பதற்றத்தை கூட்டும் ஹிஸ்புல்லா – பற்றி எரியும் இஸ்ரேலிய நகரம்!
லெபனானில் கடந்த செப்டம்பர் 17 ஆம் திகதி ஹிஸ்புல்லா கிளர்ச்சி அமைப்பு உறுப்பினர்களிடம் இருந்த தொலைத்தொடர்பு கருவியான பேஜர்கள் அடுத்தடுத்து வெடித்துச் சிதறின. இந்த டெக்கனிகல் தாக்குதலுக்கு இஸ்ரேல்தான் காரணம் என்று யூகிக்க முடிந்தாலும் இது பற்றி அந்நாடு எந்தவிதமான கருத்துக்களையும் வெளியிடாமல் இருந்தது.
ஆனால் அந்த தாக்குதலுக்கு ஒப்புதல் வழங்கியதே தான்தான் என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு தற்போது பொதுவெளியில் பகிரங்கமாக தெரிவித்தார். இதனால் மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இஸ்ரேலிய பகுதிகள் மீது ஹிஸ்புல்லா சரமாரியாக நடத்திய ராக்கெட் தாக்குதல் நிலைமையை மோசமாகியுள்ளது.
லெபனானில் இருந்து ஏவப்பட்ட சுமார் 165 ராக்கெட்டுகள் வடக்கு இஸ்ரேலில் உள்ள ஹைபா பே பகுதியில் மக்கள் மக்கள் அதிகம் வாழும் பகுதிகளின் மேல் பாய்ந்தது. இந்த தாக்குதலில் 1 வயது பெண் குழந்தை, 27 வயது பெண், 35 வயது ஆண் உள்பட மொத்தம் 7 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 80 ராக்கெட்டுகளை இஸ்ரேல் வான் பாதுகாப்பு படை இடைமறித்து அளித்ததால் பெரிய அளவிலான சேதம் ஏற்படவில்லை.
மீதமுள்ள ராக்கெட்டுகள் திறந்த வெளிகளில் விழுந்தன. கியாத் அடா பகுதியில் வீடுகள் மற்றும் வாகனங்கள் சேதமடைந்துள்ளன. ஹைபா பகுதியில் இதுவரை நடத்தப்பட்ட தாக்குதலில் இதுவே பெரிய அளவிலானது என்று அறிக்கை வெளியாகி உள்ளது. மேலும் ஹிஸ்புல்லா தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதால் இஸ்ரேல் ராணுவம் முன்னெச்சரிக்கையாக உள்ளது. தற்போதைய தாக்குதல் குறித்து கூறியுள்ள இஸ்ரேல் ராணுவம், ஹிஸ்புல்லா இந்த ராக்கெட்டுகளை ஏவ பய்னபடுத்திய லான்சர்களை டிரோன் தாக்குதல் மூலம் அழித்துவிட்டதாகத் தெரிவித்துள்ளது.