கதைகள்

மண்ணும் மாடசாமியும்… சிறுகதை – 94… அண்டனூர் சுரா

மாடசாமிக்கு வண்டியைப் பூட்டுவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை. துண்டை உதறி தோளில் போட்டுக்கொண்டு கொட்டகைக்குள் நுழைந்தார். அவரைக் கண்டதும் அச்சில் கட்டியிருந்த காளைகள் இரண்டும் தத்தி, முழங்கால்கள் ஊன்றி எழுந்து நின்றன. மாடசாமி காளைகளைப் பார்த்தார். காளைகளின் தினவான தோல் தெரிவதற்குப் பதிலாக எலும்புகள் தெரிந்தன.

காளைகளின் முதுகில், தொடையில் ஈரப்புண்கள் இருந்தன. அதில் மொய்த்த ஈக்களை வாலால் விரட்டி தலையால் சிலுப்பின. காளையின் கொம்புக் கயிற்றில் கட்டியிருந்த மணிகள் ‘கிளிங்க், கிளாங்க்’ என்று சத்தம் கொடுத்தன.

காளைகளை அவிழ்த்து வண்டியில் பூட்ட அவரது மனம் இடம்கொடுக்கவில்லை. காளைகள் காட்டிநின்ற எலும்புகளைப் பார்க்கையில் யாருக்குத்தான் இந்தக் காளைகளிடம் வேலை வாங்கத் தோன்றும்? மனது நினைக்கலாம், காளைகள் பாவமென்று. வாங்கிய கடனும் கடன் ஈன்றக் குட்டிகளும் நினைக்குமா மனிதன் பாவமென்று?. காளைகள் இரண்டையும் அவிழ்த்து கயிற்றைத் தோளின்மீது வீசினார். காளைகள்மீது கயிறுகள் ஒன்றுபோல விழுந்திருந்தன. இரண்டு காளைகளும் பொண்ணு நடை நடந்து தொட்டடிக்குச் சென்றன தொட்டியிலென்ன எள் புண்ணாக்கும் பருத்திக்கொட்டையுமா இருந்துவிடப்போகிறது. நாறிப்போன புளிச்சம் தண்ணீயும் அடியில் ஒன்றிரண்டு பருக்கைகளும்தானே இருக்கப்போகிறது.

இதற்காக தான் தொட்டியை நோக்கி ஓட வேண்டும் என்று நினைத்த காளைகள் மெதுவாக நடந்து தொட்டிக்குள் தலையை விட்டு மூச்சை அடக்கி நாக்கல் துழாவிப் பார்த்தது. ஒன்றும் நாக்கில் தென்படவில்லை. ஏமாற்றத்துடன் தலையை வெளியே இழுத்து நீர்த்திரையில் வாய் வைத்து நீரை உறிந்து வயிறு முட்டக் குடித்தது.

மாடசாமி இன்னும் சற்று தாமதித்து வண்டியைத் திருப்பியிருக்கலாம். காளைகள் இன்னும்கொஞ்சம் வயிற்றைத் தண்ணீரால் நிரப்பியிருக்கும். ஆரக்கால்கள் கொண்ட கட்டை வண்டி அது. வண்டியின் மூக்கணாங்கட்டையைப் பிடித்துத் தூக்கும்பொழுதே ஊரைக் கூப்பாடு போடும். மூக்கணாங்கட்டையைத் தூக்கும்பொழுதே காளைகள் இரண்டும் நாக்கால் நாடித் துவாரங்களை துடைத்துக்கொண்டு தலையை உள்வாக்கில் கொடுத்து பிடறி குறுத்தெலும்பில் நுகத்தடியை வாங்கிக்கொண்டது. பூட்டாங்கயிற்றால் கழுத்தைப் பூட்டி, பின்பக்கமாக வந்து இடது பக்க காளையைச் சற்றே விலக்கி, “எங்கேப்பிடி“ என்றவராய் தாவியேறி ஏர்க்காலில் அமர்ந்தார். காளைகள் இரண்டும் நாலுகால் பாய்ச்சலில் ஓட்டமெடுத்தன. வண்டி முன்னோக்கி ஓடுகையில் மாடசாமியின் நினைவுகள் மகனுடனான பந்தத்தில் பின்னோக்கி ஓடின.
மகன் வாங்கிய கடன் அது. கடனை அடைக்க மகனிடம் வழி கேட்கையில் காளைகள் இரண்டையும் விற்றுவிடலாம் என்றான். நெஞ்சுக் கொதித்துப் போனார் மாடசாமி.
” என்னடா சொல்றே, காளைக ரெண்டையும் விக்கணுமா?”

