வடக்கிலிருந்து இராணுவ முகாம்களை அகற்றாதீர்
வட மாகாணத்தில் அண்மையில் இராணுவ முகாம்கள் வாபஸ் பெறப்பட்டமை குறித்து தீவிர கவலை வெளியிட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, எதிர்வரும் மாதங்களில் மேலும் பல முகாம்களை அகற்ற திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தனது எக்ஸ் தளத்தில் (முன்னாள் ட்விட்டர்) இதனைக் குறிப்பிட்டுள்ள ராஜபக்ச, குடிமக்களுக்கு நிலத்தை மீள விடுவிப்பது இயல்பாகவே பிரச்சினை இல்லை என்றாலும், தேசிய பாதுகாப்பில் சமரசம் ஏற்படாமல் இருக்க பாதுகாப்புப் படைகளுடன் கலந்தாலோசித்து அத்தகைய முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
“30 வருடகால பயங்கரவாதத்திற்கு எதிராக இலங்கை போராடியது, இன்று அனைத்து சமூகங்களும் ஆயிரக்கணக்கான உயிர்களை பலி கொடுத்து சுதந்திரத்தை அனுபவிக்கின்றன”.
வடக்கு அல்லது தெற்காக இருந்தாலும், புவியியல் இருப்பிடத்தைப் பொருட்படுத்தாமல், தேசிய பாதுகாப்பைப் பேணுவது மிகவும் முக்கியமானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.