கோட்டாபயவின் ஆட்சித் தன்மை அநுரவிடம் தெரிகிறதா?: வேறுபாடுகள் எதுவும் அடையாளம் காணப்படவில்லை
2015ஆம் ஆண்டில் தோல்வியடைந்ததன் பின்னர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை 2016 ஆம் ஆண்டு பெப்ரவரில் பசில் ராஜபக்ச உருவாக்கினார். அதன் ஊடாக கோட்டாபய ராஜபக்ச முன்லைப்படுத்தப்பட்டார்.
கோட்டாபயவும் பல மாற்றங்களை மேற்கொண்டார். பொதுஜன பெரமுன கட்சியில் படித்த, அறிவுள்ள இளைஞர்களை அறிமுகப்படுத்தியிருந்தார்.
அநுரகுமார திஸாநாயக்கவும் கூட 3 வீதமாக இருந்த ஜேவிபி யை மீள கட்டியெழுப்பி ஜேவிபியின் மற்றுமொரு முகமாக தேசிய மக்கள் சக்தி எனும் பெயரில் அறிவுள்ள, கற்ற, புதிய இளைய முகங்களை அறிமுகப்படுத்தினார். கோட்டபய ராஜபக்ச அரசாங்கத்தில் பெண்களுக்கு வழங்கப்பட்ட முன்னுரிமையைப் போலவே அநுரகுமார திஸாநாயக்கவின் அரசாங்கத்திலும் பெண்களுக்கு அதிக முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. அதற்கான சிறந்த உதாரணமாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய காணப்படுகிறார்.
ஜனாதிபதித் தேர்தல் திகதிகள் அறிவிக்கப்படுவதற்கு முன்னரே பிரசாரங்களை ஆரம்பித்த அநுரகுமார திஸாநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி உள்நாட்டை விட வெளிநாடுகளில் பிரசார நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டது. அதன்பிரதிபலனாக ஜனாதிபதி தேர்தலுக்கு தமது வாக்குகளை அளிக்க வெளிநாட்டிலிருந்து பெரும்பாலானோர் வருகைதந்திருந்தனர். இதே பிரசார நடவடிக்கை தான் கோட்டாபய ராஜபக்சவும் கையாண்டிருந்தார்.
பல கோடீஸ்வர வர்த்தகர்கள் தனக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர் என்பதை கோட்டாபய வெளிப்படுத்தியிருந்ததுடன், அநுரகுமார திஸாநாயக்கவும் அந்த வழிமுறையையே பின்பற்றியிருந்தார்.
கோட்டாபயவின் வர்த்தக மாநாடுகளுக்கு வருகைத்தந்திருந்த அதே வர்த்தகர்கள் அநுரகுமார திஸாநாயக்கவின் வர்த்தக மாநாடுகளுக்கு வருகைத் தந்தமை இதில் சிறப்பம்சமாகும்.
கோட்டாபயவின் சிறந்த உத்தியாக சமூக வலைத்தளங்கள் காணப்பட்டன. சமூக வலைத்தளங்களில் எதிர்க்கட்சி தரப்பினரை விமர்சித்து மக்கள் ஆதரவை பெற்றுக்கொண்டார் அதேபோல அநுரகுமார திஸாநாயக்கவின் வெற்றிக்கு முகுகெலும்பாக சமூக வலைத்தளங்கள் காணப்பட்டன. அதனை அவர்களும் பகிரங்கமாகவே ஏற்றுக்கொண்டனர்.
இதேவேளை, கோட்டபய ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் அவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் நாட்டில் இராணுவ ஆட்சி தலைதூக்கும் என்ற விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், அநுரவுக்கும் பழைய ஜேவிபி இயக்கம் மீள கொண்டுவரப்படும் என்ற விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இருவருக்கும் அரச அதிகாரத்திலும், ஆட்சியிலும் அனுபவமின்மை என்பது குறையாகவே பார்க்கப்பட்டது.
உண்மையிலேயே, கோட்டாபய ராஜபக்ச அரசியலுக்கு புதியவர். அவரது ஆட்சியின் போது அவருக்கு ஆலோசனை வழங்கியர்வர்களினாலேயே நாடு இந்த நிலைக்கு தள்ளப்பட்டது. கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவி வகிக்க திரைக்கு பின்னால் இருந்து ரணில் பல ஆதரவுகளை வழங்கியிருந்தார். அநுர ஆட்சியை உருவாக்கவும் ரணிலின் பங்களிப்புகள் இல்லாமல் இல்லை.
இவ்வாறு கோட்டபாய ராஜபக்ச, அநுரகுமார திஸாநாயக்க ஆகிய இருவரின் அணுகுமுறைகள் பலவற்றில் ஒத்துப்போகும் தன்மை காணப்படும் நிலையில், ஆட்சி முறையிலும் பெரிதான வேறுபாடுகள் எதுவும் இந்த இரண்டு மாத காலப்பகுதிக்குள் அடையாளம் காணப்பட்டதாக தெரியவில்லை.
