இலக்கியச்சோலை

இலங்கை பத்திரிகை வரலாற்றின் சாதனையாளர்… ஊடகத்துறையில் ஒரு சகாப்தம் சிவகுருநாதன்!

கனடாவில் பேராசிரியர் பாலசுந்தரம் நினைவு கூர்ந்தார்.

இலங்கைப் பத்திரிகைத் துறை வரலாற்றில் நீண்ட நெடுங்காலம் ஓர் தேசிய பத்திரிகையில் பிரதம ஆசிரியராக பணிபுரிந்தவர் என்ற பெருமையை தன்னகத்தே கொண்டவர் கலாசூரி இ. சிவகுருநாதன்.

தமிழ், முஸ்லிம் படைப்பாளிகள் ஏராளமானோரை இலக்கியப் படைப்புத்துறைக்குள் கொண்டு வந்த பெருமை அவருக்குரியதாகும். அதன் பின்னரே நாடெங்கும் இலைமறைகாயாக இருந்த இலக்கியவாதிகள் பலருக்கு முகவரி கிடைக்கத் தொடங்கியது.

அத்துடன் கலாசூரி ஆர். சிவகுருநாதன் பலரை எழுத்தாளர்களாகவும் பத்திரிகையாளராகவும் உருவாக்கியதில் சாதனையே செய்துள்ளார் எனபதும் உண்மையே என கனடாவில் நிகழ்ந்த நூல் வெளியீட்டில் பேராசிரியர். இ. பாலசுந்தரம் அவர்கள் தெரிவித்தார்.

கடந்த வாரம் கனடாவில் ஐங்கரன் விக்கினேஸ்வராவின் மூன்று நூல்கள் வெளியிடப்பட்டது. பாலஸ்தீனம் எரியும் தேசம், ஓர்மத்தின் உறைவிடம் இஸ்ரேல், இலங்கை இதழியலில் சிவகுருநாதன், ஆகிய ஐங்கரன் விக்கினேஸ்வராவின் மூன்று நூல்கள் வெளியீடு ஸ்கார்பரோ ரீகிரியேசன் சென்டர் மண்டபத்தில் நடைபெற்றது.

கடந்த நவம்பர் 3ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை இவ் வெளியீட்டு நிகழ்வு சிறப்புற
நடைபெற்றது. நிகழ்வின் ஆரம்பத்தில் கனடா தமிழ் அறிவகம் மாணவர்களால் தமிழ் வாழ்த்துப் பாடலும், கனடா நாட்டு தேசிய கீதமும் பாடப்பட்டது.

இந்நிகழ்வின் தலைமையுரையை பேராசிரியர். இ. பாலசுந்தரம் அவர்கள் வழங்கினார். அத்துடன் சிறப்புரையை தமிழர் தகவல் ஆசிரியர் திரு. எஸ். திருச்செல்வம் அவர்கள் வழங்கினார்.

மேலும் இந்நூல் வெளியீட்டில் பேராசிரியர். இ. பாலசுந்தரம் உரையாற்றுகையில், இலங்கை தமிழ் இலக்கியத்தின் உருவாக்கத்திலும், வளர்ச்சியிலும் தினகரன் ஏற்படுத்திய பங்களிப்பும், தினகரன் பிரதம ஆசிரியர் கலாசூரி ஆர். சிவகுருநாதனின் பங்களிப்பும் மிக அளப்பரியதே என தெரிவித்தார்.

தினகரன் மற்றும் வாரமஞ்சரி பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர் பதவியை மூன்றரை தசாப்த காலத்துக்கும் மேலாக அலங்கரித்த அமரர் ஆர். சிவகுருநாதன் அவர்களுடன் நெருங்கிப் பழகிய அனைவருமே, அன்னாரை அடிக்கடி நினைவு கூர்ந்து கொண்டேயிருப்பார்கள். அவ்வாறு நினைவுகூருவதற்கான கனிவும், ஆளுமைப் பண்புகளும் நிறைந்தவராக வாழ்ந்து மறைந்தவர் அமரர் கலாசூரி ஆர். சிவகுருநாதன். அவரின் வல்லமை, ஆளுமை, எல்லோருடனும் நட்புடன் பழகும் தன்மை சிவகுருநாதன் அவர்களை மக்கள் மனதில் என்றும் பதிய வைத்துள்ளது.

