ஜேவிபிக்கு அதிக ஆசனம் கிடைத்தால் நாடு சீரழியும்
தேசிய மக்கள் சக்திக்கு வாய்ப்பை கொடுத்துப் பார்த்தால் என்ன என்று சிலர் கருதுகின்றனர். இப்போதுள்ள அரச தரப்புக்கு வாக்களித்து விட்டு ஆறு மாதங்களின் பின்னர் யோசிப்பீர்கள். ஆகவே ஆறு மாதங்கள் வரை காத்திருங்கள். இவர்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கப் போவதில்லை என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வேட்பாளரும் பாராளுமன்ற முன்னாள் உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணத்திற்கு வந்த ஜனாதிபதி சில கருத்துக்களை வெளியிட்டுள்ளார். ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னரும் யாழ்ப்பாணம் வருகைதந்த ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தனது கட்சி அரசாங்கத்தை அமைத்தால் பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கம் உள்ளிட்ட பல விடயங்களை செய்வதாக தெரிவித்தார். ஆனால் அனுர குமார திஸாநாயக்க தற்போது ஆட்சிக்கு வந்ததும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் மாறான கருத்துக்களை தெரிவிக்கிறார்.
ஜேவிபி இராணுவத்துடன் பேசியே தமிழ் மக்களின் காணி விடுவிக்கும் என்றால் அது சாத்தியப்படாது. ராஜபக்ஷ காலத்திலும் இதே நிலைதான் காணப்பட்டது.
சோசலிச வழி வந்த அனுர குமார திஸாநாயக்க இவ்வாறு சொன்னால் காணி விடுவிப்பு என்பது குதிரைக் கொம்பு தான்.
அவ்வாறு தேசிய மக்கள் சக்திக்கு வாய்ப்பை கொடுத்துப் பார்த்தால் என்ன என்று சிலர் கருதுகின்றனர். இப்போதுள்ள அரச தரப்புக்கு வாக்களித்து விட்டு ஆறு மாதங்களின் பின்னர் யோசிப்பீர்கள். ஆகவே ஆறு மாதங்கள் வரை காத்திருங்கள். இவர்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கப் போவதில்லை.
தமிழ் மக்கள் தம்மீது நம்பிக்கை வைத்து வாக்களித்துள்ளார்கள். ஆகவே இனி நாங்கள் பார்த்து கொள்கிறோம் என்றால் தமிழ் மக்கள் தமது பிரச்சினையை கையாள்வதில் நெருக்கடி ஏற்படும்.
ஊழல் இலஞ்சத்துக்கு ஒழிப்புக்கு மட்டும் ஆதரவளிக்கலாம். ஆனால் சிஸ்டம் சேஞ் என்ற நிகழ்ச்சி நிரலில் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் நிலை இருக்கிறதா?
ஜேவிபிக்கு அதிக ஆசனம் கிடைத்தால் நாடு சீரழியும் என ஜேவிபி ஸ்தாபகர் ரோஹன விஜேவீர மகனே சொல்கிறார்.
தேசிய மக்கள் சக்தி 113 ஆசனங்களை பெறுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அவ்வாறு கிடைக்காதுவிட்டால் நெருக்கடி ஏற்படும். இது சந்திரிகா குமாரதுங்க காலத்தில் நிகழ்ந்தது. ஜனாதிபதி ஒரு கட்சியாகவும் பாராளுமன்ற பெரும்பான்மை மற்றொரு கட்சியாகவும் கிடைத்தால் நிலைமை மோசமாகும்.
தமிழர் தரப்பு சரியான ஒரு வலுவான கொள்கை கொண்ட தரப்பை ஆதரிக்க வேண்டும். தமிழ் தேசிய பிரச்சினையை கையாளக்கூடியவர்களை தவிர்த்தால் நிலைமைகள் மோசமாகும்.
இளைஞர்கள், யுவதிகள் அதீத கற்பனையில் மிதக்காமல் இந்த கால கட்டத்தில் யார் பாராளுமன்றம் சென்றால் சிறந்தது என்பதை பார்த்து தெரிவு செய்ய வேண்டும் – என்றார்