தேசியப் பட்டியல் ஊடாக ரணில் பாராளுமன்றம் செல்ல வாய்ப்பு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தேசியப் பட்டியல் ஊடாக எதிர்காலத்தில் பாராளுமன்றம் செல்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
தான் மீண்டும் பாராளுமன்றத்திற்கு வரப்போவதில்லை என்று ரணில் விக்கிரமசிங்க கூறியிருந்தாலும் அரசியல் நிலவரங்களை கருத்திற்கொண்டு அவர் பாராளுமன்ற உறுப்பினராவது தொடர்பில் ஆராயப்பட்டுள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொறுத்தமான நேரத்தில் ரணில் விக்கிரமசிங்கவை பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சி எதிர்பார்த்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
புதிய ஜனநாயக கட்சிக்கு கிடைத்துள்ள தேசியப் பட்டியல் ஆசனங்களின் ஊடாக இருவர் பாராளுமன்றம் செல்லவுள்ளதுடன் அவர்களின் ஒருவரை பதவி விலகச் செய்து அந்த ஆசனத்தை ரணில் விக்கிரமசிங்கவுக்கு பெற்றுக்கொள்ள ஐக்கிய தேசியக் கட்சி நடவடிக்கை எடுக்கலாம் என்று கூறப்படுகின்றது.
பாராளுமன்றத் தேசியப் பட்டியல் ஆசனத்திற்கு ஏற்கனவே அரசியல் கட்சிகளால் தேசியப் பட்டியலில் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளவர்கள் அல்லது தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர்களை தவிர வேறு எவரும் நியமிக்க முடியாது என்ற போதும், தேசியப் பட்டியல் ஊடாக சென்ற ஒருவர் பதவி விலகும் போது அந்த இடத்திற்கு வேறு எவரையும் நியமிப்பதில் சட்டத்தடைகள் கிடையாது. இதன்படியே ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றம் செல்ல வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.