தமிழ், முஸ்லிம் எம்.பிகளை இணைத்து தேசிய ஐக்கிய அரசாங்கம்: விஜித ஹேரத் அறிவிப்பு
தமிழ், முஸ்லிம் கட்சிகளை இணைத்து தேசிய ஐக்கிய அரசாங்கத்தை நிறுவுவதற்கு தேசிய மக்கள் சக்தி எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
”பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மையை பெறும். எவ்வாறாயினும், தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்து தேசிய ஐக்கிய அரசாங்கத்தை நிறுவுவதற்கு நாம் எதிர்பார்த்துள்ளோம்.
தேசிய ஐக்கிய அரசியல் சூழலை வளர்ப்பதில் கட்சி ஆர்வமாக உள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களைத் தவிர்த்து தமிழ் மற்றும் முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு தேசிய ஐக்கிய அரசாங்கத்தை அமைப்பதற்கான அழைப்பு விடப்படும்.
தேசிய ஐக்கிய அரசாங்கத்தை அமைப்பதன் மூலம் இந்த நாட்டில் தேசிய ஐக்கியத்தை உண்மையாகவே அடைய முடியும். எனினும் ஐக்கிய அரசாங்கம் இல்லாவிட்டாலும் எம்மால் அரசாங்கத்தை வெற்றிகரமாக நடத்த முடியும் மற்றும் அனைத்து சமூகங்களுக்கும் சேவை செய்யவும் முடியும்” என்றும் கூறியுள்ளார்.
என்றாலும் அண்மையில் யாழ்ப்பாணத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று குழு உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பிமல் ரத்நாயக்க, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கத்தில் அமைச்சுப் பதவி வழங்கப்பட மாட்டாது.
கடந்த தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்த டக்ளஸ் தேவானந்தா, நாட்டில் ஏற்பட்ட கணிசமான பிரச்சினைகளுக்கு பங்களிப்பை வழங்கிய முன்னைய அமைச்சரவையில் அங்கம் வகித்தவர்.
டக்ளஸ் தேவானந்தா , அண்மையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்திருந்தார். இதுதொடர்பிலான புகைப்படத்தை சமூக ஊடகங்களிலும், பத்திரிகைகளிலும் அவரது பிம்பத்தை உயர்த்துவதற்காக அவரது தரப்பு பயன்படுத்தியிருந்தது.
இலங்கைக்கு பாதகமான கொள்கைகளை வகுத்து மகிந்த ராஜபக்ச, ரணில் விக்ரமசிங்க, மைத்திரிபால சிறிசேன ஆகியோரின் அமைச்சரவையிலும் டக்ளஸ் தேவானந்தா, உறுப்பினராக இருந்தார்.
றிசாத் பதியுதீன், சுமந்திரன், ஸ்ரீதரன் மற்றும் சில தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகள் தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களின் வாக்குகளைப் பெறுவதற்காக தவறான பிரச்சாரங்களில் ஈடுபடுகின்றனர்.” எனக் குற்றம் சுமத்தியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.