`யாழினி` நூல் வெளியீடு; ஒரு கண்ணோட்டம்…
திருமதி தேவகி கருணாகரன் அவர்களின் `யாழினி` நூல் வெளியீடு – ஒரு கண்ணோட்டம்
சிட்னியில் இருந்து திருமதி திலகா பிரபாகரன்
திருமதி தேவகி கருணாகரன் அம்மாவின் `யாழினி` உட்பட மேலும் சில சிறுகதைகள் அடங்கிய நூல் வெளியீடு கடந்த நவம்பர் மாதம் 2 ஆந் திகதி சனிக்கிழமை மாலை, அவுஸ்திரேலியாவின் சிட்னி மாநிலத்தின் ஸ்றத்பீல்ட் நகரத்தில் அமைந்துள்ள கரிங்ரன் மண்டபத்திலே நடைபெற்றது. இந்தியாவின் ஸீரோ டிகிறி பதிப்பகத்தின் 2023 ஆம் ஆண்டுக்கான முதற் பரிசை `யாழினி` குறுநாவல் பெற்றுக் கொண்டது என்பது குறிப்பிடத் தக்கது.
திருமதி கருணாகரனின் அன்பான அழைப்பையேற்று நானும் அந்த நிகழ்வில் கலந்து கொண்டேன். மண்டப வாசலிலே ஏற்றப்பட்டு இருந்த குத்துவிளக்கு நிறைகுடம், எம் தமிழரின் பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் பறைசாற்றிக் கொண்டு இருந்தது. அங்கு வருகை தந்த அன்பர்களை திருமதி கருணகரன், தனது குடும்பத்தாரோடு சேர்ந்து வரவேற்றார்.
சரியாக மாலை 5 மணிக்கு ஆரம்பித்த இந்த விழாவினை தலைமை தாங்கி நடாத்துவதற்காக சிட்னியில் புகழ்பூத்த வைத்திய கலாநிதி பொன் கேதீஸ்வரன் அவர்கள் மேடைக்கு அழைக்கப்பட்டார். விழாவின் ஆரம்ப நிகழ்வாக அவுஸ்திரேலிய ஆதிக் குடிமக்களான அப்பொற்ஜினல் Aboriginal இனத்தவருக்கான மரியாதை வழங்கப்பட்டது. தொடர்ந்து பேராசிரியர் ஆ.சி கந்தராஜா, திருமதி சத்தியா கந்தராஜா, வைத்திய கலாநிதி சாந்தினி தவசீலன் ,திருமதி சரோ சுந்தரலிங்கம், மற்றும் பல் வைத்திய கலாநிதி சிவரதி கேதீஸ்வரன் ஆகியோர் மங்கல விளக்கேற்றி விழாவினை ஆரம்பித்து வைத்தனர். அடுத்தபடியாக தொடர்ந்து வர்ஷ்னி கேஷ்னி கேதீஸ்வரன் சகோதரிகள் தமிழ்த்தாய் வாழ்த்தை இசைத்தார்கள்.
விழாத் தலைவர் தனது வரவேற்புரையில், தன்னைத் தலைமை தாங்குவதற்காக அழைத்தமைக்கு நன்றி கூறி தனக்கும் நூலாசிரியருக்குமான அறிமுகத்தைக் கூறினார். இவரது சிறு கதைகள் ஆரம்ப காலங்களிலே அவுஸ்திரேலியாவில் இருந்து வெளிவந்த கலப்பை சஞ்சிகையில் வெளிவந்ததாகவும், பின்பு இலங்கையின் ஞானம் சஞ்சிகையிலும், வீரகேசரி, தினக்குரல், வாரப் பத்திரிகையிலும், இந்தியாவின் கல்கி, கணையாழி, கலைமகள்,குமுதம் மற்றும் செம்மலர் சஞ்சிகைகளிலும் பிரசுரமாகி பரிசுகளும் பெற்றுள்ளன என்றும் கூறினார். மேலும் `யாழினி` திருமதி கருணாகரனின் மூன்றாவது நூல் வெளியீடு என்றும் குறிப்பிட்டார்.
புத்தகத்தை வெளியிட்டு வைத்துப் பேசிய வைத்திய கலாநிதி கதிர் நடனச்சந்திரன் அவர்கள், திருமதி கருணாகரனின் எழுத்துப் பயணம் மென்மேலும் தொடர வேண்டும் என வாழ்த்தினார். நூலின் முதலாவது சிறப்பு பிரதியை வைத்திய கலாநிதி சிதம்பரம்பிள்ளை தவசீலனிடம் நூல் ஆசிரியர் கையளித்தார்.
தொடர்ந்து பிரபல நடன ஆசிரியரும், அவுஸ்திரேலியக் கம்பன் கழகத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான சான்றோர் விருதினைப் பெற்றவரும், ஒலிபரப்பாளருமான கலாநிதி கார்த்திகா கணேசர் அவர்கள் புத்தக ஆய்வினை நடாத்தினார். கார்த்திகா, ஆசிரியரின் கதைக்கருக்கள் மிகவும் அழகானவை என்றும், போர்க்காலச் சூழல், இதனால் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணின் வாழ்க்கை குறித்த இடங்களைத் தொட்டுச் செல்லும் கதைகள் தன்னை யாழ்ப்பாணத்திற்கே அழைத்துச் சென்று விட்டன என்றார். இந்த வேளையில், கார்த்திகா அவர்கள் திருமதி புவனேஸ் பொன்மயிலைநாதன் அவர்களை மேடைக்கு அழைத்து, ஆசிரியருக்குப் பொன்னாடை போர்த்தி கெளரவிக்குமாறு வேண்டிக் கொண்டார்.
