கதைகள்

ஆண்டு விழா!… கதை… சங்கர சுப்பிரமணியன்

சங்கர சுப்பிரமணியன்

சிங்கப்பூரில் ஒன்பது ஆண்டுகளுக்கு முன் குடியேறியது நேற்ற நடந்ததுபோல் இருக்கிறது. ஆண்டுகள் ஒன்றன்பின் ஒன்றாக ஓடிவிட்டன. நல்ல வேலை, கைநிறைய பணம் என்பதால் குடும்பத்திற்கென ஒரு பல்பொருள் அங்காடி மதுரை தெற்கு வாசலில் இருந்தும் மனைவி மற்றும் இரண்டு வயது மகனுடன் முத்தழகன் குடியேறினான்.

அப்பாவும் அம்மாவும் எவ்வளவோ தடுத்தும் பாலச்சந்தர் படத்தை பார்த்ததில் இருந்தே தொற்றிய சிங்கப்பூர் மோகம் அவனை வென்று விட்டது. கடைசியில் அப்பா சொன்ன வார்த்தைகள் மட்டும் இன்னும் அவன் நினைவில் பதிந்திருந்தது. என்ன என்று கேட்க ஆர்வமுள்ளவர்களுக்கு மட்டுமாவது சொல்லித்தான் ஆகவேண்டும்.

“முத்து இந்த வியாபாரத்தை மிகவும் கடும் உழைப்பினால் இந்த அளவுக்கு உயர்த்தியுள்ளேன். என் ஆயுளுக்குப்பின்னும் இது தொடர வேண்டும் நம்மை நம்பியும் சில குடும்பங்கள் வாழ்கிறார்கள். உன் ஆசைக்கு ஒன்றிரண்டு ஆண்டுகள் இருந்து விட்டு வா”
அப்பா விமனநிலையத்தில் வைத்து சொன்னார்.

“சரி அப்பா, உங்கள் ஆசையையும் நான் நிறைவேற்றி வைப்பேன்.” என்று அப்பாவுக்கு பதில் சொன்னதெல்லாம் நெஞ்சில் நினைவாடின.

இன்று சிங்கப்பூர் நண்பர்கள் நற்பணி மன்றத்தின் ஆண்டு விழாவுக்கு அழைப்பு வந்துள்ளது. எப்படி சிங்கப்பூரில் இருந்து திரும்பினேன் என்கிறீர்களா? சிங்கப்பூர் சென்று இரண்டு மூன்று ஆண்டுகளிலேயே அப்பா வா வா என்றழைத்து தொந்தரவு கொடுக்க ஆரம்பித்து விட்டார். எப்படியெல்லாமோ அவரை சமாளித்து ஒன்பது ஆண்டுகளை ஓட்டினேன்.

கடைசியில் அப்பா உடல் நிலையில்லாமல் படுத்த படுக்கையாக இருக்கிறார் உடனே வா என்று அம்மா அழைக்கவே மதுரைக்கு வந்தோம். அப்பா மிகவும் முடியாமல்தான் இருந்தார். அவரைவிட்டு திரும்ப முடியாமல் ஒருமாதத்தில் இறந்தும் போனார். இருக்கும் வரை அப்பாவின் அருமை தெரியாத எனக்கு அவர் இறந்த பின்னரே அருமை தெரிந்தது.

குடும்பத்துக்காக அவர் உழைத்த உழைப்பு கண்முன் தெரிந்தது. சிங்கப்பூர் வாழ்க்கைக்கு முடிவு கட்டி பல்பொருள் அங்காடியை ஏற்று நடத்தினேன். இன்னொருவரின் கீழ் அடிமையாய் வாழ்வதைவிட நம்மிடமே ஐந்துபேர் வேலை பார்ப்பதும் அவர்களுக்கு வேலை கொடுப்பதும் எனக்கு ரொம்பவே பிடித்துப்போனது.

