”நெகிழிப்பூ”… சிறுகதை -95… அண்டனூர் சுரா
சென்னை வணிக வளாகங்களில் ஆகப்பெரிய வளாகம் இதுதான். பத்து சொகுசு கப்பல்களை ஒரே இடத்தில் நிறுத்தி அவற்றை ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்கி அதை வெள்ளைப் பர்தாக்கொண்டு மூடியதைப் போன்றதொரு பிரமாண்டம். அந்த வளாகம் பல ஏக்கர் நிலத்தை விழுங்கி கட்டடங்களின் நாட்டாமைக்காரராக நின்றிருந்தது. மேகத்தைத் தழுவிய மேற்கூரை. நான்கு திசைகளும் எனக்கே எனக்கா என்று நீள, அகலங்கள் .
சுந்தரி அந்த வளாகத்தையும் அதைத் தழுவிய மேகத்தையும் ஒரு சேரப் பார்த்தாள். மேகத்துடன் கைக்கோர்த்துக்கொண்ட அந்த வளாகம் கப்பலைப் போல நகர்ந்து அவளுக்குப் பிரமிப்பைக் கொடுத்தது. பங்குனி உத்திரம் திருவிழாவைப் போல மனிதக் கூட்டம். வாயில் ஒவ்வொன்றும் வரிசையில் நீண்டுக்கிடந்தது. இளைய தகப்பன்கள் கங்காருவைப் போல குழந்தையை வயிற்றில் கட்டிக்கொண்டும், பொதியை முதுகில் சுமந்துக்கொண்டும் வளாகத்திற்குள் நுழைந்தார்கள். அந்த நீண்ட வரிசை மலைப்பாம்பு ஊர்வதைப் போலவும் சாவிக்கொடுக்கப்பட்ட பொம்மைகளைப் போலவும் ஊர்ந்தது.
“அம்மா…“
வேகம், பரபரப்பு, நெருக்கடி, வாகன இரைச்சல் , நடைப்பாதைக் கூப்பாடு இத்தனைக்குமிடையில் அந்த அழைப்பு அவளது காதிற்குள் நுழைந்தது. பதிலுக்கு அவள் எதிர்க்குரல் கொடுத்தாள்,“ பாலு…”
“விரைசா வாம்மா“
“இதோ வந்துட்டேன்டி ராசா“
அவளது முகத்தில் பூத்திருந்த வியர்வைத் துளிகளை முந்தானையால் ஒத்தியெடுத்து வரிசையில் முண்டியடித்து நீர்க்குழாயடியில் குடத்திற்கிடையில் குடம் நுழைவதைப் போல நுழைந்து மகன் கையை பற்றிவிட்டாள் சுந்தரி.
“பராக்குப் பார்க்காம என் பின்னேயே நீ வரமாட்டீயாம்மா.“
“என்னப்பா பாலு, வேடிக்கை பார்க்க அழைச்சிக்கிட்டு வந்திட்டு இதைப் பார்க்காதே, அதைப் பார்க்காதேனு சொன்னா எப்படிப்பா“ என்றபடி மகன் கையை மேலும் இறுகப் பற்றினாள்.
“அம்மா, இப்படியெல்லாம் பராக் பார்த்தே கூட்டத்திலே தொலைஞ்சிப்போயிடுவே”
சுந்தரி, மகனை வியப்போடு பார்த்தாள். காலத்திற்கு கை, கால்கள் நீண்டு, மீசை முளைத்து மகன் வடிவில் நின்று பேசுவதைப் போலிருந்தது. பாலு பொடிப்பயலாக இருக்கையில் ஒரு வருடம் பங்குனி உத்திரம் திருவிழாவின்போது சுந்தரி தாயாக மகனுக்குச் சொன்ன அறிவுரை இது. அதே தொனியில் நாக்கை கடித்துக்கொண்டு சொன்னது காலம் பதிலடி கொடுப்பதைப் போலிருந்தது. சுந்தரி பெரு மூச்சு விட்டுக்கொண்டாள்.
