இலங்கையில் இறுதிகட்ட பரப்புரை ஓய்ந்தது: தேர்தலுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி
நாடாளுமன்றத் தேர்தலுக்கான இறுதிகட்ட பிரசாரம் திங்கட்கிழமை நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைய உள்ளதுடன், நாளையும் நாளை மறுதினமும் மௌனகாலமாக தேர்தல் ஆணைக்குழுவால் அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 14ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதன் நிமித்தம் பிரதானக் கட்சிகளும், சிறிய மற்றும் ஏனைய கட்சிகளும், சுயேச்சைக் குழுக்களும் கடந்த மாதம் 14ஆம் திகதிமுதல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவந்தன.
கடந்த ஜனாதிபதித் தேர்தல் போன்று பிரச்சாரம் சூடுபிடிக்கவில்லையென தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தெரிவித்திருந்தன. என்றாலும், ஆளுங்கட்சியான தேசிய மக்கள் சக்தி மாத்திரம் நாடுமுழுவதும் ஜனாதிபதித் தேர்தலை போன்று பிரமாண்ட கூட்டங்களை நடத்தியிருந்தது.
மௌன காலத்தில் வேட்பாளர்கள் எவ்வித பிரச்சாரத்திலும் ஈடுபட முடியாதென தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்தார்.
இன்று திங்கட்கிழமை கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்ர் வெளியிட்ட அவர்,
“தேர்தலுக்கான பிரசாரப் பணிகள் அனைத்தும் திங்கட்கிழமை (இன்று) நள்ளிரவுடன் நிறைவுக்கு வருகின்றன. ஊடகங்கள் வாயிலாக கட்டணம் செலுத்தப்பட்டட விளம்பரங்களுக்குத் தடை விதிக்கப்படுகின்றது. அதன் பிறகு தேர்தல் தினம் வரை மௌன காலமாகும்.
தேர்தல் பிரசாரத்துக்காக அமைக்கப்பட்டுள்ள அலுவலகங்களை அகற்றிக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கின்றோம். அதேபோன்று வேட்பாளர்களின் இல்லங்களில் பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டு அலங்கரிக்கப்பட்டிருந்தால் அவற்றையும் அகற்ற வேண்டும். இல்லையேல் தேர்தல் சட்டத்துக்கு அமைய அவை அனைத்தும் அகற்றுவதற்கான நடவடிக்கைககள் எடுக்கப்படும்.
வாக்காளர்கள் தமது வாக்கைப் பயன்படுத்துவதற்காக உரிய வகையில் விடுமுறையைப் பெற்றுக்கொடுக்குமாறு அரச மற்றும் தனியார் துறையினரிடம் கேட்டுக்கொள்கின்றேன்.
தேர்தலை நியாயமாகவும் சுமூகமாகவும் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. ஆகையால் அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.” – என்றார்.
மௌன காலத்தில் தேர்தல் விதிமீறல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இக்காலப்பகுதியில் சமூக வலைத்தளங்கள் ஊடாகவும் பரப்புரை முன்னெடுக்க முடியாது. அதனை கண்காணிப்பதற்கு விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்கெடுப்பு எதிர்வரும் 14 ஆம் திகதி காலை 7 மணி முதல் மாலை 4 மணிவரை இடம்பெறும் எனவும் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதேவேளை, இறுதி பிரச்சாரக் கூட்டங்களின் காணொளி காட்சிகள் மற்றும் விவரங்களை நாளை செவ்வாய்க்கிழமை தமது பிரதான செய்தியில் மாத்திரம் தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகள் வெளியிட முடியும். பத்திரிகைகளிலும் செய்திகளை சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் செய்தித்தாள்களின் தலைப்புச் செய்திகளை வெளியிடும் போது கட்சிகள் அல்லது வேட்பாளர்களை விளம்பரப்படுத்தவோ அல்லது பாரபட்சம் காட்டவோ கூடாது எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு நிபந்தனை விதித்துள்ளது.
பொதுத் தேர்தலில் 60ஆயிரம் வரையிலான பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட உள்ளனர். வாக்குச் சாவடிகள் மற்றும் வாக்கு எண்ணும் மத்திய நிலையங்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், வாக்காளர்கள் சுமூகமான முறையில் வாக்களிப்பதற்கான பாதுகாப்பு ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களம் கூறியுள்ளது.