ஏவுகணைத் தடுப்பு ஆயுதம்: தென்கொரியாவின் புதிய படைப்பு
ஏவுகணைத் தாக்குதலை எதிர்கொள்ள தற்காப்பு ஆயுதத்தை உருவாக்கியுள்ளதாக தென்கொரியா அறிவித்துள்ளது.
அண்டை நாடான வடகொரியாவின் அணுவாயுத அச்சுறுத்தல்களுக்காக அந்த ஆயுதம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்.எஸ்.ஏ.எம் எனப்படும் இந்த ஆயுதத்தைக் கொண்டு தங்களை நோக்கி வரும் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களைத் தடுக்க முடியும்.
சுமார் 10 ஆண்டுகளாக இந்த ஆயுதம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஒரே நேரத்தில் பல எல்எஸ்ஏம் தற்காப்பு ஆயுதங்களை உருவாக்குவதற்கான பணிகள் 2025ஆம் ஆண்டு தொடங்கும் என்றும் தென்கொரியா தெரிவித்துள்ளது.
இந்த அதிநவீன ஆயுதத்தினூடாக உயரத்தில் செல்லும் ஏவுகணைகளைத் தடுத்து நிலத்துக்கு ஏற்படக்கூடிய சேதத்தைக் குறைக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் தங்கள் இராணுவத்தால் மேலும் உயரமான பகுதிகளிலும் தற்காப்பு நடவடிக்கைகளில் ஈடுபட முடியும் என தென்கொரியா தெரிவித்துள்ளது.
கடந்த ஐந்தாண்டுகளாக வடகொரியா பல வகை ஏவுகணைச் சோதனைகளை மேற்கொண்டுள்ளது.
தென்கொரியாவைத் தாக்கக்கூடிய குறைவான தூரம் செல்லும் ஏவுகணைகளும் அவற்றில் அடங்கும்.
அந்த வகையில், வடகொரியா தன்னிடம் இருக்கும் ஆயுதங்களை அதிகரித்து வந்துள்ளது. இருநாடுகளும் கடற்பகுதிகளில் துப்பாச்சிச்சூட்டுச் சண்டையில் ஈடுபட்டுள்ளன.
2010 ஆம் ஆண்டில் வடகொரியா, தென்கொரியத் தீவு ஒன்றின் மீது பீரங்கித் தாக்குதல் நடத்தியது. எனினும், வடகொரியா இதுவரை தென்கொரியா மீது ஏவுகணைத் தாக்குதலை மேற்கொண்டதில்லை.