தமிழ், முஸ்லிம் கட்சிகளுடன் ஜனாதிபதி பேச்சுவார்த்தை?: திஸ்ஸ அத்தநாயக்க வெளிப்பாடு
பெரும்பான்மை அதிகாரத்துடன் கூடிய நாடாளுமன்றம் ஒன்றை அமைப்பது தொடர்பில் எழுந்துள்ள சந்தேகம் காரணமாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க வடக்கிலுள்ள தமிழ் கட்சிகள் மற்றும் முஸ்லிம் கட்சிகளுடன் கூட்டு அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் கிடைத்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி குழு தலைவர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
தற்போது தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியின் மீது பொதுமக்களின் நம்பிக்கை படிப்படியாக குறைவடைந்து வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
இன்று நாட்டில் அரசியல் நிலைமை மிகவும் நிச்சயமற்றதாக உள்ளது.
ஆறு வார கால அரசாங்கத்தின் மீது மக்களின் நம்பிக்கை படிப்படியாக உடைந்து வருகிறது.
அதாவது அடுத்த நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு அதிகாரத்தை எவராலும் கைப்பற்ற முடியாது. எதிர்காலத்தில் சமநிலையான நாடாளுமன்றம் பிறக்கும். அது எல்பிட்டிய தேர்தல் முடிவுகளில் பிரதிபலித்தது.
இந்த நாட்டு மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைக் கூட தீர்க்க முடியாது என்பதை இந்த தற்காலிக அரசாங்கம் தற்போது நிரூபித்துள்ளது.
இவர்கள் எந்த திட்டமும் இல்லாமல் ஆட்சிக்கு வந்தனர். அவர்கள் மேடைகளில் அனைவரையும் விமர்சித்தார்கள், ஆனால் நாட்டை முன்னோக்கி நகர்த்துவதற்கான எந்த திட்டமும் இல்லை.
வந்தவுடனே எரிபொருளின் விலை குறைக்கப்படும் என்றார்கள். மின் கட்டணம் குறைக்கப்படும் என்றனர். ஆனால் அவை எதுவும் கூறியபடி நடக்கவில்லை.
எதிர்வரும் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிப்பதில் அவர்கள் தற்போது பாரிய பிரச்சினையை எதிர்நோக்கியுள்ளனர்.
தற்போது 2027ஆம் ஆண்டிலிருந்து கடனை செலுத்தத் தொடங்க வேண்டும்.
இந்த நாடு திவாலாகியுள்ளது . வளர்ச்சி நிறுத்தப்பட்டுள்ளது. மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். இவற்றைச் செய்வதற்கான திட்டங்கள் எதுவும் இல்லை. மேடைகளில் கூச்சலிடுவது போல் இவற்றை எளிதாக செய்துவிட முடியாது.
மளிகைக்கடை கூட திறக்காதவர்கள் ஆட்சி அமைக்க முடியுமா? எல்லாவற்றிற்கும் அனுபவம் தேவை. நாடாளுமன்றத்தில் அனுபவம் வாய்ந்த எம்.பி.க்கள் சிலராவது இருக்க வேண்டும் என்பதே எங்களின் எண்ணம். புது முகங்களை வைத்து நீங்கள் சொல்வது போல் செய்ய முடியாது.
ஐக்கிய மக்கள் சக்தியின் வாக்குகளை உடைக்க ரணில் விக்கிரமசிங்க மீண்டும் களத்தில் இறங்கியுள்ளார். அதைத் தவிர அவருக்கு வேறு எந்த நோக்கமும் இல்லை.