளிகள் தம் உடலில் உள்ள அக் குறையை நிறைவாக்கி வாழ்வில் உச்சத்தை அடைந்துள்ளனர்.

அவ்வாறு சாதித்தவர்களில் ஒரு சில உதாரணங்கள் இதோ….

எல்பர்ட் ஐன்ஸ்டின்

இவர் உலகப் புகழ்பெற்ற கணித மேதை மற்றும் இயற்பியலாளர். மூன்று வயது வரையில் பேச முடியாமல் இருந்தார். வளர்ந்த பின்னரும் கூட இவருக்கு பேசுவது சிரமமாகத்தான் இருந்தது. குறிப்பிட்ட காலம் வரையில் தான் இருப்பார் என்று மருத்துவர்கள் கூறியதையும் தாண்டி வாழ்ந்து சாதித்துக் காட்டியவர். இன்று வரையில் அனைவருக்கும் ஒரு முன்னுதாரணமாக விளங்குகிறார்.

ஹெலன் கெல்லர்

சிறுவயதில் ஏற்பட்ட மர்மக் காய்ச்சலினால் பார்க்கும் திறன், பேச்சு, கேட்கும் திறன் உள்ளிட்ட அனைத்தையும் இழந்தார். பின்னர் சைகை மொழியைக் கற்றுக்கொண்டு பிறருடன் தொடர்புகொள்ளத் தொடங்கியுள்ளார்.

பேச்சு மற்றும் செவித் திறனை இழந்தவர்களுள் முதன் தலில் இளங்கலை பட்டம் பெற்றவர் இவர்.

நாற்பது நாடுகளுக்கு பயணம் செய்து இவரைப் போன்று மாற்றுத்திறன் கொண்ட பலருக்கு சொற்பொழிவுகள் ஆற்றியுள்ளார்.

இவர் மாற்றுத் திறன் கொண்ட மக்களுக்கான போராளியாகவும் கருதப்பட்டார்.

இவரின் பிறந்த தினமான ஜூன் 27 ஆம் திகதி அமெரிக்காவின் ஹெலன் கெல்லர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

மர்லா ருன்யான்

அமெரிக்காவைச் சேர்ந்த இத் தடகள வீராங்களை பார்வையற்றவர். இவர், மாற்றுத் திறனாளிகளுக்கான 5000 மீட்டர் ஓட்டத்தில் மூன்று தடவைகள் உலக செம்பியன் பட்டம் பெற்றார்.

மேலும் மாற்றுத் திறனாளிகளுக்கு நடத்தப்படும் பாராலிம்பிக் போட்டிகளிலும் பல பதக்கங்களை வென்றார்.

இவ்வாறு பல பேரின் பெயர்களை அடுக்கிக்கொண்டே செல்லலாம். அதிலும் வெளியுலகத்துக்கு தெரியாமல் எத்தனையோ மாற்றுத் திறனாளிகள் சொந்த முயற்சி மற்றும் உழைப்பினால் தனக்கான ஒரு இடத்தை தக்கவைத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த டிஜிட்டல் யுகத்தில் மனிதனின் எல்லா பிரச்சினைக்கும் ஒரு முடிவு கிடை்க்கிறது. அதாவது பார்வைக் குறைபாடுடன் இருப்பவர்களுக்கு அவர்கள் படிக்கும் விதத்திலான புதுப்புது செயல்பாடுகள் வந்துவிட்டன.

அதேபோல் அனைத்துக்குமே ஒரு மாற்று வழி கிடைத்துவிட்டது. அவர்களும் சாதாரண மனிதர்கள் போல் வாழ ஆரம்பித்துவிட்டார்கள்.

ஆனால், இதை புரிந்துகொள்ள முடியாத ஒரு சிலர் இன்னமும் அவர்களை இயலாதவர்களாகவும் திக்கற்றவர்களாகவும் நோக்குகிறது.

சில வேளைகளில் சமூகத்தின் இவ்வாறான பார்வைகள் அவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கி அவர்களது திடத்தை உடைக்கலாம்.

எனவே இவ்வாறான சிந்தனை கொண்ட மனிதர்கள் ஒரு விடயத்தை நன்கு புரிந்துகொள்ள வேண்டும். அவர்கள் நம்மை விடவும் திறமையானவர்கள் மனதால் வலிமையானவர்கள் என்று.

எனவே இந்த நாளில் மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைகள் மற்றும் அங்கீகாரம் கிடைக்கும் விதத்தில் அவர்களுக்கு ஒன்றித்து நாமும் பயணிப்போம்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.