தமிழர்கள் நிராகரித்த 13 ஐ கூட விரும்பாத: அநுர அரசாங்கம்!
புதிய அரசாங்கம் புதுப் புது அரசியல் சர்ச்சைகளை முன்வைக்கிறது. நீண்டகால இனப் பிரச்சினையை ஆட்சிக்கு வந்தவுடன் தீர்ப்பதாக உறுதியளித்த அநுர அரசாங்கம் எதுவித நகர்வுகளையும் தற்போது வரையில் மேற்கொள்ளவில்லை. கொள்கை விளக்கவுரையில் கூட இனப்பிரச்சினை விவகாரம் உச்சரிக்கப்படவுமில்லை.
மாறாக, தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு எதிரான விடயங்கள் மாத்திரமே மேற்கொள்ளப்படுகின்றன. அதற்கான ஒரு உதாரணமாக, இலங்கையில் மாகாண சபை முறைமையை முடிவுக்கு கொண்டு வருவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா அறிவித்திருக்கிறார்.
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, இலங்கை முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்தன ஆகியோருக்கிடையே 1987ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29ஆம் திகதி செய்யப்பட்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் அதிகாரப்பரவலாக்கல் முறையாக 13ஆவது திருத்த சட்டம் கொண்டுவரப்பட்டது.
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத் தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் விதத்திலேயே இந்த 13ஆவது திருத்த சட்டம் அமைக்கப்பட்டுள்ளது.
எனினும், ஜே.ஆர் ஜயவர்தன அதனை முழு நாட்டிலும் அமுல்படுத்தியிருந்தார். குறிப்பாக இலங்கைத்தீவு ஒன்பது மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டு மாகாண சபைகள் முறையும் தோற்றுவிக்கப்பட்டது.
இந்திய – இலங்கை ஒப்பந்தத்தன் பிரகாரம் தற்காலிகமாக இணைக்கப்பட்டிருந்த வடக்கு கிழக்கு மாகாணங்கள் தனித்தனி மாகாணங்களாக இருக்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி 2006ஆம் ஆண்டு இலங்கை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தது.
ஆக, அன்றிலிருந்தே இந்திய எதிர்ப்பு வாதத்தை முன்வைத்து வந்த மக்கள் விடுதலை முன்னணி, இன்று வரையில் இந்தியாவின் பிராந்திய விஸ்தரிப்பு கொள்கைகளையும் எதிர்த்து வருகிறது.
13 ஆவது திருத்தச் சட்டமும் அதன் கீழாக மாகாண சபை முறையும் இன நெருக்கடிக்குத் தீர்வல்ல என்று தமிழர்கள் 1987ஆம் ஆண்டே நிராகரித்துவிட்டனர்.
ஆனாலும் அரசியலமைப்பிலுள்ள மாகாண சபை முறைமையை அமுல்படுத்துமாறு கோரி சில தமிழ்த் தேசியக் கட்சிகள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வருகின்ற போதிலும் கூட இன்று வரையில் அதனை நடைமுறைப்படுத்த இலங்கையில் மாறி மாறி ஆட்சி செய்த அரசாங்கங்கள் அனுமதிக்கவில்லை.
எனினும், புதிய அரசாங்கத்திலாவது தமக்கான தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஜனாதிபதித் தேர்தலிலும் சரி, நாடாளுமன்றத் தேர்தலிலும் சரி கணிசமான அளவு தமிழ் மக்கள் அநுர அரசாங்கத்தை தெரிவு செய்திருந்தனர்.
ஆனால் தேசிய மக்கள் சக்தியின் தாய்க்கட்சியான மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தற்போது 13 ஐ நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்ற ஒரு கதையை சொல்லியிருக்கிறார்.
இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணுவதாக வாக்குறுதிகளை வழங்கி விட்டு ஆட்சி அதிகாரத்தை பெற்றுக் கொண்டவுடன் இவ்வாறான கருத்துக்களை முன்வைப்பது ஆட்சியாளர்களின் இயல்புதான். இது ஒன்றும் புதிய கதையல்ல.
