நீலவண்ண சிறகுகளால் மிளிரும் பனங்காடை
பரிணாம வளர்ச்சியில் எண்ணற்ற உயிரினர்கள் அழகாலும், திறமையாலும் நம்மை வியப்புக்கு ஆளாக்குகின்றன. அந்த வகையில் பலவகையான நீலவண்ணங்களைத் தன்னுள் கொண்ட பறவைதான் பனங்காடை.
நீலநிறம் கொண்ட பனங்காடை தன் சிறகை விரித்துப் பறக்கும் போது வானில் சிறு வர்ணஜாலமே நடக்கும் அளவிற்கு அழகானது.
பனங்காடை இலங்கை, இந்தியா, ஈரான், தாய்லாந்து போன்ற நாடுகளிலும் காணப்படுகிறது. இந்தியாவில் பிகார், ஒடிசா, கர்நாடகா மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் இது மாநிலப் பறவையாக இருப்பது இதன் சிறப்பாகும். இவை திறந்த புல்வெளிகளிலும், காட்டுப் பகுதிகளிலும் வாழ்கின்றன.
இப்பறவை 30 – 40 செ.மீ நீளமும் சுமார் 166 கிராம் முதல் 176 கிராம் வரை எடையும் கொண்டது. இது ஆங்கிலத்தில் ‘இண்டியன் ரோலர்’(Indian roller) என்று அழைக்கப்படுகிறது. பெரும்பாலும் இப்பறவை மொட்டைப் பனைமரத்தில் துளையிட்டு வசிப்பிடமாகக் கொண்டு வாழ்வதால் பனங்காடை என்று அழைக்கப்படுகிறது.
இவை வயல்வெளிகளில் பயிர்களைச் சேதப்படுத்தும் சிறு சிறு பூச்சிகளையும், தவளைகளையும், எலிகளையும் உணவாக உட்கொள்வதன் மூலம் பயிர்களைப் பாதுகாக்கின்றன. இதனால் பனங்காடையை விவசாயிகளின் நண்பன் என்று கூறுகிறார்கள். பொதுவாக தனியாகவே காணப்படும் இப்பறவை, சில சமயங்களில் இணைப் பறவையோடு சேர்ந்திருக்கும்.
முன்பு மேலைநாட்டுச் சீமாட்டிகள் உடையலங்காரத்திற்குப் பனங்காடையின் இறகுகளைப் பயன்படுத்தியதும், அதற்காக இவை வேட்டையாடப்பட்டு இறகுகள் ஏற்றுமதி செய்யப்பட்டதும், அக்காலத்தில் இப்பறவை இனம் குறைவதற்கு காரணமாக அமைந்திருந்தது. அந்தவகையில். இன்று இப்பறவையினம் அழிந்துவரும் உயிரினங்கள் பட்டியிலில் சேர்ந்துள்ளது கவலைக்குரிய விடயமாகும்.