” கெழட்டுக் காளைகள்தானே, வித்திட்டு கடனக் கட்டுனா பணம் வருகிறப்ப வேற சோடி காளைகள் வாங்கிக்கிறது.”

மாடசாமிக்கு நெஞ்சு புடைப்பெடுத்தது. கோபம் தலைக்கு ஏறுகையில் அவருக்குப் பேச்சு வராது. எச்சிலை விழுங்கியவராய் அமைதியில் ஆழ்ந்து குந்திப்போனார்.

வண்டியின் சக்கரங்கள் ஓட்டத்திலிருந்து மாறி மெதுவாக உருண்டுக்கொண்டிருந்தன. இரண்டு காளைகளின்மீதும் கைகளை வைத்து மெதுவாக தடவிக்கொடுத்தார்.

“இந்த காளைகளுக்கு என்னவாம். எலும்பு புடைச்சா கிழடாகிடுமாக்கும். கிழடானாத்தான் என்ன? அதை வித்துப்புடணுமாக்கும்? இந்தக் கட்டை இருக்கும் வரைக்கும் அது நடக்காது. காளைக ரெண்டும் கட்டுத்தறியில செத்தாலும் சாகுமே தவிர வித்துத் தின்னிட மாட்டேன்,…” அவருக்குள் பேசிக்கொண்டார்.

வண்டிப் போகும் வேகத்தில் சுக்காங்கற்கள் சக்கரத்தில் அறைப்பட்டு தெறித்தன.
“ட்ரேய் …ட்ரேய்…. மெதுவா போடா”

காளைகளின் கயிற்றை இழுத்துப்பிடித்து வண்டியை மெதுவாக ஓட்டினார். வண்டி சுக்காம் தரையிலிருந்து இறங்கி வண்டித்தடத்தில் ஓடத்தொடங்கியது.

மாடசாமியின் நினைவுகள் மீண்டும் கடந்த காலத்திற்குத் தாவியது. ஒருநாள் ஞாயிறு சந்தையன்று காளைகள் இரண்டையும் அவிழ்த்தான்.

“என்னடா, என்னைக்குமில்லாம காளைய அவுக்குற?” மகனிடம் கேட்டார் மாடசாமி.
“சந்தைக்கு ஓடப்போறேன். கடன்காரனுக்கிட்ட தலைக்காட்ட முடியல.”
மாடசாமிக்கு கோபம் உச்சிக்கு ஏறியது. “அதுக்கு ஒழைச்சி கடன அடைக்கணும். அதைவிட்டுட்டு இப்படிக் காளைகள விக்கணுமுனா எப்படி?”
“பின்னே மாட்ட விக்காம உன்னயா விக்க முடியும்?“
மாடசாமி நாசிக்கு ஏறிய கோபத்தை மெல்ல தொண்டைக்குள் இறக்கிக்கொண்டார்.
“வார்த்தய அளந்து பேசு. என்னெய விக்க முடிஞ்சா விய்யி. ஆனா இந்தக் குடி வாழ ஒழைச்சிப்போட்ட மாட்ட விக்க விடமாட்டேன். பஞ்சத்துக்கு கோழிய விக்கலாம். பஞ்சாரத்த விக்கக்கூடாதுடா.“ இதைச் சொல்லுகையில் மாடசாமியின் மீசை துடித்தது. மகன் நெஞ்சை முறுக்கிக்கொண்டு நின்றான்.

“விடிஞ்சா, இருட்டினா பைனான்ஸ்காரன் கண்ணுல வெரலைவிட்டு ஆட்டுறானே, என்ன செய்றதாம்?”

“நின்னான்ன? தாரேனு சொல்லு. ரெண்டு நாளைக்கு ஜால்சாப்பு காட்டு. அதைவிட்டு ஒழைச்ச காளைய விக்கிறேனு சொன்னா எப்படி?”