சிங்கப்பூரை விட்டு வந்துவிட்டாலும் நண்பர்கள் நற்பணி மன்ற தொடர்பும் நண்பர்களின் தொடர்பும் நீடித்தது. சிங்கப்பூர் சென்றபோது இருபதுபேருடன் தொடங்கிய நற்பணி மன்றத்தில் இன்று நூற்று முப்பத்தேழு உறுப்பினர்கள் இருக்கின்றனர்.

இந்த நற்பணி மன்றத்தினரால் ஆண்டு தோறும் ஆண்டுவிழா நவம்பர் மாதத்தில் நடக்கும். இவ்வாண்டும் நவம்பரில் நடக்கும் ஆண்டு விழாவுக்கு அழைப்பு வந்ததைப்பற்றி
கீதாவிடம் சொன்னேன். இந்த விழாவில் தமிழரின் பாரம்பரிய நடனமான ஒயிலாட்டம், கரகாட்டம் போன்றவை நடக்கும். கும்மி, கோலாட்டம் போன்றவைகளுடன் நாடகங்கள், தெருக்கூத்து, பறை மட்டும் புலி ஆட்டம் போன்ற சிறப்பு நிகழ்ச்சிகளும் உண்டு.

இவற்றை எல்லாம் விரும்பும் முத்துவின் மனைவி கீதாவுக்கு சிங்கப்பூர் செல்லும் ஆசையுண்டாக,

“என்னங்க அப்படியானால் ஆண்டு விழாவுக்கு சிங்கப்பூர் போகலாமா? கோவிந்தசாமி அண்ணா சரோஜா அக்கா சுந்தர் மச்சான் எல்லாத்தையும் பார்த்தது மாதிரி இருக்கும்” என்று கணவனை கேட்டாள்.

“எல்லோரையும் பார்த்த மாதிரிதான் இருக்கும். அதுமட்டுமா சிரங்கோன் மாரியம்மன் கோவில் மற்றும் முஸ்தபா கடைக்கும் போகலாம். நண்பர்களையும் பார்க்கலாம் அவர்களுடன் கோமளவிலாஸ் உணவகத்தில் சாப்பிடவும் செய்யலாம்.” என்று அவளது ஆசையைத் தூண்டிவிட்டான்.

“ஆமங்க சரியாத்தான் சொன்னீங்க. அப்படீன்னா விமானத்துக்கு பதிவு செய்றீங்களா?” என்றாள்.

“நல்லாத்தான் சொன்ன போ. ஆண்டு விழாவை மெய் நிகரில் நடத்துறாங்களாம்”

“இதென்னங்க கொடுமை. இரண்டு மூன்று ஆண்டுகளாக கொரோனா தொற்று என்பதால் நடத்தாமல் விட்டாங்க. அப்புறம் ஒருமுறை மெய்நிகரில் நடத்தினாங்க. இப்ப என்னவாம்?” என்று கீதா வெறுப்புடன் கேட்டாள்.

கேட்ட கீதாவிடம், இப்ப ரெண்டு பேருக்கு கொரோனா வந்திருக்காம் என்று பதில் சொன்னான். அதென்னவோ வேரியண்டோ பூரியண்டோன்னு சொல்றாங்களே அதுவா என மனைவி திரும்பவும் கேட்க வேரியண்ட்தான் என்று பதிலைச் சொன்னான்.

பதிலைக் கேட்ட கீதா எதை நம்புறது உண்மையிலேயே கொரோனாவோ இல்ல செலவை மிச்சப் படுத்தும் திட்டமோ அந்த சொக்கநாதருக்கும் மீனாட்சிக்கும்தான் வெளிச்சம் என்று முணுமுணுத்தபடியே கிரைண்டர் மாவு அரைத்து முடிந்ததை
ஒலி எழுப்பி அறிவிக்கவும் கிரைண்டரை நோக்கி சென்றாள்.

-சங்கர சுப்பிரமணியன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.