புதிய பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு 21 ஆம் திகதி
இன்று நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் வெற்றிபெறும் உறுப்பினர்களுடான 10ஆவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
அரசியலமைப்பின் 70 ஆம் உறுப்புரையின் பிரகாரம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு இது தொடர்பில் விசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, 10ஆவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு நவம்பர் மாதம் 21 ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகும் என ஜனாதிபதியினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
முதலாவது அமர்வுநாளில் சபாமண்டபத்தில் இடம்பெறும் செயற்பாடுகளில் பாராளுமன்ற செயலாளர் நாயகத்துக்கே பிரதான பொறுப்புக் காணப்படுகிறது. முதலாவது நாளில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக விசேடமான ஆசன ஒதுக்கீடுகள் எதுவும் இருக்காது என்பதுடன், விரும்பிய ஆசனத்தில் அமர்வதற்கான வாய்ப்புக் கிடைக்கும்.
அன்றைய தினம் சபாநாயகரை வாக்களின்பின் மூலம் நியமித்தல், சபாநாயகரின் பதவிப் பிரமாணத்தின் பின்னர் புதிய பாராளுமன்ற உறுப்பினர்களின் பதவிப் பிரமாணத்தின் பின்னர் பிரதி சாபாநாயகர் குழுக்களின் தலைவர், குழுக்களின் பிரதித் தவிசாளர் ஆகியோர் வாக்கெடுப்பின் மூலம் தெரிவுசெய்யப்படுவர்.
முதல் நாளின் பிரதான பணிகள் முடிவுக்கு வந்ததும் தற்காலிகமாக சபை ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் கூடும்போது ஜனாதிபதி பாராளுமன்றத்திற்குத் தலைமைதாங்கி கொள்கைப் பிரகடன உரையை நிகழ்த்துவார். ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரையைத் தொடர்ந்து ஜனாதிபதி பாராளுமன்றத்தை அடுத்த அமர்வு தினத்துக்கு ஒத்திவைப்பார்.