மகன் மெல்ல அம்சடங்கி வந்தான். மாடசாமியால்தான் அம்சடங்க முடியவில்லை. “யார் வீட்லதான் கடன் இல்ல. நாளும் கிழமையும் வார வட்டிக்காரன் முகத்திலதான் விடியுது. அவன்க தர்மத்தையே ஒழித்து விடுவதைப்போல கிளம்பிட்டானுங்க. கடன் கொடுக்குறவன்க வயித்தப் பார்த்தா கடன் கொடுக்குறான். தாலியப் பார்த்திலே கடன் கொடுக்குறான். அதுக்காக கடன அடைக்க தாலிய வித்திர முடியுமா?

நான் கூடதான் வைத்திய செலவுக்கு ஒருத்தருக்கிட்டே ரெண்டாயிரம் ரூபா கைநீட்டி வாங்கினேன். வாங்கி வருசம் திரும்பிருச்சி. ஆயிரம் ரூவா கட்டிட்டேன். ஆயிரம் ரூபா வட்டியோட கட்டப்படுவேனாங்குது. ஒரு நாளு குடிசை வாசற்படியில பாய இழுத்துவிட்டு ஒளிஞ்சேன். இன்னொரு நாளு நேரம் பார்த்து தலைய உள்ளே இழுத்துக்கிட்டேன். அவனும் மனிசன்தானே? எத்தனை நாளைக்குத்தான் விட்டுப்பிடிப்பான். ஒரு நாள் நாக்குப் பிடுங்க நாலு கேள்வி கேட்டான். அதுக்காக என்ன செய்றதாம்? மலக்குடல் நாறுதேனு அறுத்து எறிஞ்சிற முடியுமா? கட்டிருறேன சாமி, கட்டிருறேனு பதமா சொல்லி அனுப்பி வச்சேன்.

கடன்கொடுத்தவன் எதிரே வந்தா கடன் பட்டவன் ஊமைனு தெரியாமலா பாடுனாங்க. குபேரனேயானாலும் கடன் கொடுத்தவனுக்கிட்டே குலைஞ்சுதான் நிக்கணும்…”
“தம்பி ரெண்டு வாரம் விட்டுப்பிடிங்க. சத்தம் போட்டு ஊரைக் கூட்டிடாதீங்க“
“வாங்கிய கடனக் கேட்டா கவுரவ குறைச்சலா வேறு நெனைக்குறீங்களோ. உன்னால முடியலனா உன் மவனக் காட்டிவிடுயா. அவனுக்கிட்ட வாங்கிக்கிறேன்“
“மவன் எங்கூட சண்டை போட்டுட்டு கோபிச்சிக்கிட்டு வீட்ட விட்டுப்போயிட்டான்க”
“ மக இருப்பாளே, எங்கே?”

இதை அவன் நாக்கைச் சுழற்றிவிட்டு கேட்கையில் அவனை கண்டம் துண்டமாக வெட்டிக் கூறுபோட வேணும் போலிருந்தது. நல்லவேளை மாடசாமிக்கு மகள் இல்லை. கடன்கொடுத்தவன் போன வாரம் திரும்பவும் வந்தான். அதே மிரட்டல், அதே கேள்விமேல் கேள்விகள்.

“மகன் மேல சத்தியமா சொல்றேன். பத்து நாளையில உங்கக் கடன அடைச்சிடுறேன்.”
பைனாஸ்காரன் முகத்தில் அறைவதைப் போல நின்று, ஒரு பார்வை பார்த்துவிட்டு சென்றான்.
“எனக்குமட்டும் கடன் இல்லையாக்கும். அதுக்காக நான் காளையவா வித்தேன். வத்தலும் தொத்தலுமான இந்த காளைக எவ்வளவுக்கு போகுமாம்…”

வண்டி வயற்மேட்டில் வந்து நின்றது. காளைகளை அவிழ்த்து இரை பொறுக்கவிட்டார். வண்டியில் கூடையும் மண்வெட்டியும் இருந்தன. எடுத்து உள்ளங்கைகளில் எச்சில் துப்பிக்கொண்டு, எண்ணி அறுபது கொட்டு. கட்டைவண்டி களிமண்ணால் நிரம்பிவிட்டிருந்தது. அடுத்த பத்து நிமிடத்தில் காளைகள் இரண்டும் நாக்குத்தள்ளி வீட்டில் வந்து பெருமூச்சு விட்டன.