வானத்தை எட்டிப்பிடிக்கும் உயரத்தில் ஒரு பெரிய திரை. அதில் கண்களைப் பறிக்கும்படியான திரைக்காட்சி ஓடிக்கொண்டிருந்தது. அதைக்கண்டதும் சுந்தரிக்கு கோயில் திருவிழா ஞாபகம். திரைக்கு நேர் எதிரே அமர்ந்து பாய் விரித்து இடம் பிடித்து கணவனுடன் ஜெமினி கணேசன் படம் பார்த்த நினைவுகள் அவளை ஆட்கொண்டது.
தொலைக்காட்சிகள் வந்ததன் பிறகு திரைப்படச் சுருள்கள் போன இடம் தெரியவில்லை. எட்டு நாள் ஊர்த் திருவிழாவும் அதில் திரையிடும் மும்மூன்று திரைப்படங்களும் எங்கேயோ சென்று தன் தலை வாலைச் சுருட்டிக்கொண்டது. விடிய விடிய ஓடியத் திரைப்படங்கள் பாட்டுக்கச்சேரியாகி அதுவும் மூன்று மணி அளவிற்குள் படுத்து விட்டது. இவ்ளோ பெரிய ஊரில் இந்தக் காலத்திலும் திரைப்படமா? அதுவும் இவ்ளோ உயர, நீளத்தில்? சுந்தரி முகத்தில் சந்தோஷ ரேகைகள். திரைக்காட்சி இடத்தை நோக்கிப் பாய்ந்தாள்.
வாலிப பையன்கள் சோடியாக நொறுக்குத்தீனி தின்றபடி ஆங்காங்கே நின்று திரையை பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர்களை நெருங்கிய சுந்தரி கையில் வைத்திருந்த துண்டை விரித்து மகனுக்கும் சேர்த்து இடம் பிடித்தாள். “பாலு, வெரசா வா. ஒனக்கும் சேர்த்து இடம் பிடிச்சிருக்கேன் “ மகிழ்ச்சி வெள்ளத்தில் கூக்குரலிட்டாள் சுந்தரி.
பாலு அம்மாவை நோக்கி ஓடி வந்தான். அவனது முகம் அவமான ரேகை தழும்பியிருந்தது. நகர வாலிபம் கைக்கொட்டி சிரிப்பதைப் போன்ற மென்னுணர்வு.
“பாலு, வெரசா வாப்பா “
“அம்மா, என்ன காரியம் பண்ணிருக்கே. இது என்ன ஊர்த் திருவிழாவா? “
“ பின்னே இல்லேயா?“
“ அய்யோ அம்மா ! இது ஷாப்பிங் ஹால்“
“ சாப்பிடுற இடமா?“
“சாப்பிடுற இடமில்ல. ஷாப்பிங் ஹால். பொருள்கள் வாங்குற இடம்“
“சந்தையா?“
“ஆமாம். அப்படித்தான்.“
“ உப்பு , மிளகாய், சீரகம், சோம்பு எல்லாம் வாங்கலாமா?“
“ஒனக்கு அதை விட்டா வேற பொருளே தெரியாதா? செல்போன், டீவி , கிரைண்டர், செப்பல்,…இன்னும் இந்த ஒலகத்தல என்னென்ன பொருட்கள் இருக்கோ அவ்வளவையும் வாங்குற இடம்.“
“இருக்கட்டுமே, அதுக்காக இந்தப் படத்தை பார்க்கக்கூடாதுனு இருக்கா?“
“அம்மா, ஓடுறது படமில்ல. விளம்பரம்.”
நமத்துப்போன அப்பளமாக அவளது முகம் மாறியது. சுந்தரி சட்டென அந்த இடத்தை விட்டு எழுந்துவிட்டாள். கையில் வைத்திருந்த கத்திரிப்பூ துண்டை சுருட்டி உள்ளங்கைக்குள் வைத்துக்கொண்டாள்.
