யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் திடீரென நுழைந்த வெள்ளம்; ஊழியர்கள் காட்டிய அதிரடி
நாட்டில் தொடரும் அனர்த்தத்தால் பொதுமக்கள் பாரிய இன்னல்களை எதிர்கொண்டுள்ளனர். அந்த வகையில் யாழ்ப்பாணத்தில் விடாது பெய்யும் மழையால் பொதுமக்கள் அன்றாட செயற்பாடுகளை மேற்கொள்வதில் பாரிய சவால்களை எதிர்கொண்டுள்ளனர்.
குறிப்பாக சுகாதாரத்துறையினர் தமது சேவைகளை தொடர்ச்சியாக வழங்கிவருகின்றமை பாராட்டக்கூடியதாக உள்ளது.
அந்தவகையில் யாழ். போதனாவைத்தியசாலையில் அனர்த்த கால சேவையை மேற்கொள்ளும் வைத்தியசாலை ஊழியர்களின் நிலை மிகவும் கடினமாக இருந்தமையை நேற்று அவதானிக்கமுடிந்தது
வைத்தியசாலைக்குள் வெள்ளம் புகுந்த நிலையிலும் பொதுமக்களுக்கான சேவையை உடனடியாக வழங்குவதற்கு பல்வேறு முயற்சிகளை ஒவ்வொரு ஊழியர்களும் கடினமாக முன்னெடுத்திருந்தமையை அவதானிக்க முடிந்தது.
இதேவேளை வைத்தியசாலைப்பணிப்பாளர் வைத்தியகலாநிதி சத்தியமூர்த்து ஒரு அறிவிப்பினை வெளியிட்டிருந்தார்,
அதாவது வெள்ளப்பெருக்கம் காரணமாக வைத்தியசாலையின் சில விடுதி பகுதிகளில் நீர் புகுந்துள்ளது.
மேலும், பல ஊழியர்களின் வீடுகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால், அவர்கள் வேலைக்கு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து மழை பெய்து கொண்டிருப்பதால், சாதாரண வைத்திய சேவைகளை வழங்குவதில் சிக்கல்கள் இருக்கக்கூடும்.
எனவே, பொதுமக்கள் கிளினிக் போன்ற சாதாரண சிகிச்சைகளுக்காக வருகை தராமல், வெள்ளப்பெருக்கு குறைந்த பிறகு அவற்றுக்கான மருந்துகளை பெற்றுக் கொள்ளலாம் என்பதையும், அத்தியாவசிய சிகிச்சைகளுக்காக மட்டுமே வருகை தருமாறும் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.