காளைகளை அவிழித்துவிட்டு முகத்தடியின் மூக்கை உள்ளங்கையில் தாங்கித் தூக்கி, “எங்கேக்கொட்டு“ என்றவாறு உந்திக் கொடுத்தார். மனிசங்க எரு போல களி ‘லபக்’கென்று பூமியில் கொட்டியது.

கையால் அள்ளி பிசைந்து பார்த்தார் மாடசாமி. அமாவாசை இரவு மஞ்சள் தேய்த்து குளித்தக் கணக்காய் களி கருப்பும் மஞ்சளும் கலந்த நிறத்திலிருந்தது. களிமண். உள்ளங்கையால அள்ளி ஊறவைத்த உளுந்தைப் பிசைவதைப் போல பிசைந்தார். மண் ஒரு வயது பெண்ணாட்டம் வளைந்தும் நெளிந்தும் கொடுத்தது.

வண்டல் மண்ணின் சேரிக்குடித்தனம்தான் இந்தக் களிமண்ணு. அவனவன் ஆத்து மணல வண்டி வணடியா ஏத்துறான்வ. மண் கொட்டுல ஒரு கொட்டு களி மண்ணு வந்திருச்சினா, மண்வெட்டிய தலைகுப்புற தட்டிவிட்டு அடுத்த எடத்த சொரண்டுறான்க. ஒன்னுமில்லாத ஆத்துமணல வண்டி ஐயாயிரத்துக்கு ஏத்துறான்க. எல்லாம் உள்ள களி மண்ண ஏளனமா பாக்குறான்க. அரிசிய ரோட்ல விக்கிறான்க . செருப்ப ஏசி ரூம்குள்ள விக்கிறான்க….” வாய்க்கு வந்ததையெல்லாம் பேசியவராய் களிமண்ணை இரண்டு முட்டாக வைத்தார். அவருக்குப் பெருமூச்சு முட்டியது. உடம்பிலிருந்த மொத்த வியர்வையும் வழுக்கிக்கொண்டு மண் முட்டில் விழுந்து தெறித்தது.

“களி மண்ணு ஒன்னும் மணல் ஜாதி இல்ல. விழுந்த வியர்வையை ‘லபக்’கென்று கொடங்கைக்குள்ள மறைத்துக்கொள்ள. தாமரை இலையில வீழ்ந்த தண்ணீர் கணக்காய் வியர்வைத் துளிகள அப்படியே இருந்தன. மண்ணின் தன்மையைப் பார்த்து மெய்ச்சிலித்தார் மாடசாமி.

களியை இரண்டு முட்டாக வைத்து, மையத்தைக் குடைந்து, குழியில் தண்ணீரை ஊற்றி மிதித்து குழைத்தார். கல் நெஞ்சுக்காரியாட்டம் அந்த மண்ணு மசிந்து கொடுப்பேனா, என்றது. களியைக் கால்களால் வாறியள்ளி மிதித்தார். பாதியிலேயே அவரை விட்டுட்டுப் போன மனைவியை நினைத்து மிதித்தார். விளையாத ஒரு மா நிலத்தை மட்டும் விட்டுவிட்டு மீதத்தைக் குத்தகைக்கு விட்டு நகரத்தில் பெட்டிக்கடையோடு கடனையும் நடத்திக்கொண்டிருக்கும் மகனை நினைத்து மிதித்தார் .

இரண்டுக் குடம் தண்ணீரை விரல்களுக்கிடையில் இறைத்தார். காலோடு ஒட்டியிருந்த களியைக் கட்டை விரலால் வழித்து குழியில்போட்டு வட்டிக்காரர் பொருமித்தீர்த்த வசவுச் சொற்களை நினைத்து மிதித்தார். அதுவரைக்கும் மசிவேனா என்று அடம் பிடித்த களி எண்ணெயில் விழுந்து தெறிக்கும் கடுகாட்டம் பாதச் சந்து, விரல் சந்து வழியே பிதுங்கி காற்றுக் குமிழியாக வெடித்தது.

இரண்டு கால்களால் விலகிப்போன களியை ஒன்னுச்சேர்த்து புரோட்டாக் கடையில் மாவு பிசைவதைப் போல கால்களால் பிசைந்தார். சொல்கிற வேலையைக் கேட்கிறேனென்று வாய்ப்பொத்தி கிடந்தது களி.