‘ குபுக், குபக்’ என்றவாறு ஒரு மெல்லிய ஒலி அவளுக்கு கேட்டது. அந்த ஒலி வந்த திசையில் பார்வையை ஓடவிட்டாள். அவள் நின்றிருந்த இடத்திற்கும் சற்றருகில் தண்ணீர் மேலே எழும்புவதும் அடங்குவதுமாக இருந்தது.
“பாலு, இங்கே குடம் வாங்கலாமா?“
“எங்கே போனாலும், குடம், விளக்குமாறு, பாய், உப்பு, மிளகாய்தான் தெரியுமா?“
“என்ன கேட்டுட்டேனு இப்ப நீ இப்படி கோபிச்சுக்கிறே?”
“குடம் வாங்கலாம். சில்வர் , வெள்ளி , தங்கத்துலதான் வாங்கலாம்.“
“ரப்பர்க்குடம் ஒன்னு வாங்கலாமுனு பார்த்தேன்.“
“இப்ப ஏன் உனக்கு ரப்பர் குடம்?“
“ அதோ பார். வாட்டர் டேங்கல தண்ணீர் தொறந்து விட்டுட்டாங்க. தண்ணீ புஸ் , புஸ்னு அடிக்குது.“
பாலு தலையில் கையை வைத்தப்படி அதே இடத்தில் உட்கார்ந்து விட்டான். அவனுக்கான உலகம் மேலும் கீழுமாக சுத்தியது. “காலேஜ்க்குப் படிக்க வந்தோம்மா, படிச்சோமா, பாஸ் பண்ணுனோமானு இல்லாமல் அம்மாவை அழைச்சிக்கிட்டு வந்து இந்தப் பட்டணத்தைச் சுத்திக் காட்டிக்கிட்டுருக்கேனே, என்னைச் சொல்லணும். எனக்கு இதுவும் வேணும், இதுக்கு மேலேயும் வேணும்…“ என்றவனாய் தன்னையே அவன் மனதிற்குள் திட்டிக்கொண்டான்.
“பாலு, தண்ணி தெவிக்குது. அதில் இறங்கிக் குடிக்கட்டுமா?“
“இது என்ன குடி தண்ணீர் பைப்பாம்மா ?“
“பின்னே இல்லையா ?“
“அது வீழ்ச்சிம்மா. நீர் வீழ்ச்சி. அழகுக்காக வச்சிருக்காங்க.“
சுந்தரியின் நெற்றி தலைக்கு ஏறி இறங்கியது. வீழ்ச்சியை அவள் கண்ணொட்டி பார்த்தாள்.
“நம்ம காவிரிக்குத் தண்ணிய இந்தா விடுறேன், அந்தா விடுறேனு கர்நாடகப் பயல்க நாடகம் காட்டுறான்க. இந்த ஊர்ல தண்ணியை வச்சி வித்தைக் காட்டுறாங்க. சரி, எனக்குத் தாகமாருக்கே. குடிக்கத் தண்ணி வேணுமே.“
பாலு அவசரமாக சட்டைப் பையை துலாவி சில்லறைக் காசுகளைப் பொறுக்கினான். தண்ணீர் பாட்டில் வாங்க ஒரு ரூபாய் குறைந்தது.
“அம்மா, உன்னக்கிட்ட ஒரு ரூபாய் இருந்துச்சே அதைக் கொடு“
“இல்லையேப்பா “
“எங்க?“
“அதோ! அவங்களுக்கு போட்டுட்டேன்“
“யாருக்கு?“ என்றவனாய் எட்டிப் பார்த்தான் பாலு.
“அதோ, அங்கே பாட்டுப் படிக்குறாங்களே அவங்களுக்கு….“
பாலுக்குத் தலைச் சுற்றியது. பூதத்திடம் மாட்டிக்கொண்ட உணர்வு. ‘புஸ் , புஸ்’ என்று பெருமூச்சு விட்டுக்கொண்டான். ஏன் தான் அம்மா இப்படி நடந்துக்கிறாள்? எண்ணைக்குள் விழுந்த கடுகைப்போல வெடிக்கணும் போலிருந்தது. நாசி, வாய் உதடுகளில் முட்டிய கோபத்தை எச்சிலாகத் தொண்டைக்குள் விழுங்கிக்கொண்டான்.