முன்னரும் தனியார் தொலைக்காட்சி ஒன்றின் அரசியல் நிகழ்வில் கலந்துக் கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில், தமிழர்களின் பிரச்சினை அரசியல் பிரச்சினை அல்ல என ரில்வின் சில்வா விமர்சனமிக்க கருத்து ஒன்றை முன்வைத்திருந்தார்.
இக் கருத்துகள் புதிய அரசாங்கத்தின் பிராந்திய மைய அரசியலில், யதார்த்த அரசியல் நிலைப்பாடாக தெரியவில்லை.
இவ்விடயம் மிக பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதில் எதுவித சந்தேகங்களும் இல்லை. நாட்டில் பாரிய அரசியல் சர்ச்சைகள் இதனால் தோன்றும்.
புதிய அரசியலமைப்பை கொண்டு வருவதற்கு நாடாளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மை வேண்டும், அநுர அரசாஙகத்திடம் அந்த பெரும்பான்மை உண்டு. இப் பெரும்பான்மை மூலம் தாம் நினைத்ததை எல்லாம் செய்ய முடியும் என ரில்வின் சில்வா நினைப்பாராக இருந்தால், அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் சற்று சிந்திக்க வேண்டும்.
13ஆவது திருத்தத்தை சாதாரண விடயமாக எடுத்துக்கொள்ள முடியாது, இந்திய- இலங்கை ஒப்பந்தத்தின் ஒரு பிரசவம் தான் இந்த 13ஆவது திருத்தம்.
அதனை முற்றாக ஒழிக்க நினைப்பது பிராந்திய அரசியலில் சிறிய நாடான இலங்கையின் எதிர்கால நலன்களுக்கு ஆரோக்கியமானதுமல்ல.
தேசிய மக்கள் சக்தி எனும் பெயரில் ஆட்சிக்கு வந்துள்ள அநுர அரசாங்கமானது ஜே.வி.பி யின் கொள்கைகளை அப்படியே கடைபிடித்து வருகின்றதா என்பது தொடர்பில் பல கேள்விகள் எழுந்துள்ளன.
இந்திய எதிர்ப்புவாதியாக காணப்படும் ஜேவிபி அரசாங்கத்தை பகடைகாயாக பயன்படுத்திக் கொண்டு அநுரகுமார திஸாநாயக்க திரைக்கு பின்னால் பல அரசியல் விளையாட்டுக்களில் ஈடுபடுகிறாரா என பல விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
ஜனாதிபதி தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் மேடைகளில் வழங்கிய வாக்குறுதிகளுக்கு எதிராக தற்போதைய அரசாங்கம் மேற்கொண்டு வரும் இந்த நடவடிக்கைகள் 13 ஐ விரும்பாத தமிழர்களுக்குக் கூட அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
புதிய அரசாங்கம் எந்தவொரு விதத்திலும் தமிழர்களுக்கு தீர்வு வழங்காது என்பது ஆரம்பம் முதலே தெரிந்த ஒரு விடயமாக இருந்தாலும், மாற்றம் எனும் பெயரில் முற்றாக ஒழிக்க நினைப்பது பாதகமான ஒரு சூழல் ஆகும்.
காலங்காலமாக தமிழர்களின் அரசியல் விடுதலை புறம் தள்ளப்பட்டு வரும் பின்னணியில் அரைகுறைத் தீர்வாக உள்ள மாகாண சபைகள் முறைமையை முற்றாக நீக்குவதால் ஏற்படப் போகும் ஆபத்துக்கள், அதிகார கதிரைக்கு புதியவர்களான ஜேவிபியின் முகத் தோற்றமாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினர் அறியாததல்ல.
அநுர, ரில்வின் சில்வாவின் ஆலோசனைகளை பின்பற்றி வருவாராக இருந்தால் இலங்கைத்தீவு இனரீதியாக பல சர்ச்சைகளுக்கு முகங்கொடுக்கும் என்பது பகிரங்கம்.
இலங்கைத்தீவு பன்முகத் தன்மை கொண்ட ஆட்சி முறையை தெரிவு செய்யவில்லையானால் பொருளாதார முன்னேற்றமும் சாத்தியப்படாது.