அஜர்பைஜான் காலநிலை மாநாட்டில் கவனத்தை ஈர்த்துள்ள திமிங்கிலம்
உலக தலைவர்கள் பங்கேற்கும், இரண்டு நாட்கள் காலநிலை நடவடிக்கை உச்சி மாநாடு (சி.ஓ.பி 29) அஜர்பைஜானில் உள்ள பாகு நகரில் நவம்பர் 11 ஆம் திகதி முதல் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை நடைபெற்று வருகிறது. இச்சூழலில் பாகு கடற்கரையில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள இறந்த திமிங்கலத்தின் மாதிரி பலரதும் கவனம் ஈர்த்துள்ளது. காயங்களினால் இறந்து இரத்தம் வழிந்து உறைந்த திமிங்கலம் ஒன்று கரை ஒதுங்கியிருப்பது போன்று மிகத் தத்ரூபமாக இந்த மாதிரி வடிவமைக்கப்பட்டுள்ளது.
கப்டன் பூமர் என்பவர் உருவாக்கியுள்ள இந்த திமிங்கல மாதிரி, காலநிலை மாற்றம் திமிங்கில வகை மீன்கள் மீது ஏற்படுத்தும் பாதிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. காலநிலை மாற்றத்தால் சுற்றுச்சூழலில் ஏற்படும் தாக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த இம்மாதிரி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த திமிங்கில மாதிரியைக் காண பாகு நகரவாசிகள் கூட்டம் கூட்டமாகக் கடற்கரைக்கு வந்து செல்கின்றனர்.
இதற்கு முன்னதாக இந்த திமிங்கில மாதிரியானது பாரிஸ், ஜூரிச் மற்றும் போர்டோக்ஸிலும் காட்சிப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அஜர்பைஜானில் மாநாடு நடத்தப்படுவற்கு எதிர்ப்பு
ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாட்டை அஜர்பைஜான் நடத்துவதற்கு சுவீடனைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதற்கு எதிராக ஜோர்ஜியாவில் பேரணியிலும் அவர் ஈடுபட்டுள்ளார். காலநிலை மாற்றத்துக்கு எதிரான மாநாட்டை நடத்துவதற்கு அஜர்பைஜானுக்குத் தகுதியில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இம்மாநாட்டில் 200 நாடுகளைச் சேர்ந்த தொழிலதிபர்கள், காலநிலை மாற்றம் தொடர்பான அறிஞர்கள், விஞ்ஞானிகள், பத்திரிகையாளர்கள் மற்றும் பல்துறை சார்ந்த வல்லுநர்கள் பங்கேற்றுள்ளனர்.