ரோஹிதவின் மருமகன் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்ட வாகனங்கள்: திருடப்பட்டவை
முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவின் மருமகன் ஒருவருக்கு சொந்தமான வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட 6 கோடி ரூபாய் பெறுமதியான, பதிவு செய்யப்படாத பி.எம்.டபள்யூ ரக கார் மற்றும் மிட்ஷூபிஷி ரக ஜீப் வண்டிகள் திருடப்பட்டவை என அரச இரசாயன பகுப்பாய்வு அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த பி.எம்.டபள்யூ கார் சுங்கம் அல்லது மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் பதிவு செய்யாது, பல சந்தர்ப்பங்களில் வானங்களின் பாகங்களாக இறக்குமதி செய்து சட்டவிரோதமாக இணைக்கப்பட்டுள்ளதுடன், மிட்ஷூபிஷி ஜீப் வண்டி ஆரம்பத்தில் வெள்ளை நிறத்தில் காணப்பட்டுள்ள நிலையில் பின்பு நீல நிறத்தில் வர்ணம் பூசப்பட்டு செஸி இலக்கத்தை போலியாக பொருத்தியுள்ளதாக இரசாயன பகுப்பாய்வு அறிக்கை தெரிவிக்கின்றது.
இந்நிலையில், தற்போது கண்டியில் பிரசித்த வாகன நிறுவனம் ஒன்றின் உரிமையாளர் குடும்பத்தின் உறுப்பினரான இசுறு சேரம் எனும் ரோஹித அபேகுணவர்தனவின் மருமகன் தலைமறைவாகியுள்ளார்.
சந்தேகநபருக்கு எதிராக கண்டி குற்றப்புலனாய்வு பிரிவு நீதிமன்றில் நேற்று செவ்வாய்கிழமை (12) காரணிகளை முன்வைத்த நிலையில் அதனைத் தொடர்ந்து சந்தேகநபருக்கு வெளிநாட்டுப் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக விசாரணை பிரிவுகள் தெரிவிக்கின்றன.
சந்தேகநபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகள் தற்போது விரிவாக இடம்பெற்று வருகின்றன.
கடந்த மாதம் 20ஆம் திகதி பொதுமக்கள் மூலம் கிடைக்கப்பட்ட தகவலுக்கமைய கண்டி குற்றப்பிரிவு மூலம் கண்டி அனிவத்த பிரதேசத்தில் காணப்படும் வீடொன்றில் இருந்து கண்டுபிடிக்கபட்ட இந்த இரு அதிசொகுசு வாகனங்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டன.
இவ்விரு அதிசொகுசு வாகனங்கள் தொடர்பில் உரிமையாளருக்கு எதுவித ஆவணமும், உரிமையை உறுதிப்படுத்த முடியாமையும் காரணமாக இவ்வாறு அவை கைது செய்யப்பட்டுள்ளன.
வீட்டின் உரிமையாளரான இசுறு சேரம் சத்தாதிஸ்ஸ என்பவர் கண்டி குற்றப்பிரிவினரிடம் இது தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை வழங்கியிருந்தார்.
அந்த வாக்குமூலத்தில் இந்த வாகனங்கள் தொடர்பில் எதுவித தகவலும் தெரியவில்லை எனவும் நெருங்கிய நண்பர் ஒருவர் மூலம் இந்த வாகனங்கள் தனது வீட்டில் கொண்டு வந்து விடப்பட்டதாகவும் குறிப்பிட்டிருந்ததுடன் வாகனங்களுக்கு சொந்தமான ஆவணங்களை விரைவில் பொலிஸாரிடம் ஒப்படைப்பதாக உறுதியளித்திருந்தார்.
எவ்வாறாயினும், இரசாயன பகுப்பாய்வு அறிக்கையை பெற்றுக் கொண்ட பின்னர், இசுறு சேரம் சத்தாதிஸ்ஸ என்பவர் தலைமறைவாகியுள்ளமை தெரியவந்துள்ளது.
மேலும், முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவின் மகளின் கணவரின் சகோதரர் ஒருவரான இசுறு சேரம் சத்தாதிஸ்ஸ என்பவருக்கு எதிராக நேற்று செவ்வாய்கிழமை (12) நீதிமன்றம் வெளிநாட்டு பயணத்தடை விதித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.