மரத்தடி கீழே விட்டேத்தியாக உட்கார்ந்தார் மாடசாமி. “வயசுப்பொண்ணையும் களி மண்ணையும் முறையாக கையாளணும். இல்ல, மனம் நோக வேண்டி வரும்…” என்று சொல்லிக்கொண்டே சக்கரத்தைச் சுற்றினார். இரண்டுக்கொட்டு மண்ணைச் சக்கரத்தில் வைத்து பலம் கொண்ட மட்டும் சுற்றினார். புற்றுக்குளிலிருந்து நாகம் வரும் கணக்காக களி வேளியே நாக்குத் தள்ளியது. வாய்க்குள் கையை விட்டுக் குடைந்தார். மங்கு, சால்,..என்று பல உருவமெடுத்த களி பானை உருவம் எடுத்தப்பொழுது சக்கரத்தின் வேகத்தைக் குறைந்தார்.

பெரியதும் சிறியதுமாக முப்பது பானைகள். பிள்ளை பெற்ற மனுசியாட்டம் பானையில் அப்படியொரு பிரகாசம். வெயிலில் காயவைத்து கால்வாயில் அடுக்கி, நெருப்பு மூட்டி சுட்டார்.
அக்ரஹாரத்துப் பெண்களைப் போல அப்படியொரு சிவப்பு. சுட்ட கருவாட்டைப் போல ஒவ்வொன்றாக எடுத்து கவிழ்த்தார். கறி, மீன், கவிச்சி என்று ஒரு வாரம் புழங்காமல் சுட்டுக் கவிழ்த்த பானைகள் உடைந்துவிடக் கூடாதென்று பயம் பத்திரமாக கையாண்டார். முப்பது பானைகளுக்கும் கணக்குப் போட்டார். ஒன்று முப்பது ரூபாய்னா முப்பதுக்கும் தொள்ளாயிரம் ரூபா. கூட குறைத்து விற்றால் எப்படியும் ஆயிரம் ரூபாய் தேற்றிவிடலாம். அவரது மனப்பெட்டி நிறைந்தது.

மட்பாண்டங்களை வண்டியில் ஏற்றி உள்ளூர் சந்தையில இறக்கினார். அத்தனையையும் வரிசையாக ஒன்றின்மேல் ஒன்றாக கவிழ்த்தார். ரோஜா இதழ்கள் போல பானைகள் அடுக்கியிருந்தன. பானைகளைச் சுற்றி ஈக்களைப் போல பெண்கள் வட்டம் கட்டினார்கள். பானைகளை எடுத்தும் உற்றுப் பார்த்தும் தட்டியும் பார்த்தார்கள்.

“ பானை என்ன விலை? “
“முப்பது ரூபாதான் ஆத்தா“.
“ ஆமா சொல்வீங்க, சோடி அம்பது ரூபாய்க்கு தாரீங்களா?”
“ ஒரே விலை தான்”

பானைகள் அடுக்கியது அடுக்கியபடி அப்படியே இருந்தன. உச்சி வெயில் உடம்பிலுள்ள நீரை உறிந்தெடுத்தது. ஆசைக்கு பத்துப்பானைகளை முழுசாக விற்க முடியவில்லையே என்று மனசு கிடந்து அடித்துக்கொண்டது. வார வட்டிக்காரனுக்குக் கொடுத்த சத்திய வாக்குறுதி ஒரு புறம். மகன் கடன் என்கிற பெயரால் அல்லாடும் இன்னல்கள் ஒரு புறம்,…நினைவுகள் அவரைப் பலவாறு மொய்த்தன.

விற்பனைக்காக முப்பது ரூபாய் செலவு செய்ய நினைத்தார். அதையும் பாக்கெட்டிலிருந்து எடுக்காமல் ஒரு பானையாக எடுத்தார். ஒரு குடம் தண்ணீர்க் கொண்டுவந்து சந்தையில் மக்கள் கூடுமிடத்தில் வைத்தார்.

