மோசமான வானிலையால் 132,110 குடும்பங்களைச் சேர்ந்த 441,590 பேர் பாதிப்பு!
நிலவும் மோசமான வானிலையால் நாடு முழுவதும் 132,110 குடும்பங்களைச் சேர்ந்த 441,590 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC) தெரிவித்துள்ளது.
வெளியிடப்பட்ட புதுப்பித்தலின் படி, இதுவரை 13 இறப்புகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன, ஒருவர் காணாமல் போயுள்ளார் மற்றும் 20 பேர் காயமடைந்துள்ளனர்.
மேலும், அனர்த்தம் காரணமாக 102 வீடுகள் முழுமையாகவும், 2,096 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.
45,329 குடும்பங்களைச் சேர்ந்த 115,319 பேர் தற்போது உறவினர்களிடம் தஞ்சம் புகுந்துள்ளதாகவும், 12,348 குடும்பங்களைச் சேர்ந்த 38,616 நபர்கள் 347 பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, மகாவலி கங்கை, ஹெடா ஓயா, தெதுரு ஓயா மற்றும் முந்தேனியாறு ஆகிய ஆறுகளுக்கு மேலும் 48 மணித்தியாலங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த ஆறுகளை அண்மித்த தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஒன்பது மாவட்டங்களில் உள்ள 70 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கையானது தொடர்ந்தும் அமுலில் உள்ளது.