கடலை நோக்கி சாய்ந்திருக்கும் சோர்வாக்ஸ் வாட்டன் ஏரி
சோர்வாக்ஸ் வாட்டன் ஏரி (Sørvágsvatn), வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள பரோயே தீவுகளில் உள்ள மிகப்பெரிய ஏரியாகும். இது சர்வாகூர் மற்றும் வாகர் நகராட்சிகளுக்கு இடையே வாகர் தீவில் அமைந்துள்ளது.
ஃபராயே தீவுகள் டென்மார்க் அரசுக்கு உட்பட்ட தன்னாட்சி உள்ள பகுதியாகும். சோர்வாக்ஸ்வாட்டன் ஏரியின் பரப்பளவு 3.4 கிமீ2 (1.3 சதுர மைல்) ஆகும். இது வாகரில் அமைந்துள்ள இரண்டாவது பெரிய ஏரியான ஃபஜால்லவாட்டனை விட மூன்று மடங்கு பெரியது.
தூரத்தில் இருந்து பார்த்தாலும் கடலோரத்தில் ஓர் உயரமான நிலையில் (அதாவது விமானப் பயணங்களில்) இருந்து பார்த்தாலும் ஏரி கடலை நோக்கிச் சாய்ந்திருப்பது போலவும், அதன் உள்ளடக்கங்கள் படிப்படியாக ஓர் அருவி வழியாகச் சிந்துவது போலவும் தெரியும்.
இருப்பினும், இது ஒரு ஒளியியல் மாயை, இந்த ஏரி கடல் மட்டத்திலிருந்து நூற்றுக்கணக்கான மீற்றர் உயரத்தில் இருப்பது போலத் தோன்றினாலும், உண்மையில் அந்த வித்தியாசம் 30 மீற்றர் மட்டுமே. ஏரியைச் சுற்றியுள்ள செங்குத்தான சரிவுகளுடன், கூடிய உயர மாற்றங்கள்தான் சோர்வாக்ஸ்வாட்டனுக்கு இந்த தோற்றத்தைத் தருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.