சந்தையில் கூடிய பெண்களின் தாகத்தை இவர் வைத்தக் குடம் தணித்தது. சந்தைக்கு வந்த பெண்கள் இவர் விரித்த மட்பாண்ட கடையின் பக்கமாகத் திரும்பினார்கள். தன்னைத் தேடி வந்த பெண்களுக்கு அவர்களை வரவேற்கும்பொருட்டாக ஒரு தம்ளர் தண்ணீர் முகர்ந்து கொடுத்தார். கொஞ்ச நேரத்திற்குள் மொத்தப் பானையும் விற்றுவிட்டிருந்தது.

“பானை ஒன்னு கொடுங்கண்ணே. கரண்ட நம்பி இனி கதையாகாது. என் பையன் பிரிட்ஜ் தண்ணிதான் விரும்பிக் குடிக்கிறான்”
“ இல்லையே ஆத்தா. எல்லாப் பானைகளும் வித்திருச்சே”
“ இது பானையில்லாம வேறு என்னவாம்?” தண்ணீரிருந்த குடத்தைத் தூக்கினாள், சந்தைக்கு வந்தவள்.

“ இது புழங்கிய பானையாச்சே. தண்ணி வச்சி குடிச்சது.”
” நான் எதுக்கு கேட்கிறனாக்கும். புழங்கியிருந்தாலும் பரவாயில்ல. கொடுங்க, வாங்கிக்கிறே….” அப்பானையை எடுத்து முன்னே, பின்னே பார்த்தாள்.

புழங்கியப் பானைய கொடுக்க மாடசாமியின் மனம் இடம் கொடுக்கவில்லை.
“ அட காசு வேணுமுனா சேர்த்து வாங்கிக்கய்யா. மணியாச்சு, நான் கிளம்பணும்…”
”சும்மா எடுத்துக்கிட்டு போ தாயி. காசெல்லாம் வேண்டாம்.”

“நல்லாச் சொன்னேய்யா, எதுக்கு போகிற வழியில உடையவா. இந்தாய்யா அம்பது ரூபா” கொடுத்தவள் பானையை எடுத்துக்கொண்டு சந்தைக்குள் மறைந்துபோனாள்.
பாக்கெட்டை துலாவி நோட்டுகளை எண்ணிப் பார்த்தார் மாடசாமி. சொல்லி வைத்தார்ப் போல சில்லறையும் நோட்டுகளுமாக ஆயிரம் ரூபாய் இருந்தன. அந்த ஒரு நிமிடம் தன்னை அவர் குபேரனாக நினைத்துக்கொண்டார். வசந்தக் காலத்திற்குத் திரும்பும் மரங்கள் போல மனசு பசுமை கொண்டது.

கடன் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் இந்தப் பணத்தைக்கொண்டு கொஞ்ச நாட்களுக்கு குபேரனாகவே வாழ்ந்துவிடலாம், என்று நினைத்தவர் கடன் காசுகள் ஒரு வகையில் செல்லாக் காசுகளே, என்று நினைத்தவராய் மனதிற்குள் புழுங்கினார்.

அந்த ஒரு நாள் இரவு அவரிடமிருந்து எளிதில் கழிந்துவிடவில்லை. மகன் கண் முன்னே வந்து நிழலாடினான். மகனின் கழுத்தில் யாரோ துண்டைப்போட்டு முறுக்குவதைப் போலவும் இழுப்பதைப் போலவும் காட்சிகள் விரிந்தன. இந்தப் பணத்தை எப்படியேனும் மகனிடம் கொண்டுப்போய் சேர்த்துவிட நினைத்தார்.

ஒரு வழியாக பொழுது விடிந்து வந்தது. ஓரம் கிழிந்த நான்கு முழ வேட்டியை எடுப்பில் தொடுக்கிக்கொண்டு அதில் பண முடிச்சை சுற்றிக்கொண்டு குடிசைக்குள்ளேருந்து வெளியே தலையை நீட்டினார்.

வாசலில் நின்றுக்கொண்டிருந்தான் வார வட்டிக்காரன், சிவனுக்கு எதிரே நந்தியைப் போல.
அவர் மனது கிடந்து அடித்துக்கொண்டது. சள்ளையும் கோபமுமாக மனதிற்குள் முணுமுணுத்தார். பின் சுதாகரித்து தலையை உள்ளுக்குள் இழுத்துக்கொள்ளப் பார்த்தார்.

