சுன்னாகத்தில் தாக்குதலுக்கு இலக்கான குடும்பத்திற்கு பொலிஸாரால் உயிர் அச்சுறுத்தல்
யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் பொலிஸாரினால் தமது உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ள நிலையில் தமக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
சுன்னாகம் பகுதியில் 9ம் திகதி இரவு இடம்பெற்ற விபத்து ஒன்றை தொடர்ந்து பொலிஸாருக்கும் பொது மக்களுக்கும் இடையே தர்க்கம் உருவானது. இதன்போது வாகனம் ஒன்றில் வந்த குழந்தை ஒன்று தூக்கி வீசப்பட்டதாகவும், வாகனத்தில் இருந்தவர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும், குற்றஞ்சாட்டப்பட்டதுடன், பொதுமக்கள் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு நீதிகோரி போராட்டத்தையும் நடத்தியிருந்தனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தமக்கு பொலிஸார் உயிர் அச்சுறுத்தல் விடுத்திருக்கும் நிலையில் பாதுகாப்பை வழங்ககோரி மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.
இது குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய இணைப்பாளர் கனகராஜிடம் தொடர் பு கொண்டு கேட்டபோது, முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதை உறுதிப்படுத்தியதுடன், முறைப்பாடு தொடர்பான மேல் நடவடிக்கைளை மேற்கொள்ளவுள்ளதாகவும் கூறியுள்ளார்.