கற்பாறையாக மாறிய இளம்பெண்…
இளம் பெண்ணொருவர் கற்பாறையாக உருமாறி ஓர் இன மக்களின் காக்கும் தெய்வமாக வழிபடப்பட்டு வருகிறார். சீனாவில்தான் இது நடந்து வருகிறது.
மரம், செடி, கொடிகள் அடர்ந்த காடுகளைத்தான் கண்டிருக்கிறோம். ஆனால் சீனாவில் உள்ள ஒரு காடு கற்பாறைகளால் அமைந்துள்ளது.
இது சீனாவின் யுன்னான் மாகாணத்தில் உள்ளது. இதனை கற்பாறைக்காடு என்று அழைக்கின்றனர். இந்தக் காட்டுக்குள் நுழைந்தால் அதற்குள் உயரமான கற்பாறைகள் நிறைந்திருப்பதைக் காணலாம். இங்கு பல்வேறு வடிவங்களில் அற்புதமான கற்பாறைகள் மற்றும் விலங்குகள், தாவரங்கள் என்பனவும் உள்ளன.
அத்துடன் நீர்வீழ்ச்சிகள், குகைகள், குளங்கள் என்பனவும் மற்றும் அதிசயத்தக்க வகையில் ஒரு நிலத்தடி ஆறும் உள்ளன.
எல்லாவற்றையும்விட இங்குள்ள அஷிமா என்னும் பாறை ஷானி என்னும் இன மக்களின் காக்கும் தெய்வமாக வழிபடப்பட்டு வருகிறது.
இந்தக் காடு இரண்டு உள்ளூர் குழுக்களின் தாயகமாகவும் விளங்குகிறது. இவர்கள் நக்ஷி மற்றும் ஈ அல்லது ஷானி என்றும் அழைக்கப்படுகின்றனர். ஈ அல்லது ஷானி என்னும் குழுவினரே அதிகளவில் வசிக்கின்றனர்.
இவ்விரண்டு குழுவினரும் கல் வீடுகளிலேயே வசிக்கின்றனர். இவர்கள் பாறைகளால் ஆன மில்களையும், கடைகளையும் நடத்துகின்றனர்.
இந்தக் காடு எப்படி உருவானது என்பது பற்றி கூறப்படுவதாவது, வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் இது ஒரு பெரிய கடலாக இருந்ததாம். சுமார் 250 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் கடலின் அடிப்பகுதி உயர்ந்து கடலுக்கு அடியில் இருந்த சுண்ணாம்புக் கல் மேற்பரப்புக்குக் வந்ததாம்.
சுண்ணாம்புக்கல் படிப்படியாக தேய்ந்து மழையால் கரைந்து போய்விட்டதாம். அதன் பின்னர் இயற்கை சூழல் மற்றும் வானிலை மாற்றங்களால் இது கற்பாறைக்காடாக உருவாவதற்கு வழி வகுத்ததாம். காலப்போக்கில் தொடர் மழை காரணமாக மண் கழுவப்பட்டு இந்தப் பாறை வடிவங்களை விட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இது இவ்வாறிருக்க இந்தக் காடுபற்றி இன்னொரு வாய்வழி கதையும் கூறப்படுகிறது. அதாவது ஒரு செல்வந்தரின் மகன் இங்கு வாழ்ந்த ஷானி இன பெண்ணான அஷிமாவைக் கடத்திச் சென்று திருமணம் செய்ய முயன்றானாம்.
அப்பொழுது அஷிமாவின் காதலன் அவளை மீட்பதற்கு தன்னால் இயன்றதையெல்லாம் செய்தானாம். ஆனால் அஷிமா வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டு காட்டில் இப்பொழுதும் காணப்படும் அஷிமா பாறை எனப்படும் பாறையாக உருவானாளாம். இந்தப் பாறை தற்பொழுது இங்கு வாழும் ஷானி இன மக்களின் பாதுகாக்கும் தெய்வமாக வழிபடப்பட்டு வருகிறது.