“மாடசாமி…….“
“ வாங்க தம்பி!“ .
“இன்னையோட உங்கக் கணக்கை முடிங்க.“
“சரிங்க தம்பி.“.

வேட்டியை மொத்தமாக உருவியெறிந்துவிட்டு பணமுடிச்சை நீட்டினார். பசியோடு மேயும் ஆடு போல மொத்த காசையும் சடுதியில் எண்ணி பைக்குள் போட்டுக்கொண்டு “கணக்கு முடிஞ்சது“ என்று சொல்லிக்கொண்டு வண்டியை எடுத்தான் வட்டிக்காரன். மாடசாமியின் மனது பொங்கிக் குலைந்தது.

“ தம்பி ஒரு நிமிசம்….”
“ என்ன மாடசாமி?“

“ மவன் கண்ணுக்குள்ளேயே நிக்றான். வெறுங்கையோடு பார்க்கப்போக மனசு இடங்கொடுக்கல. ஆயிரம் ரூபா கொடுத்தீங்கனா மவனப் போய் பார்த்திட்டுவந்து ரெண்டு வாரத்தில கணக்கைக் கச்சிதமா முடிச்சிருவேன்”

”வாங்கிய கடன் சவ்வு மாதிரி இழுத்து இப்ப தான் கணக்க முடிச்சீங்க. அதுக்குள்ளே மறுகடனா?“

“ஆமா தம்பி. ரா முழுக்க நித்திர இல்ல. மவன் நினைப்பாகவே இருக்கு…”
அடுத்தடுத்த நொடிகள் ஊமையாக நகர்ந்தன.

“கொடுக்கிறேனோ இல்லையோனு யோசிக்காதீங்க தம்பி. ஊருக்குப் போய்வந்த கையோட மீதக் களியில பாண்டங்க செஞ்சி அதுகளச் சுட்டுக் காசாக்கிடுவேன். நம்பிக் கொடுங்க தம்பி. உங்கள சாமியா நினைக்கிறேன். .“

வட்டிக்காரன் ஒருகணம் நின்று மாடசாமியை பணம் கொடுக்கலாமா, வேண்டாமா என்கிற நோக்கில் பார்த்தான்.

“மண்ணைப் பாருங்க தம்பி. நான் கொடுக்கலனா இந்த மண்ண அள்ளிக்கிட்டு போங்க தம்பி.”
அவன் மண்ணையும் மாடசாமியையும் ஒரு பார்வை ஏளனமாக பார்த்தான்.

“என்ன தம்பி பார்க்குறீங்க. போயும் போயும் களிமண்ண காட்டுறேன்னா. உங்களுக்கு வேணுனா இது களியா தெரியலாம். என்னைப் பொறுத்த வரைக்கும் இது சாமி. எங்க ஊரு காவல் தெய்வங்கள இந்த மண்ணுலதான் செய்றேன். தொழில்மே சத்தியம் செய்றேன். வாங்கியக் கடனக் கட்டிடுவேன், ரொம்ப வேண்டாம் ஆயிரம் கொடுங்க…“

வாழைப்பூ மாதிரி கைகளைக் குவித்து கும்பிட்டபடி பார்வையால் கெஞ்சினார். பைனாஸ்காரன் வண்டியின் புகையை மாடசாமியின் முகத்தில் அடித்துவிட்டு வண்டியை முறுக்கிக்கொண்டு கிளம்பினான்.

வாய் வழியே பிறந்து வெடிக்கும் வார்த்தைகள் மாடசாமிக்கு நாசித் துவாரங்கள் வழியே வெடித்தன. மனதிற்குள் ஒருவிதமான பூகம்பம் நிகழ்ந்த அதிர்வு. உதடுகள் படபடத்தன.
“சாமிய விடு, பூமிய விடு. என் தொழில்மேல செய்த சத்தியத்த நம்பமாட்டேனுட்டானேய்யா“ அவரது மனம் நமைச்சது.

கட்டுத்தறியில் படுத்திருந்த இரண்டு காளைகள் ஒன்றுபோல எழுந்து உடலைக் குலுக்கி மாடசாமியைப் பார்த்தன. “நானிருக்கேன் சாமி, நீங்க எதுக்கு கவலைப்படுறீங்க,..” என்று சொல்வதைப் போல அப்பார்வை இருந்தது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.