முச்சந்தி
JVPயின் ஆயுத போராட்ட தோல்வியும் NPPயின் ஆட்சிக்கான அரசியல் வெற்றியும்… நவீனன்
மார்க்சிய-லெனினிய புரட்சிகரக் குழு வழிநடத்தியதாக கருதப்படும் 1971 ஆம் ஆண்டில் இலங்கையில் நடந்த முதல் ஆயுத கிளர்ச்சியை ஜனதா விமுக்தி பேரமுனை (ஜேவிபி) நடாத்தியது.
ஜேவிபி 1960களின் இறுதியிலும் 1970களின் தொடக்கத்தில் இலங்கை அரசைக் கவிழ்த்து, அரசை கைப்பற்ற தயாராக இருந்தது. அக்கால சிறிமாவோ பண்டாரநாயக்க ஆட்சியை எதிர்த்து அமைந்திருந்த இக்குழு, ஒரு மாபெரும் ஆயுதப் போராட்டத்தைத் திட்டமிட்டது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் காவல் நிலையங்களை ஒரே நேரத்தில் தாக்குவதன் மூலம் அரசைக் கவிழ்க்க ஜேவிபி திட்டமிட்டது.
அந்தத் திட்டத்தின் போது, ஜேவிபி தமது செயல்களை ஒருங்கிணைக்கும் விதமாக இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் (CBC) மூலம் ஒலிபரப்பாக வேண்டிய ஒரு குறியீட்டு தகவலைப் பயன்படுத்த முடிவு செய்தது.
ஏப்ரல் 5, 1971 வெலவாய தாக்குதல்:
அதாவது, ஒரு மரண அறிவித்தல் அறிவிப்பின் மூலம் கட்சியினர் முடிவு செய்த தாக்குதலின் சரியான நேரத்தை ஒலிபரப்பச் செய்ய திட்டமிட்டனர்.
இந்த முஸ்லிம் மரண அறிவித்தல் நேரத்தை இஸ்லாமிய நேரப்படி திருத்தி வாசித்தவர் அக்கால பிரபல இலக்கிய வாதியான எச் எப் முகைதீன் என்று கூறப்படுகிறது.
ஆனால், குறியீட்டு செய்தியை தவறாகப் புரிந்துகொண்டதால் ஜேவிபி குழுவினர் இத்தாக்குதலுக்கான நேரத்தை பிழையாகக் கணித்தனர். அதன் விளைவாக, வெலவாய காவல் நிலையத்தை 1971 ஏப்ரல் 4ஆம் தேதி தான், திட்டமிட்ட தாக்குதலுக்கு 24 மணி நேரத்திற்கு முன்னரே தாக்கினர்.
இந்த முந்திய தாக்குதல், நாட்டின் பாதுகாப்பு துறையினர்க்கு எச்சரிக்கையை ஏற்படுத்தியது. அரசு உடனடியாக பதிலளிக்க நேர்ந்தது. இதனால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் திட்டமிடப்பட்டிருந்த கிளர்ச்சியை அடக்க அரசு பாதுகாப்பு படைகள் அவசர நடவடிக்கைகளை மேற்கொண்டன.
ஏப்ரல் 5, 1971 அன்று, வெலவாய தாக்குதலுக்கு பிறகும், ஜேவிபி தனது கிளர்ச்சியை முன்னெடுத்து நாட்டின் பல காவல் நிலையங்கள் மற்றும் அரசுப் பகுதிகள் மீது தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதல்கள் சில இடங்களில் வெற்றியடைந்தாலும், இலங்கை அரசு இந்திய போன்ற நாடுகளின் உதவியுடன் கிளர்ச்சியை விரைவில் அடக்கியது.
தோல்வியடைந்த முதல் கிளர்ச்சி:
இந்தத் தோல்வியடைந்த கிளர்ச்சி பல ஆயிரக்கணக்கான உயிரிழப்புகளுக்கு காரணமானது. ஜேவிபி தலைவர் ரோஹண விஜேவேரா உட்பட பலர் கைது செய்யப்பட்டனர்.
முதலில் 1971 பின்னர் 1989களில் இலங்கை அரசுக்கு எதிராக இரண்டு தோல்வியுற்ற, ஆனால் இரத்தக்களரி மிக்க கிளர்ச்சிகளை வழிநடத்திய ஒரு புரட்சிகர மார்க்சிஸ்ட்-லெனினிச இயக்கமாகத் தான் ஜேவிபி் தொடங்கியது. இதன் போது பல்லாயிரக்கணக்கான இலங்கை சிங்களவர்கள் கொல்லப்பட்டனர்.
தற்போதய ஜனாதிபதி அநுர ஜேவிபியின் மாணவர் பிரிவில் 1989களில் இருந்தபோது, இரண்டாவது, மிகக் கொடூரமான, எழுச்சியின் போது ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதற்கு மன்னிப்புக் கேட்டார்.