சுந்தரியின் முகம் கோணியது. மகன் முகம் சுழிக்கும்படியாக நடந்துக்கிறேனே என்று வருந்தியவள், “பாலு, நான் செய்ததென்ன தப்பா?” கேட்டாள்.
“பின்னே இல்லையா?”
“என்ன தப்பு?“
“உன்னை யாரு அவங்களுக்கு காசுப் போடச் சொன்னா?“
“ பாட்டுப்படிக்கிறவங்களுக்கு நம்ம ஊர்ல காசு போட மாட்டோமா?“
“அவங்களா இவங்க?“
“பின்னே இல்லையா! ”
“அவங்க சர்க்கஸ்க்காரங்க. இவங்க ஆர்க்கேஸ்ட்ராக்காரங்க“
“எனக்கு என்னத் தெரியும். நீ சொல்லிக் கூட்டிக்கிட்டு வந்திருக்கணும்.“ அதன்பிறகு சில நிமிடங்கள் ஊமையாக கரைந்தன.
இருவரும் வணிக அறைகளுக்குள் நுழைந்தார்கள். தானியங்கி படியில் ஏறுகையில் அம்மாவின் கையை அவன் இறுகப் பற்றிக்கொண்டான். பல கடைகளுக்கு அழைத்துச்சென்று பல இடங்களை சுற்றிக்காட்டினான். கடைகளில் நின்றுக்கொண்டிருந்த வெள்ளைத் தோல் ஆண், பெண்களும் அவர்களை மொய்க்கும் மனிதக் கூட்டமும் சுந்தரிக்கு வேடிக்கையாகத் தெரிந்தார்கள். மகனை அவள் பின்தொடர்ந்துகொண்டே அவள் சுற்றும்முற்றும் பார்த்தாள். மகனுக்கு மட்டும் கேட்கும் படியாக அவனது காதிற்குள் கிசுகிசுத்தாள். “நான் தனியா போயிட்டு வரணும்ப்பா.“
பாலுக்குப் புரிந்துவிட்டது. அவனுக்கும்கூட போகவேணும் போலிருந்தது. அம்மாவை அழைத்துக்கொண்டு ஒரு அறைக்குள் நுழைந்தான். ஆண்களும் பெண்களும் கைகளைக் கோர்த்துக்கொண்டு அந்த அறைக்குள் நுழைவதும், வெளியேறுவதுமாக இருந்தார்கள்.
“இப்ப நீ எங்கே அழைச்சிக்கிட்டு போறே?“
“டாய்லெட்க்கு“
“பாலு இப்ப நான் அவசரமா கக்கூஸ் போயாகணும்.“
“சத்தம் போடாதேம்மா. அங்கேதான் அழைச்சிக்கிட்டு போறேன்.“
“ஆம்பளைங்க போறதும் , வாரதுமாக இருக்காங்க. இதுக்குள்ளே அழைச்சிக்கிட்டு போறே?”
“இங்கே இப்படித்தான்,…“ என்றபடி ஒரு அறைக்குள் அம்மாவை அனுப்பிவிட்டு பக்கத்து அறைக்குள் பாலு நுழைந்துக்கொண்டான். வெளியே கைக்கழுவிக்கொண்டு கேட்டாள் சுந்தரி. “என்ன உலகமடா இது?“
“ஏன்ம்மா?“
“ஆண்களும் பெண்களும் பக்கத்து பக்கத்துல நின்னு முகம் கழுவுறதும் தலை சீவிக்கிறதும். அதுவும் ஒரே அறைக்குள்ளே. அப்பப்பா… இதுக்கு மேல ஒரு நாழிகை இங்கே என்னால் இருக்க முடியாது. வா போயிடலாம்,…“
“சாப்பிட்டு போயிடுவோம்மா“
“வெளியே வேற கடையில சாப்பிடலாம்“
“டீ மட்டுமாவது சாப்பிடுவோம்.”
