சிலிண்டரின் தேசியப் பட்டியல் ஆசனம் ரவிக்கு சென்றது ஏன் ?
பாராளுமன்றத்திற்கான தேர்தலில் தேசியப்பட்டியல் ஆசனங்கள் கிடைத்தால் அதில் ஒன்றை புதிய ஜனநாயக முன்னணி பெயரிடும் உறுப்பினர் ஒருவருக்கு வழங்குவதற்கு இணக்கம் காணப்பட்டிருந்தது.அதன் அடிப்படையிலேயே புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப்பட்டியல் உறுப்பினராக ரவி கருணாநாயக்கவின் பெயரை தேர்தல் ஆணைக்குழுவுக்கு அனுப்பியதாக புதிய ஜனநாயக முன்னணியின்செயலாளர் ஷாமிலா பெரேரா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
2024 ஆம் ஆண்டுக்கான பாராளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வதனை நோக்காகக்கொண்டு, பொதுஜன ஐக்கிய சுதந்திர முன்னணி( கிண்ணம் சின்னம்), பொதுஜன ஐக்கிய முன்னணி( கதிரை சின்னம்), புதிய கூட்டணி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி ஆகிய கட்சிகள் புதிய ஜனநாயக முன்னணியுடன் கூட்டணி அமைக்க இணக்கம் தெரிவித்தன. அதன்அடிப்படையில் எமது கட்சியின் உத்தியோகபூர்வ சின்னமான அன்னம் சின்னத்தை கேஸ் சிலிண்டராக மாற்றியமைக்கவும் கட்சி யாப்பில் சில திருத்தங்களை மேற்கொண்டு அதற்கு தேவையான வசதிகளை செய்து தருமாறும் குறித்த கட்சிகள் எங்களிடம் கேட்டிருந்தன.அதற்கமைய குறித்த கட்சிகள் மற்றும் புதிய ஜனநாயக முன்னணிக்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தின் 5ஆவது உப பிரிவின் பிரகாரம், தேர்தல் பெறுபேறுகளுக்கு அமைய கிடைக்கும் தேசியப்பட்டியலில் குறைந்தபட்சம் ஒரு ஆசனத்தை புதிய ஜனநாயக முன்னணியினால் பெயரிடப்படும் உறுப்பினர் ஒருவருக்கு வழங்க இணக்கம் தெரிவிக்கப்பட்டது. தேர்தல் பெறுபேறுகளுக்கு அமைய புதிய ஜனநாயக முன்னணிக்கு இரண்டு தேசியப்பட்டியல் ஆசனங்கள் கிடைக்கப் பெற்றன.
கட்சிகளுக்கிடையில் இடம்பெற்ற ஒப்பந்தத்தின் பிரகாரம் ஒரு தேசியப்பட்டியலுக்கு எமது கட்சியால் பெயரிடப்பட்ட ஒருவரை பெயரிடுவதற்கு எமக்கு வாய்ப்புக் கிடைத்தது. அதன் பிரகாரம் கடந்த 17ஆம் திகதி கூடிய எமது கட்சியின் செயற்குழுவினால், தேசியப்பட்டியலுக்கு பெயரிடப்பட்டிருக்கும் உறுப்பினரான ரவி கருணாநாயக்கவை அந்த பதவி்க்கு பெயரிடுவதற்கு ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.
நவம்பர் 18ஆம் திகதி தேசியப்பட்டியல் உறுப்பினர்கள் பெயரிடப்பட்டிருக்க வேண்டி இருந்தபோதும் அதுவரை கூட்டணியில் ஏனைய கட்சிகளின் பிரதிநிதித்துவம் தொடர்பில் எனக்கு அறிவிக்கப்படவில்லை. அதனால் எமது கட்சியினால் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கமைய ரவி கருணாநாயக்கவின் பெயரை தேர்தல் ஆணைக்குழுவுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுத்தோம். அதற்கு முன்னர் எமது கட்சியினால் முன்மொழியப்பட்ட பிரேரணையை ரணில் விக்ரமசிங்கவுக்கு அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுத்தோம்.
எனவே தேசியப்பட்டியல் உறுப்பினரை பெயரிடும் விடயத்தில் எங்களால் எந்தவித சட்டவிராேத நடவடிக்கையாே புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு எதிராகவோ எந்த நடவடிக்கையும் இடம்பெறவில்லை.