உத்தியோகபூர்வ இல்லத்தை வழங்க மறுக்கும்: சனத் நிஷாந்தவின் மனைவி!
வாகன விபத்து ஒன்றின் மூலம் உயிரிழந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த பதவி வகித்த காலப்பகுதியில் அவருக்கு அரசாங்கத்தால் வழங்கப்பட்டிருந்த உத்தியோகபூர்வ இல்லத்தை மீள ஒப்படைக்குமாறு அவரது மனைவியான சட்டத்தரணி சமரி பெரேராவுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்ட போதிலும் அவர் தொடர்ந்தும் அதனை புறக்கணித்து வருவதாக அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த உத்தியோகபூர்வ இல்லம் தவிர்ந்த முன்னாள் அமைச்சர்கள் பயன்படுத்திய ஏனைய அனைத்து உத்தியோகபூர்வ இல்லங்களும் கடந்த 8ஆம் திகதியாகும் போது மீள ஒப்படைக்கப்பட்டுள்ளன.
முன்னாள் எதிர்க்கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அமரர் ஆர். சம்பந்தனுக்கு வழங்கப்பட்டிருந்த உத்தியோகபூர்வ இல்லத்தை எதிர்வரும் 12ஆம் திகதி செவ்வாய்கிழமையன்று மீள ஒப்படைப்பதாக அவரது மகள் அறிவித்திருந்தார்.
எனினும், சனத் நிஷாந்தவின் மனைவி, சனத் நிஷாந்தவுக்கு வழங்கப்பட்டிருந்த உத்தியோகபூர்வ இல்லத்தை மீள ஒப்படைப்பதை தொடர்ந்தும் புறக்கணித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனை அவதானத்தில் கொண்டு குறித்த உத்தியோகபூர்வ இல்லத்தின் மின்சாரம் மற்றும் நீர் விநியோகங்களை இடைநிறுத்த கடந்த 8ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதேவேளை, உயிரிழந்த நாளில் இருந்து தொடர்ந்தும் குறித்த உத்தியோகபூர்வ இல்லத்தில் சனத் நிஷாந்தவின் மனைவி மற்றும் அவரது குழந்தைகள் தங்கியுள்ளதாகவும் இல்லத்துக்கான வாடகையை வழங்கக் கூட சனத் நிஷாந்தவின் மனைவி நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என அறியக்கிடைத்துள்ளது.
நிலுவையில் உள்ள வீட்டுக்கான வாடகைத் தொகையை செலுத்த தயாராக இல்லாமல், வீட்டில் கட்டாயமாக தங்கியிருக்கும் ஒரு சூழலில் சட்ட ரீதியாக வீட்டை பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறும் அமைச்சு அதிகாரிகள் உத்தியோகபூர்வ இல்லங்களை அரசாங்கத்திற்கு மீள ஒப்படைக்க மேற்கொள்ளும் செயற்பாடுகளில் போதுமான அளவு ஆதரவை மறைந்த முன்னாள் அமைச்சர் சனத் நிஷாந்தவின் மனைவி வழங்கவில்லை என சுட்டிக்காட்டியுள்ளனர்.