இலங்கையின் புகழ்பெற்ற ‘தீகதந்து 1’ மின்சாரம் தாக்கி பலி; நாம் அறியாத தகவல்கள்!
இலங்கையின் புகழ்பெற்ற ‘தீகதந்து 1’ யானை மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதமான முறையில் பொருத்தப்பட்ட மின்சார வேலியிலிருந்து யானை மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளது.
40 – 50 வயதுக்கிடைப்பட்ட இந்த யானை, கலா வெவா மற்றும் கஹல்ல-பல்லகெல்ல காப்புக்காடுகளுக்கு அடிக்கடி வந்து செல்வதாக அறியப்படுகிறது.
நாம் அறியாத தகவல்கள்!
உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவர்ந்த ‘தீகதந்து 1’ என்ற யானை (28) அதிகாலை உயிரிழந்தது.
கலாவெவ தேசிய பூங்காவை தனது வசிப்பிடமாக கொண்டு வாழ்ந்து வந்த இந்த யானை, கெக்கிராவை ஆன்டியாகல, ஹிங்குருவெவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்கு முன்னால் உள்ள பாதுகாப்பற்ற மின்சார கம்பியில் சிக்கி உயிரிழந்துள்ளது.
சுமார் 08 அடி உயரம் கொண்ட இந்த யானையின் தந்தங்கள் சுமார் 05 அடி நீளம் கொண்டவையாகும்.
கலாவெவ சரணாலயத்தில் வாழ்ந்த யானைகள் கூட்டத்தில் உடல் அளவிலும் தோற்றத்திலும் ஒரே மாதிரியான இரண்டு யானைகள் வசித்து வந்ததால் அவை ‘தீகதந்து 1’ மற்றும் ‘தீகதந்து 2’ என்று அழைக்கப்பட்டன.
இவற்றில் ‘தீகதந்து 2’ யானை சுமார் 05 வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்தது.
‘தீகதந்து 1’ இறக்கும் போது 45 முதல் 50 வயது வரை இருக்கும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
யானை-மனித மோதல்களின் விளைவாக, 2022 இல் 433 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன, மேலும் கடந்த ஆண்டின் முதல் 5 மாதங்களில் மட்டும் 193 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன.
இந்நாட்டில் காலத்துக்குக் காலம் ஆட்சிகள் மாறினாலும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் யானை – மனித மோதலுக்கான திட்டவட்டமான தீர்வை எந்த அரசாங்கத்தாலும் வழங்க முடியவில்லை என்பதற்கு இந்த தரவுகள் வலுவான சாட்சியாகும்.