மீண்டும் அதிகாரத்திற்கு வரும் ட்ரட்ப்; எல்லைப் பாதுகாப்பை கடுமையாக்கும் கனடா
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் அதிகாரத்திற்கு வந்துள்ள நிலையில், கனடா தனது எல்லையில் ரோந்து பணியை பலப்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் இருந்து புலம்பெயர்ந்தோர் வரக்கூடும் என்ற தகவலை அடுத்து கனடா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. ஆவணங்கள் இல்லாமல் சட்டவிரோதமாக நாட்டில் இருப்பவர்களை நாடு கடத்துவதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
குடியேற்றவாசிகள் நாட்டின் ரத்தத்தில் கலந்த விஷம் என்கின்றது ட்ரம்ப் தரப்பு.
அமெரிக்க வரலாற்றில் இல்லாத வகையில் புலம்பெயர்நதோர் வெளியேற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களில் பெரும்பாலானோர் புகலிடம் கோரி கனடா செல்லக் கூடும் எனவும் கூறப்படுகின்றது.
இந்நிலையிலேயே, தனது எல்லையில் ரோந்து பணியை பலப்படுத்தியுள்ளதாக கனடா அறிவித்துள்ளது.
“உயர் எச்சரிக்கையுடன் இருக்கிறோம். எல்லா கண்களும் எல்லையை நோக்கி உள்ளன. என்ன நடக்கும் என்று காத்திருக்கிறோம். ட்ரம்பின் குடியேற்றக் கொள்கை பற்றி அனைவருக்கும் தெரியும்.
அமெரிக்காவிலிருந்து நாடுகடத்தப்பட்டால் கனடாவிற்கு புலம்பெயர்ந்தோர் வருவார்கள். அதைத் தடுப்பதே குறிக்கோள்.” என கனடா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விடயம் குறித்து விவாதிக்க அமைச்சர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள துணைப் பிரதமர் கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட், ஒரு திட்டத்தைக் கொண்டிருப்பதாக, விவரிக்காமல் சுட்டிக்காட்டினார்.
“எங்கள் எல்லைகள் பாதுகாப்பாக உள்ளன. “புலம்பெயர்ந்தோரை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது எங்களுக்குத் தெரியும்,” என்று துணைப் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, கமலா ஹரிஸை ஆதரித்த மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் கனடாவுக்குச் செல்வது குறித்து ஆலோசித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.