மத்திய வங்கியை கொள்யைடித்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதாக கூறியே கோட்டாபய ராஜபக்ச மக்கள் ஆணையை வென்றார். அதேபோல, அநுரகுமார திஸாநாயக்க உயிர்த்த ஞாயிறு தாக்குதல் உள்ளிட்ட பல சர்ச்சைக்குரிய விடயங்களுக்கு தீர்வு காணுவதாக கூறி மக்கள் வாக்குகளைப் பெற்றார்.
எனினும், கோட்டாபயவின் ஆட்சி முறைச் சாயலை பின்பற்றும் அநுரவுக்கும் நாட்டை அரசியல் – பொருளாதார ரீயில் கட்டியெழுப்ப முடியாமல் போய்விடுமா என்ற கேள்வி தற்போது விஞ்சியுள்ளன.
கோட்டாபயவுக்கு அரசியலில் பெரிதாக அனுபவம் இருக்கவில்லை. ஆனால் சந்திரிக்கா, மகிந்த ராஜபக்ச ஆகியோருடன் அரசியலில் ஈடுபட்ட அனுபவம் அநுரவுக்கு உண்டு.
மக்கள் வாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்காக தேர்தல் மேடைகளில் பல உறுதிமொழிகளையும், வாக்குறுதிகளையும் வழங்கிய ஜேவிபியின் முகத்தோற்றம் கொண்ட தேசிய மக்கள் சக்தி, அவற்றுள் எதனையும் இதுவரையில் நிறைவேற்றவில்லை. நிறைவேற்ற அவர்களிடம் எந்தத் திட்டமும் இல்லை என்பது தற்போது தெளிவாகியுள்ளது.
ரணிலின் ஆட்சியில் ஐ.எம்.எப். எனப்படும் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு முழுவதுமாக எதிர்ப்பு தெரிவித்த அநுர தரப்பு இன்று ஆட்சிக்கு வந்ததும் அதற்கு எதுவித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.
ஆக, அவர்களின் கொள்கைகளுக்கும், அதனை நடைமுறைக்குட்படுத்துவதற்கும் இடையே பாரிய இடைவெளிகள் – சிக்கல்கள் காணப்படுவதை அநுர அரசாங்கம் தற்போது உணர ஆரம்பித்துள்ளது. அதேபோல கிடைத்த அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்ள அநுர அரசாங்கம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் என்பதில் எதுவித சந்தேகங்களும் இல்லை.
இலங்கையின் பொருளாதாரத்தை பரிசீலனை செய்து பார்க்கக்கூடிய நேரம் இதுவல்ல என்பதை அநுரகுமார திஸாநாயக்க பல இடங்களில் வெளிப்படையாகவே தெரிவித்திருந்தார். எனினும், அநுரவிடம் தெளிவான ஒரு பொருளாதார நோக்கம் இல்லை என்பது தெளிவாகிறது. அன்று தொடக்கம் சீனாவின் அரசியல் கொள்கைகள் தொடர்பில் அதிக ஈடுபாடு கொண்ட ஜேவிபி, தற்போது தேசிய மக்கள் சக்தி எனும் பெயரில் ஆட்சி அமைத்துள்ளது.
சீனாவில் காணப்படும் பொதுஉடைமை கட்சி அதாவது கட்சிக்குள் அரசு, அரசுக்குள் கட்சி என்ற நிலைப்பாட்டுடனான ஒரு ஆட்சியை அமைக்க வேண்டும் என்ற ஆசையும் தேசிய மக்கள் சக்தியிடம் இல்லாமலில்லை.
எவ்வாறாயினும், நாட்டின் பொருளாதாரம் என்பது சீரான பாதையில் பயணிக்க வேண்டும் அதனையே மக்கள் விரும்புகின்றனர். 76 வருடங்களாக மக்கள் பணத்தை கொள்ளையடித்த அரசியல் ஊழல்வாதிகளை தூக்கியெறிந்து மக்கள் அநுரவை தேர்ந்தெடுக்க காரணம் ஒரு வாய்ப்பை வழங்குவதற்காக மாத்திரமே. அநுரவின் கொள்கைகள் மக்களின் அடிப்படை தேவைகளுடன் ஒன்றியதாக அமைந்திருந்தது. அதுவே, அநுர கோரிய மாற்றத்துக்கும் மக்கள் வழங்கிய மாற்றத்துக்கும் அதுதான் காரணமாக இருந்தது.
தற்போது ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள அநுரகுமார திஸாநாயக்க, யாருடைய ஆலோசனைகளை செவிமடுக்க போகிறார் என்பதை பொறுத்துதான் அவருடைய ஆட்சி நிலைக்குமா என்ற பலருடைய கேள்விகளுக்குப் பதில் கிடைக்கும்.
நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் தேசிய மக்கள் சக்தி மற்றும் டில்வின் சில்வா தலைமை தாங்கும் ஜேவிபிக்கும் இடையே யாருடைய ஆலோசனைக்கு செவிமடுப்பது என்றொரு சிக்கல் அநுரவுக்கு நிச்சியம் ஏற்படும். ஏற்பட்டுள்ளது எனவும் கூறலாம்.
ஆக, ஆலோசனைகளும், அதற்கேற்ற நடவடிக்கைகளும் தவறும் பட்சத்தில் மக்கள் மறுபடியும் வீதிக்கு இறங்க தயங்க மாட்டார்கள் என்பதையும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்.