நிலவில் இருந்து கொண்டுவரப்பட்ட பாறை! ஆராய்ச்சியில் அசத்தும் சீனா!
Chang’e-6 விண்கலம் அனுப்பிய பாறைகள் சுமார் 280 கோடி ஆண்டுகள் பழமையான எரிமலை பாறைகளின் துண்டுகள் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நிலவில் இருந்து எடுத்து வரப்பட்ட 420 கோடி ஆண்டுகள் பழமையான பாறைகள் மூலம், அதன் தென் அரைக்கோளப்பகுதியில் எரிமலைகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அடுத்தடுத்து பல விண்கலன்களை அனுப்பி நிலவுடன் அண்மைக்காலமாகவே மிக நெருங்கிய தொடர்பை ஏற்படுத்தி வருகிறது சீனா. அந்த வகையில் 2019 ஆம் ஆண்டு அனுப்பப்பட்ட Chang’e-4 விண்கலம், இதுவரை எந்த விண்கலமும் செல்லாத சந்திரனின் தொலைதூர பக்கத்துக்கு சென்று ஆய்வு செய்து புகைப்படங்களை அனுப்பியது. இதற்கு அடுத்தக்கட்டமாக, பூமிக்கு அருகே உள்ள நிலவின் பக்கத்தில் இருந்து மாதிரிகளை சேகரித்து பூமிக்கு கொண்டு வரும் Chang’e-5 திட்டத்தை செயல்படுத்தியது.
அதன்படி, 1970 களில் நாசாவின் அப்பல்லோ விண்வெளி வீரர்கள் மற்றும் சோவியத் யூனியனின் விண்கலம் சென்று பாறைகளை சேகரித்த பகுதிக்கு இந்த Chang’e-5 கலம் சென்றது. அங்கிருந்து மாதிரிகளை எடுத்து பூமிக்கும் அனுப்பியது.
அதில் சேஞ்ச்சைட்-(Y) மற்றும் டைட்டானியம் கலவை Ti2O இன் இரண்டு வெவ்வேறு கட்டமைப்புகள் இருப்பது கண்டறியப்பட்டது. இதன் மூலம், அமெரிக்கா மற்றும் சோவியத் யூனியனுக்கு பிறகு நிலவிற்கு சென்று மாதிரிகளை எடுத்து வந்து புதிய கனிமங்களை கண்டுபிடித்த மூன்றாவது நாடு என்ற பெருமையை பெற்றது சீனா.