“சரி. அதன்னா வாங்கிக்கொடு.“
சற்றுநேரத்தில் அவர்களின் மேஜைக்கு தேனீர்க்கோப்பை வந்தது. சுந்தரி அதை ஆற்றிக்கொண்டே வேடிக்கை பார்த்தாள். பாலு மெல்ல தேனீரை பருகிக்கொண்டிருந்தான்.
“அம்மா, இது நம்ம ஊர் டீயைப் போல சாதா டீ இல்ல. பஸ்ட் குவாலிட்டி தூள்ல போட்டது.“
“அப்படின்னா ?“
“கலப்பிடமில்லாத டீத்தூள்ல போட்ட டீ.“
“இந்த டீத்தூள் எங்கிருந்து வருது பாலு?“
“வெளிநாட்டிலிருந்து“
“அதான், அதான். குடிக்க நல்லாருக்கு“
“டீத்தூள் மட்டுமில்லம்மா. இங்கே இருக்கிற எல்லா பொருளுமே வெளிநாட்டிலிருந்து வந்ததுதான்.“
“அப்படியா ராசா ?“
” எல்லாமே தரமான பொருளுங்க. எதுவுமே போலிக் கிடையாது.“
இருவரும் பேசிக்கொண்டு வணிக வளாகத்தை ஒரு சுற்று வந்து ஒவ்வொரு தளமாக ஏறி இறங்கினார்கள். ஓரிடத்தில் கூட்ட நெரிசலாக இருந்தது. அக்கூட்டத்தை விலக்கி கீழ்த்தளத்திற்கு வந்து அம்மாவைத் தேடினான் பாலு. அம்மா அவனோடு இல்லை.
அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. நெரிசலுக்கிடையில் தலையை நீட்டி நாலாபுறமும் தேடினான். அடித்து விடப்பட்ட எலியைப் போல ஓடித் துலாவினான். அம்மாவை அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை. அம்மா பற்றிய பயம் பதட்டமாக முகத்தில் ஒட்டிக்கொண்டது. முகத்திலும் உடம்பிலும் வியர்வைக் காடுகள். தேடலுக்கிடையில் அம்மாவை அழைத்தான். “அம்மா…”
அழைப்புகள் இரைச்சலில் கரைந்து சக்கையாக அவனிடம் திரும்பி வந்தது. உதடுகள் துடித்தன. விரல்களைப் பிசைந்துக்கொண்டான். கீழ்த்தளத்திலிருந்து ஒவ்வொரு தளமாக ஏறி எட்டிப்பார்த்தான். அவனால் அம்மாவைக் கண்டுபிடிக்க முடியவில்லை. மேல் தளத்திலிருந்து ஒவ்வொரு தளமாக கீழே எட்டிப் பார்த்தபடி கீழ் நோக்கி ஓடிவந்தான். இரண்டாவது தளத்திலிருந்து பார்க்கையில் தரைத்தளத்தில் ஓரிடத்தில் மக்கள் கதம்பமாக கூடியிருந்தார்கள். அந்த இடத்தில் பார்வையைக் குவித்தான்.
சீருடை அணிந்திருந்த ஒரு பெண் ஒரு மூதாட்டியை அறைந்துக்கொண்டிருந்தாள். அவனது இதயம் வேகமாக அடித்துக்கொண்டது. உதடுகளில் பொதும்பல். மனதிற்கள் நெறுநெறுப்பு. அறை வாங்கிய அந்த மூதாட்டி யாரென்று பார்த்தான். அம், அம், அம்மாவேதான். கால்களில் இறக்கை முளைக்க வேகமாக கீழ்த்தளத்தை நோக்கி ஓடிவந்தான்.
அந்த இடத்தை நெருங்குகையில் குழுமியிருந்த கூட்டம் கலைந்து, சீருடை அணிந்த அந்த பெண் மட்டும் தனியாக நின்றுக்கொண்டிருந்தாள். என்ன திமிர் இவளுக்கு! என் அம்மாவை அடித்திருக்கிறாள். அவள் மீதான கோபத்தில் அவளை என்னவேணும் செய்யவேண்டும் போலிருந்தது. அக்கோபத்தைச் சட்டென முறித்து அம்மாவைத் தேடுவதில் கவனம் செலுத்தினான். அம்மாவை அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை.