அரசியல் தலைமையும் வெற்றியும்:
2014ல் கட்சித் தலைவராக ஆனவுடன், மேலும் கட்சி இனி ஆயுதம் ஏந்தாது என்றார். அதிகாரத்தில் இருப்பவர்கள் செய்த அட்டூழியங்களுக்கு இது போன்ற மன்னிப்பு இதுவரை இருந்ததில்லை. அத்துடன் அவரே ஜேவிபி சித்தாந்தத்தை மென்மையாக்கினார்.
ஜேவிபியின் சித்தாந்த பூர்வ வர்க்கப் போராட்டத்தையும், தனியார் சொத்துரிமையை பழைய நிராகரிப்பையும் மறுத்து, பல ஆண்டுகளாக கட்சி அதன் மார்க்சிச தோற்றத்தை குறைத்து வந்தது. இந்த ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தில், அநுர திசாநாயக்க, தேசிய ஒற்றுமையை வலியுறுத்தி, சந்தைப் பொருளாதாரத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்தார்.
இலங்கை ஜனாதிபதியாக கடந்த செப்டெம்பர் 23ஆம் திகதி பதவிப் பிரமாணம் செய்து கொண்ட அனுரகுமார திஸாநாயக்கவின் அரசியல் பின்னணியானது இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் விவசாய அமைச்சராக ஒரு குறுகிய காலத்தைத் தவிர, அரசாங்கத்தில் அவருக்கு அதிக அனுபவம் இல்லை.
ஆயினும் நவம்பர் பாராளுமன்ற தேர்தலில் பெரும்பான்மை பலத்தை திரு திஸாநாயக்கவின் கட்சி பெற்றுள்ளது. முன்னைய பாராளுமன்றத்தில் 225 ஆசனங்களில் மூன்றை மட்டுமே கைப்பற்றியது. இப்போது நவம்பரில் நடைபெற்ற தேர்தல்களில் அதி பெரும்பான்மையை
பெற்றுள்ளது.
தேர்தலுக்கு முன்பாக ஒரு பலவீனமான அரசியல் கூட்டணியுடன் தான் ஆட்சியை அமைப்பார் என எதிர்பார்க்கப்பட்டதை முறியடித்து, வடக்கில் தமிழர் பிரதேசங்களிலும் கணிசமான பலத்தை பெற்றுள்ளார்.
தமிழர் பிரச்சனை தீர்வு :
இலங்கையின் ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க பதவியேற்று மக்களுக்கு ஆற்றிய தனது முதலாவது உரையில் தமிழ் மக்களின் பிரச்சனை குறித்து ஒரு வார்த்தையைக் கூட அவர் குறிப்பிடவில்லை. அவரது நிலைப்பாடு இவ்வாறு தான் இருக்கும் என்று தமிழ் மக்களுக்கு நன்கு தெரியும்.
தமிழர் தாயகத்திலும், பாராளமன்ற தேர்தலிலும் அறுதிப் பெரும்பான்மை NPPக்கு கிடைத்த வெற்றியின் பின்னரும் அநுர அரசின் இனப்பிரச்சனை பற்றிய எதுவித கருத்துக்களும் தெளிவு பெறவில்லை என்பதே உண்மையாகும்.
தமிழர்களின் ஆகக் குறைந்த அரசியல் அபிலாசையான வடக்கு கிழக்கு இணைப்பைக் கூட அனுமதிக்க முடியாதென அதனை நீதிமன்றில் வழக்கிட்டு பிரித்தவர்களே இன்றைய ஆட்சியாளர்களான முன்னாள் ஜேவிபியினர்.
அத்துடன் போர்க்காலங்களில் தமிழர்களுக்கு எதிரான இனவழிப்பு யுத்தத்திற்கு சிங்கள கிராமங்களில் முன்னின்று ஆட்சேர்ப்பு செய்தவர்களும் இவர்களேயாவர்.
தமிழர்களுக்கு 13ஆம் திருத்தச் சட்டம் தேவையில்லை என அறிவித்தது மாத்திரமின்றி, மாகாணங்களுக்கு பொலிஸ், காணி அதிகாரங்களை வழங்க மாட்டோம் என சிங்கள பிக்குகளுக்கு உறுதி வழங்கியவர்களும் இவர்களே.
சர்வதேச போர்க் குற்ற விசாரணை ?
இறுதிப்போரின் சர்வதேச போர்க் குற்ற விசாரணையை ஏற்க முடியாதென கூறியதுடன், எந்த ஒரு இராணுவ வீரனையும் போர்க்குற்றவாளியாக விடமாட்டோம் என அறிவித்தனர்.
அதேவேளை உள்நாட்டு விசாரணை நடாத்தி இனப்படுகொலையில் சிறந்த பங்காற்றியவர்களுக்கு பதவி உயர்வுகளும் விருதுகளும் வழங்கி உள்ளார்கள்.
கடந்த செப்டம்பரில் ஜனாதிபதி தேர்தல் முடிந்து இதுவரையில் ஒரு அரசியல் கைதியை தானும் விடுதலை செய்யப்படவில்லை. தற்போது பாராளமன்ற தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையும் பெற்றுள்ளனர்.