இலங்கையின் தேசிய தினசரிகளில் ஒன்றான ‘தினகரன்’ என்றவுடன் நமது ஞாபகத்திற்கு வருபவர் தினகரன் பத்திகையில் நீண்டகாலம் பணிபுரிந்த தினகரன் பிரதம ஆசிரியர் கலாசூரி ஆர். சிவகுருநாதன் அவர்களே. கலாசூரி ஆர். சிவகுருநாதன் பத்திரிகைத்துறைப்பணி ஒரு சகாப்தம் என்றே கூற வேண்டும் என பேராசிரியர். இ. பாலசுந்தரம் தெரிவித்தார்

இந்நூல் வெளியீட்டு நிகழ்வில் வாழ்த்துரையை புகழ்பெற்ற வானெலி அறிவிப்பாளர் திரு. இளங்குமரன், கனடா தமிழ்ப் பாடசாலைகளின் அதிபர் திரு. கா. யோ. கிரிதரன், மற்றும் எழுத்தாளர் திருமதி. சிறி ரஞ்சினி ஆகியோர் வழங்கினர்.

பாலஸ்தீனம் எரியும் தேசம் நூல் அறிமுகவுரையை அரசியல் ஆய்வாளர் திரு. திரு. லெனி மரியதாஸ் அவர்கள் நிகழ்த்தினார். அதன்பின் ஓர்மத்தின் உறைவிடம் இஸ்ரேல் நூலின் அறிமுகவுரையை எழுத்தாளர் திரு. மீரா பாரதி அவர்கள் ஆற்றினார். அத்துடன் இலங்கை இதழியலில் சிவகுருநாதன் நூலின் அறிமுகவுரையை கவிஞர் திரு. அகனி சுரேஷ் அவர்கள் ஆற்றினார்.

இந்நூல் வெளியீட்டு நிகழ்வின் சிறப்புரையையும், நூலாசிரியரின் ஊடக – எழுத்து பற்றி உலகத்தமிழர் ஆசிரியர் திரு. கமல் நவரட்ணம் அவர்கள் வழங்கினார். கனடாவில் நிகழ்ந்த இந்நூல் வெளியீட்டின் இறுதியில் ஏற்புரையை நூலாசிரியர் திரு. ஐங்கரன் விக்கினேஸ்வரா அவர்கள் நிகழ்த்தினார்.

இலங்கையில் எழுத்தாளர் பலருக்கு அடையாள முத்திரையைப் பெற்றுக் கொடுத்தவர் சிவகுருநாதன் அவர்களாவார். அத்துடன் திறமையான எழுத்தாளர்களுக்கு தினகரனில் களம் அமைத்துக் கொடுப்பதில் அமரர் சிவகுருநாதன் எப்போதுமே பின்வாங்கியதில்லை.

எழுத்தாற்றல் உள்ளவர்களுக்கு பத்திரிகைத்துறைக்குள் இடமளிக்கப்பட வேண்டும் என்பதில் தனிப்பட்ட அக்கறை கொண்ட ஒருவராக சிவகுருநாதன் விளங்கினார். அதன் காரணமாக அமரர் சிவகுருநாதன் தினகரன் பத்திரிகையில் பிரதம ஆசிரியராகப் பதவி வகித்த காலப்பகுதியில் இலக்கியத்துறைக்குள் பிரவேசித்தோர் அதிகம் எனலாம் என பேராசிரியர். இ. பாலசுந்தரம் மேலும் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.