வாக்குறுதிகளை நிறைவேற்றாத அநுரவும் , விஜிதவும் நேரடி விவாதத்திற்கு வரத் தயாரா?
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேடைகளில் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றமுடியாத வாக்குறுதிகள். அநுர குமார, விஜித ஹேரத் என்னுடன் விவாதத்திற்கு வந்தால் அவற்றை நிறைவேற்ற முடியாது என்பதை நிரூபித்துக் காட்டுவேன்.அவர்கள் விவாதத்திற்கு வரத்தயாரா என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கம்பஹா மாவட்டத்தில் புதிய ஜனநாயக கூட்டணியில் கேஸ் சிலிண்டர் சின்னத்தில் நான்காம் இலக்கத்தில் போட்டியிடும் வேட்பாளருமான நிமல் லான்சா சவால் விடுத்தார்.
வத்தளை, பள்ளியவத்தையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் பேசும்போதே இவ்வாறு சவால் விடுத்த அவர் மேலும் கூறுகையில்,
மைத்திரிபால சிறிசேன வந்தவுடன் 100 நாள் வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்தினார். கோதாபய ராஜபக்ஷ வட் வரியை குறைத்தார். சாதாரணமாக ஜனாதிபதிகள் கொடுத்த வாக்குறுதிகளில் சிலதை நிறைவேற்றிவிட்டே அடுத்த தேர்தலுக்குச் செல்வது வழக்கம். அநுர அது ஒன்றையும் செய்யாமல் தேர்தலுக்குச் சென்றார்.
அநுர குமார மேடைகள் தோறும் செலவு அதிகரிப்பு தொடர்பாகவும் வருமானத்தை குறைப்பது சம்பந்தமாகவும் கூறினார். அவர் அரசை பொறுப்பேற்று ஐம்பது நாட்கள் ஆகிவிட்டன. ஆறு மாதம், ஒரு வருடமல்ல ஐந்து வருடங்கள் சென்றாலும் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது. அநுர குமார, விஜித ஹேரத் என்னுடன் எந்தவொரு விவாதத்திற்கு வந்தால் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாது என்பதை நிரூபித்துக் காட்டுவேன்.
அநுர குமார மக்கள் முன்னிலையில் செய்ய இருக்கும் பல வேலைகளைப் பற்றிக் கூறினார்.ஆனால் ஒன்றும் செய்ய முடியாது. சொன்ன ஒரு பொய்யைக் கூறுமாறு டில்வின் சில்வா கூறுகிறார்.ஒரு பொய் அல்ல ஆயிரம் பொய்களை கூறியுள்ளனர்.
இவர்கள் எதையும் விற்கமாட்டோம் என்றனர். ஆனால் திரிபோச நிறுவனத்தை விற்பதற்கு அறிவித்துள்ளார்கள். ரணில் சகலதையும் விற்பதாக கூறிய இவர்கள் திரிபோசவை விற்பதற்காக அமைச்சரவைக்கு சமர்ப்பித்துள்ளனர். இதனை விற்பது என்பது கர்ப்பிணித் தாய்மார்கள், குறைந்த வருமானமுள்ளவர்களின் குழந்தைகளுக்கு வழங்கும் போஷாக்கு உணவுக்கு அடியாகும். வறிய மக்களின், பெண்களின் ஆதரவுடன் ஆட்சிக்கு வந்ததை மறந்துள்ளனர்.
குடை, மரக்கறி, கஜு தொடர்பாக பேசுவதில் சமூகத்திற்குப் பயனில்லை. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவது எப்போது என்பதே மக்களின் கேள்வி.
பிரமுகர் பாதுகாப்பு தேவையில்லை என்றவர்களுக்கு இன்று பாதுகாப்பு தேவைப்பட்டுள்ளது. பொலிஸார் தெரிவித்ததற்காக பாதுகாப்பை பெறுவதாக பிரதமர் கூறுகிறார். அலைகளுக்கு வந்தவர்கள் அலைகளாலேயே அடிபட்டுச் செல்வார்கள். நிரந்தரம் இல்லை என்றார்.