அளித்தார் மூலர் அவனி சிறக்கவே!… கவிதை… ஜெயராமசர்மா
என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
இனிய தமிழினில் எடுத்து மொழியவே
என்று சொல்லிய எங்கள் சித்தரே
எல்லா முணர்ந்திட்ட திருமூலர் ஆகுமே
மூன்று ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்த
முழுதும் தெளிந்திட்ட முழுமைச் சித்தராய்
தோன்றும் கருத்தெலாம் துணிவாய் சொல்லிட
வந்து நின்றிட்டார் மாநிலம் திருமூலர்
திருமுறைகள் வந்தன திருப்புகழும் வந்தது
திருக்குறளும் வந்தது நாலடியும் வந்தது
ஆனாலும் மூலர் அளித்திட்ட பொக்கிஷமே
திரு மந்திரமாய் சிறப்பாக ஒளிர்கிறதே
தத்துவம் சொல்கிறது சமயமும் சொல்கிறது
மருத்துவம் அறிவியல் அத்தனையும் சொல்கிறது
புதுமைக் கருத்துகள் பலபுகன்றும் நிற்கிறது
அவனியில் திருமூலர் அளித்திட்ட நூலேயாம்
அறமும் வருகிறது இன்பமும் வருகிறது
பொருளும் வருகிறது போகமும் வருகிறது
அருளும் வருகிறது அறிவும் அமர்கிறது
யோகமும் வருகிறது திருமூலர் திருநூலில்
மெஞ்ஞானம் விரிகிறது விஞ்ஞானம் மலர்கிறது
அஞ்ஞானம் அகல அத்தனையும் நிறைகிறது
யோகம் வருகிறது ஞானம் விரிகிறது
மேலான பரம்பொருளை நாடிடவே சொல்கிறது
மூடத்தனங்களை மூட்டை கட்டச் சொல்கிறது
ஆழமாய் சிந்திக்க அனைவரையும் அழைக்கிறது
உண்மைப் பொருளினை உளமிருத்த வேண்டி
உறைக்க உரைப்பதே திருமந்திர மாகும்
பக்தியைக் கிண்டல் செய்வதாய் நினையாதீர்
பரமனைக் கேலி செய்வதாய் நினையாதீர்
சத்தியத்தை உள்ளிருத்தும் தத்துவத்தை உணர்த்தவே
இத்தனையும் திருமூலர் இங்கிதமாய் புகலுகிறார்
நிலையாமை சிந்தனை நிலையான சிந்தனை
நிலைகுலையும் என்பதை நெஞ்சுக்கே சொல்லுகிறார்
பசுமரத் தாணியாய் பதியும்படி பகருகிறார்
திருந்தாதார் திருந்த திருமூலர் செப்புகிறார்
அணிமணி நிலைக்கா ஆடம்பரம் நிலைக்கா
தேடிய அத்தனையும் கூட வரமாட்டாது
ஆடிய ஆட்டங்கள் அத்தனையும் அடங்கிவிடும்
அப்போது உந்தன் அடையாளம் தெரிந்துவிடும்
அன்பே கடவுள் அன்பே சிவம்
அன்பே அனைத்தும் அறியார் அறிவிலார்
கோயிலும் உள்ளே கோமானும் அதனுள்ளே
தேடுங்கள் என்று செப்புகின்றார் திருமூலர்
பேரும் மாறும் ஊரும் மாறும்
உருவும் மாறும் உடையதும் மாறும்
மாறாதிருப்பதை மனம் எண்ண வேண்டும்
மனமே இறைவன் கோவிலாய் அமையும்
நிலைக்கும் பொருளை நினைத்திடு என்று
நிலத்தில் இருப்பார் மனத்தில் இருத்தவே
திருவாய் உருவாய் திரு மந்திரத்தை
அளித்தார் மூலர் அவனி சிறக்கவே
தமிழுக்கே உரித்தான தனியான கருவூலம்
அவனிக்கு வாய்த்த அறிவான வழிகாட்டி
அஞ்ஞானம் அகல அமைந்திட்ட அகராதி
அதுவே திருமூலர் அளித்திட்ட கொடையாகும்
மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண், அவுஸ்த்திரேலியா