அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியா வருகிறார் புடின்; உறுதி செய்த ரஷியா
ரஷிய அதிபர் விளாடிமிர் புடின் இந்தியாவுக்கு வருகை தருமாறு பிரதமர் நரேந்திர மோடி முறைப்படி அழைப்பு விடுத்துள்ளதாகவும், அவரது வருகைக்கான தேதிகள் 2025 ம் ஆண்டின் தொடக்கத்தில் நிர்ணயிக்கப்படும் என்றும் கிரெம்ளின் மாளிகை தெரிவித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு புதினின் இந்தியா வருகை குறித்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.
இதன்படி அவர் அடுத்த ஆண்டு குவாட் உச்சிமாநாட்டிற்காக இந்தியாவுக்கு வருகை தருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இது தொடர்பாக கிரெம்ளின் மாளிகை அதிகாரி யுரி உஷாகோவ் கூறுகையில், ‘நமது தலைவர்கள் இருவரும் ஆண்டுக்கு ஒருமுறையாவது சந்திக்க வேண்டும் என முடிவு செய்துள்ளனர்.
தற்போது எங்கள் முறை. பிரதமர் மோடியின் அழைப்பை பெற்றுள்ளோம். நிச்சயம் இதை நேர்மறையாக பரிசீலிப்போம். அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்த பயணம் அமையும் வகையில் தேதிகளை முடிவு செய்வோம்’ என்று அவர் கூறினார்.முன்னதாக கடந்த ஜூலை மாதம் 2 மாத பயணமாக பிரதமர் மோடி ரஷியா சென்றிருந்தார்.
அங்கு நடந்த 22-வது ரஷியா-இந்தியா உச்சி மாநாட்டிலும் பங்கேற்றார். அப்போது இந்தியாவுக்கு வருமாறு புதினுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார். இதனை கிரெம்ளின் மாளிகை தற்போது உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.