அம்மா மீதான கோபம் கற்றையாக முகத்தில் அப்பிக்கொண்டது. அறைந்த அந்த பெண்ணிடம் கேட்டான் “ ஏன் என் அம்மாவை அடிச்சாய்?“
அவள் என்னவோ சொன்னாள். அவள் சொன்ன மொழி இவனுக்குப் புரியவில்லை. இரண்டொரு நிமிடங்கள் அவளை எரித்துவிடுவதைப் போல பார்த்தவன் மீண்டும் அம்மாவை தேடத்தொடங்கினான். பம்பரமாக சுற்றி இரவு, மறுநாள் என்று தேடினான். தேடும் படலம் இரண்டு நாட்கள் வரை நீண்டது.
மூன்றாம் நாள் அவனது கிராமத்திலிருந்து அவனுக்கு தொலைபேசி அழைப்பு வந்தது.
“பாலு..“
அந்த அழைப்பு கேட்க இதமாக இருந்தது. இத்தனை நாட்கள் நெஞ்சைப் படபடக்க வைத்த பதைப்பு அம்சடங்கி வந்தது. தலை முதல் பாதம் வரை ஜில் உணர்வு. உதடுகளில் படபடப்பு.
“அம்மா! “ அவனது உதடுகள் படபடத்தன.
“பாலு, என்னை நீ மன்னிச்சிடுப்பா. என்னை நீ தேடியதை நான் மனசு பதைக்க பார்த்தேன்தான். உன்னோட அம்மா நான்னு காட்டிக்க மனசு இடங்கொடுக்கலப்பா. என்னோட உன்னையும் பார்த்தா சனங்க உன்னை தப்பா நினைப்பாங்கனு உன் கண்ணுல படாம, பட்டணத்து ஜனங்கக்கிட்ட வழி கேட்டு பஸ் பிடிச்சு ஊருக்கு வந்து சேர்ந்திட்டேன்ப்பா.
பாலு, திருடி வைக்கிற பூச்செடி நல்லா பூக்குமேனு ஒரு பூச்செடிய பிடுங்கினேன். நான் உலக மகாத் திருடினு நினைச்சு அந்தப் பொண்ணு என் கன்னத்திலே அறைஞ்சிட்டாள். அறைஞ்சாலும் அந்த மகராசி நான் பிடுங்கிய பூச்செடிய என்க்கிட்டேயே கொடுத்துட்டாள்.
பாலு, நீ சொன்னேல. இங்க கிடைக்கிறது எதுவும் போலியில்ல, எல்லாமே நிஜம்னு. அதனாலேதான் அந்த பூஞ்செடியில ஒன்னப் பிடுங்கினேன்.
நான் செஞ்சது தப்புதான் ராசா. என்னவோ அந்தப் பூவப் பார்த்ததும் எனக்கு அதன்மேல அப்படியொரு ஆசை வந்திருச்சு.
அந்தப் பூச்செடிய தண்ணீக் குடத்தடியில நட்டு வச்சிருக்கேன். நீ சொன்னது போல அது வெளிச்சீமை செடிதான். நான் ஊர் வந்து சேருகிற வரைக்கும் அதோட இலை வாடல. பூ உதிரல. நம்ம வீட்டு ஆடு மாடுககூட அதிலே வாய் வைக்கல. நீ ஊருக்கு வாரப்ப அது என்னப் பூனு கேட்டுக்கிட்டு வா ராசா..”
பேசி முடித்து அலைபேசியைத் துண்டித்தாள் சுந்தரி. பாலுவின் கண்களில் அம்மாவின் முகம் நிழலாடியது.
நிகழ்வுகளின் ஒப்பீடுகள் எல்லாம் ஒரு பானைச் சோற்று பதமாக்கப்பட்டது மொத்தத்தில் நெகிழிப்பூ நெகிழ்ந்து கண்டேன் பூரிப்பு. 👌👏👏👏🙏🙏💐💐❤️❤️