அடுத்ததாக உயர்தர வகுப்புப் பரீட்சையில் தமிழ் மொழியை ஒரு பாடமாக எடுத்துச் சிறப்புச் சித்தி பெற்றவரும், தற்போது பல்கலைக்கழகத்திலே சட்டக்கல்வியைப் பயின்று கொண்டிருக்கும் இளைஞருமான அகலவன் சிறிஸ்கந்தராஜா இனிய தமிழிலே நூல் ஆய்வினை நடாத்தி, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினர் என்றால் மிகையாகாது. அகலவன், ஆசிரியரின் கதைக்கருக்கள் இரண்டு தலைமுறைக் காதல், பிரிவு, விவாகரத்து, நவீனகால இளைஞர்களின் வாழ்க்கை முறைமை, மறுமணம், துல்லியமாக எடுத்துக் காட்டுவதாகவும், மாற்றுத்திறனாளிகளை எமது சமுகம் எவ்வாறு பார்க்கிறது என்பதை ஆழமாகக் கூறுவதாகவும் குறிப்பிட்டார்.
ஆசிரியரின் பேரன் ஷனிக் லொக்குகே, கிறிஸ் ஓ` பிறையன் கான்சர் நிலையம் பற்றி எடுத்துக்கூறி நூல் வெளியீட்டினால் பெறப்படும் நிதி இந்தப் புற்று நோய் நிலையத்திற்கு ஆசிரியரினால் அன்பளிப்பாக வழங்கப்படும் என்று கூறினார்.
இதனைத் தொடர்ந்து சிறப்புப்பிரதி வழங்கும் நிகழ்வு இடம் பெற்றது. ஏற்புரை வழங்கிய திருமதி கருணாகரன், விழாவிற்கு வருகை தந்தவர்களுக்கும், விழாவினை சிறப்பாக நடாத்த உறுதுணையாக நின்றவர்களுக்கும், குறிப்பாக தனது கணவர் வைத்திய கலாநிதி வி. எஸ் கருணாகரன் அவர்களுக்கும், தனது குடும்பத்தாருக்கும் நன்றி கூறினார். மற்றும் மேடையமைப்பு, ஒலிபெருக்கி புகைப்படம் விடியோ போன்றவற்றை ஒருங்கிணைத்த அனைவருக்கும் நன்றி கூறினார்.
இடைவேளையின் போது புத்தக விற்பனை இடம் பெற்றதோடு சுவயான சிற்றுண்டி, பானங்கள் பரிமாறப்பட்டன. இடைவேளையினைத் தொடர்ந்து வர்ஷ்னி கேதீஸ்வரனின் தொகுப்பில், ஆசிரியரினால் எழுதி நெறியாக்கப்பட்ட `சிட்னியில் செல்லாச்சி` என்ற ஓரங்க நகைச்சுவை நாடகம் மேடையேற்றப்பட்டது. இந்த நாடகம் செல்லாச்சி மற்றும் அவரது நண்பி சூடாமணி சந்தித்து சிட்னி நடப்புப் பற்றி அலசுவதாக அமைந்து சபையோரை சிரிக்கவைத்து மகிழ்வித்தது.
நிகழ்வின் இறுதி அங்கமாக ஆசிரியரின் பேத்தி அலிஷா கருணாகரன் தானே எழுதி இசையமைத்த ஆங்கிலப் பொப் இசைப்பாடல்களை வழங்கினார்.
தொடர்ந்து, அபிநயன், மேகலா ஆகியோர் இனிய தமிழ் சினிமா பாடல்களை பாடி வந்திருந்தவர்களை மகிழ்வித்தனர்.
இந்த நிகழ்வினை முழுவதுமாக ரசித்து மகிழ்ந்தவள் என்ற வகையில் திருமதி கருணாகரன் முயற்சிகளைக் கண்டு பிரமித்துப் போனேன் என்று தான் கூற வேண்டும்.
புலம் பெயர்ந்த நாடொன்றில் தன் கணவர், பிள்ளைகள், பேரப் பிள்ளைகளோடு வாழ்ந்து கொண்டு, நல்ல நல்ல கருக்களை தேர்ந்தெடுத்து இத்தனை கதைகளையும் எழுதி, அழகிய நூலாக அச்சிட்டு நம்முன் படைத்திருக்கின்றார் என்றால், அவரை பாராட்டாமல் இருக்க முடியாது. இது அவ்வளவான இலகுவான காரியமும் அல்ல. அது மட்டுமல்லாது, தனது இந்த முயற்சியால் கிடைக்கக்கூடிய நிதியை நல்ல ஒரு சேவைக்கு மனமுவந்து வழங்குகிறார் என்பதில் நாமும் அவரோடு இணைந்து மகிழ்வு கொள்வோம்.
திருமதி தேவகி கருணாகரனின் இந்த அர்ப்பணிப்பான பயணம் இன்னும் தொடர வேண்டும் என்று வாழ்த்துவோம்.
நன்றி
சிட்னியில் இருந்து திருமதி திலகா பிரபாகரன், நவமபர் 2024