நாளை நடைபெறும் 10 ஆவது பாராளுமன்றத் தேர்தலுக்கு அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி
நாளை வியாழக்கிழமை நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நாளை காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரையில் 22 தேர்தல் மாவட்டங்களிலும் 160 தேர்தல் தொகுதிகளில் 13,421 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்புகள் நடைபெறவுள்ளதுடன் இதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மாவட்ட தேர்தல் அலுவலகங்களினூடாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.
இதன்படி இன்றைய தினம் மாவட்ட தேர்தல் அலுவலகங்களிலிருந்து வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகள் எடுத்துச் செல்லப்படவுள்ளன. இதனையொட்டி இன்று காலை முதல் வாக்களிப்பு நிலையங்கள் அமையவுள்ள பகுதியில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இம்முறை தேர்தலில் 22 தேர்தல் மாவட்டங்களிலும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களை சேர்ந்த 690 குழுக்கள் போட்டியிடுவதுடன், அந்தக் குழுக்களின் சார்பாக நாடு முழுவதும் 8,352 வேட்பாளர்கள் போட்டியிடுகி ன்றனர்.
இந்தத் தேர்தலில் ஒரு கோடியே 71 இலட்சத்து 40 ஆயிரத்து 354 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். அத்துடன் இரண்டு இலட்சம் வரையிலான அரச ஊழியர்கள் வாக்களிப்பு நிலையங்கள் மற்றும் வாக்கு எண்ணும் நிலையங்களில் கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
இதேவேளை நாளை தினம் தேர்தலில் வாக்களிப்பதற்காக அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு தூரத்தின் அடிப்படையில் விடுமுறை வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அதாவது தொழில்புரியும் இடத்தில் இருந்து வாக்களிப்பு நிலையத்திற்கு 40 கிலோ மீற்றருக்கும் குறைவென்றால் அரை நாள் விடுமுறையும், 40 முதல் 100 கிலோ மீற்றருக்கு உட்பட்டோருக்கு ஒரு நாள் விடுமுறையும், 100 முதல் 150 கிலோ மீற்றர் வரையிலான தூரத்திற்கு உட்பட்டோருக்கு ஒன்றரை நாள் விடுமுறையும் 150 கிலோ மீற்றருக்கும் மேற்பட்ட தூரமாக இருந்தால் இரண்டு நாட்கள் விடுமுறையும் வழங்கப்பட வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை தேர்தலையொட்டி நாடு முழுவதும் அனைத்து பிரதேசங்களிலும் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன