காசா போர் நிறுத்தம்; மத்தியஸ்த பேச்சுவார்த்தையில் இருந்து கட்டார் விலகியது?
காசா போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் இருந்து கட்டார் வெளியேறியதாக கூறப்படும் தகவலை அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் நிராகரித்துள்ளது.
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான மத்தியஸ்த முயற்சிகள் தற்காலிகமாகத் தடுக்கப்பட்டாலும், இரு தரப்பினரும் தங்கள் நேர்மையான விருப்பத்தை வெளிப்படுத்தினால் பேச்சுவார்த்தை தொடரும் என்று கட்டார் வெளியுறவு செய்தித் தொடர்பாளர் மஜித் அல் அன்சாரி கூறியுள்ளார்.
முன்னதாக போர் நிறுத்தம் தொடர்பான மத்தியஸ்த பணியில் இருந்து கட்டார் விலகுவதாக சர்வதேச செய்தி நிறுவனங்கள் குறிப்பிட்டிருந்தன.
இந்நிலையில், போர் நிறுத்தத்தை சாத்தியமாக்குவதற்கான கடைசி முயற்சியாக, 10 நாட்களுக்கு முன் நடந்த பேச்சுவார்த்தையில், இரு தரப்பினர் மத்தியில் உடன்பாடு ஏற்படாவிட்டால், சமரச முயற்சிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டதாகவும் மஜித் அல் அன்சாரி கூறினார்.
இருப்பினும், தீவிரமாக அணுகினால் பேச்சுவார்த்தை தொடரும் என்று கட்டார் வெளியுறவு செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
கத்தாரில் உள்ள ஹமாஸ் அரசியல் விவகார அலுவலகம் தொடர்பாக சர்வதேச ஊடகங்களில் இரண்டு நாட்களாக வெளிவந்த செய்தியையும் வெளிவிவகார அமைச்சு நிராகரித்துள்ளது.
தோஹாவில் உள்ள அவர்களது அலுவலகம் ஹமாஸ் உடனான தொடர்பு மையமாக செயல்படுகிறது. கடந்த காலங்களில் பல மத்தியஸ்தம் மற்றும் சமாதான முயற்சிகளில் இந்த அலுவலகம் முக்கிய பங்காற்றியுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பரில் காசாவில் தற்காலிக போர்நிறுத்தத்தை எட்டியதில் ஹமாஸ் அலுவலகம் முக்கிய பங்காற்றியதாகவும், பெண்கள் மற்றும் குழந்தைகளின் விடுதலைக்கு வழி வகுத்ததாகவும் அவர் கூறினார்.
ஹமாஸ் அலுவலகத்தை மூடுமாறு கட்டார் கோரியதாக நேற்று பல்வேறு சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
2023 ஒக்டோபர் ஏழாம் திகதி இஸ்ரேல் காசா மீது தாக்குதலை நடத்தியதில் இருந்து போர்நிறுத்தத்தை அடைவதற்கும், பிராந்தியத்தில் அமைதியைப் பேணுவதற்கும் கட்டார் அமெரிக்காவுடன் செயலில் உள்ள நாடாக இருந்து வருகிறமை குறிப்பிடத்தக்கது.